என் இனிய சித்ரா,
நலம்
நலமறிய ஆவல். வருடா வருடம் உன் பிறந்தநாளின் போது சிறிது நேரம் ஒதுக்கி, நாம் கடந்து
வந்த காலங்களை எண்ணிப் பார்ப்பது வழக்கம். இன்றும் அப்படியே. நாம் சந்தித்து ஏறத்தாழ
13 ஆண்டுகள் ஆகின்றன. பெண்களின் நட்பு நீடித்திருக்காது என்பதற்கு மாறாக இன்று வரை
நாம் அதே நட்போடும் பரிவோடும் பழகி வருகிறோம். இதைப் பற்றிப் பேசுவது கூட இதுதான் முதல்
முறையாக இருக்கும். ஏன் என்றால், எல்லா விஷயங்களைப் பற்றியும் பேசும் நாம், நம் இருவரின்
நட்பு பற்றியோ, அது எதுவரை நிலைத்திருக்கும் என்பது பற்றியோ, எவ்வாறு தொடர்பிலேயே இருப்பது
என்பது பற்றியோ, ‘இந்த உலகத்துலேயே நீ தான் எனக்கு பெஸ்ஸ்ஸ்ட் ஃப்ரெண்ட்’ என்பது போலவோ
பேசியதில்லை. அதைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. நம் நட்பிற்கு முக்கியத்துவம்
கொடுக்கவில்லை என்பது இதன் அர்த்தமாகாது. மாறாக, புரிதல் உள்ள உறவுகளுக்குள் பிரிவேதுமில்லை
என்ற நம்பிக்கை தான் அதற்குக் காரணம். நம் நட்பை வழிநடத்திச் செல்வதும் அதுவே தான்.