வேற கலர் இருக்கா?
Aug 16, 2011
வணக்கம்!
இன்னைக்கு ஆகஸ்ட் 15, சுதந்தரதினம். சுதந்தரதினமும் அதுவுமா ப்ளாக்ல போஸ்ட் போடலன்னா நம்மள யாரும் ‘பிரபல பதிவர்’னு ஏத்துக்க மாட்டாங்க. அதோட சகபதிவர்களுக்கு வாழ்த்துகள் வேற சொல்லனும் இல்லையா. அதுக்காகத் தான் இந்தப் பதிவு.
யாரோட தொல்லையும் இல்லாம நிம்மதியா சுதந்தரமா தூங்கி எழுந்தது தான் இன்னைக்கு ஸ்பெஷல்! நண்பர்களுக்கு எல்லாம் வாழ்த்துகள் சொல்லி குறுந்தகவல்கள் அனுப்பிவிட்டு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே இணையத்திற்கு இணைப்பு கொடுத்தேன். நம்ம ப்ளாகர்ஸ் எல்லாம் சுதந்தரதின ஸ்பெஷலா வித்யாசமா கலக்கியிருப்பாங்களேனு தேடிப் பார்த்தேன். சிலர் ரொம்ப அழகா எழுதியிருந்தாங்க. நாட்டுக்காக நாம என்னல்லாம் செய்யனும்னு லிஸ்ட் போட்டிருந்தாங்க. 'படிக்க' ரொம்ப நல்லா இருந்தது :-)
அப்புறம் பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்கள் செங்கோட்டையில் வைத்து ஆற்றியிருந்த உரையைப் படித்தேன். ஏனோ மிகவும் சோகமாக இருந்தது. நிறைய விஷயங்கள் பற்றிப் பேசியிருந்தாலும் ‘ஊழல்’ பற்றிய பகுதிகள் தான் கவனத்தைத் தூண்டின. கடந்த சில காலமாக நம் நாட்டில் நலிந்து பெருகி வரும் ஊழலைப் பற்றியும் அதனை ஒழிப்பதற்கு வேண்டிய முயற்சிகள் பற்றியும் குறிப்பாகத் ‘தகவலறியும் உரிமைச் சட்டம்’ அதற்கு நன்றாக உதவுவதாகவும் பேசியிருந்தார். விழிப்பான பத்திரிகை துறையும் விழிப்புணர்வு மிக்க மக்களும் ஊழலை ஒழிப்பதற்க்கு மிகவும் உறுதுணையாக இருப்பார்கள் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் லோக்பால் பில் குறித்துப் பாராளுமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
பார்ப்போம்.. என்ன நடக்குதுன்னு. நமக்கு ஆயிரம் வேலை. ‘அந்தக் காரை வெச்சிருந்த சொப்பன சுந்தரியை இப்ப யார் வெச்சிருக்காங்க’னு ஆராய்ச்சி செய்யவே நமக்கு நேரம் பத்தல.. இதுல ஊழலாவது ஒன்னாவது மண்ணாவது!
ஊரில் இருந்த பொழுது வருடாவருடம் பாளை வ.உ.சி. மைதானத்தில் வைத்து அதிகாலை ஏழு மணி முதல் நடைபெரும் மாவட்ட ஆட்சித் தலைவர் செய்யும் கொடியேற்றத்தையும் அதன்பின் தொடரும் விருது வழங்கும் வைபவங்களையும் கலை நிகழ்ச்சிகளையும் சென்று கண்டுகளிப்பது வழக்கம். எங்கள் பக்கத்து விட்டு பாஸ்கர் அண்ணன் தான் வளர்க்கும் புறாக்களில் வென்மையான அழகான ஒரு புறாவைத் தேர்ந்தெடுத்து அதற்குக் காவி, வெள்ளை, பச்சை என வண்ணங்கள் தீட்டி உலர வைத்துக் கொண்டு வந்து நிகழ்ச்சியின் போது மைதானத்தில் வைத்து ஜிவ்வென்று பறக்க விடுவார். தேசியக் கொடி பறப்பது போலச் சுதந்தரமாக வானில் அது பறக்கையில் காண்பவரின் மனதும் ஆகாயத்தில் பறக்கும்! நிகழ்ச்சிகள் முடிந்து நாம் வீட்டிற்கு வந்து சேர்கையில் நமக்கு முன்பாக அந்தப் பறவை பாஸ்கர் அண்ணனின் வீட்டிற்கு வந்து இரையைக் கொத்தித் தின்று கொண்டு இருக்கும்!!
‘அட கன்றாவியே! சுதந்திரமா பறக்க விட்டா தப்பிச்சுப் போகாம மறுபடியும் இப்படி வந்து அடிமை பட்டுக் கிடக்கிறியே!’ எனத் திட்டிக் கொண்டிருப்பேன். ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற்ற இந்தியா சுதந்தர வானில் பறப்பதாக ஒப்பிட்டு பறக்கவிடப்பட்ட அந்தப் பறவையின் அச்செயலை, சுதந்தரம் பெற்றும் ஏதேதோ விஷயங்களுக்குத் தாமாகவே அடிமைபட்டுக் கிடக்கும் நம் இந்திய நாட்டோடு ஒப்பிட்டுப் பார்க்கும் நினைப்பு இன்றும் எழுவதை எவ்வளவு முயன்றும் தடுக்க முடிவதில்லை!!
ஆகஸ்ட் 15, 2008 அன்று நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம். விடுமுறை நாள் ஆதலால் வழக்கமாக வீட்டு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மந்தமான மதிய வேளை. திடீரென்று, அப்பொழுது ஓடிக்கொண்டிருந்த திருநெல்வேலி சூரியன் எஃப்.எம். ரேடியோவின் வால்யூமைக் கூட்டி வைத்துவிட்டு சமையல் கட்டிலிருந்த அம்மாவிடம் ஓடினேன். சில நொடிகளில் வீட்டிலிருந்த அனைவரும் வானொலியைக் கேட்கத் தொடங்கினர். மதியம் 2 மணிக்கு ஒலிபரப்பாகும் ‘மகளிர் மட்டும்’ நேரடி நிகழ்ச்சியில் பெண்மணி ஒருவர் எனது கவிதை ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தார்.
“உன்னைக் ‘கல்’ என்று
அழைத்தால்
ஏன் கவலை கொள்கிறாய்?
உளி கொண்டு செதுக்கு..
பின் ‘சிற்பம்’ என்பார்கள்
கோவிலில் வைத்து..”
என்கிற ரீதியில் கல்லூரியில் நடைபெற்ற சுதந்தரதின விழாவுக்காக எழுதி அரங்கேற்றப்பட்டுப் பின் கல்லூரி ஆண்டுமலரில் வெளியிடப்பட்ட கவிதை.
நான் எழுதியதையும் மதித்து எனக்கே தெரியாமல் ஒருவர் படித்துக் கொண்டிருந்ததை ரசித்திருந்தேன்.. :-) ம்ம்ம்..
அப்புறம், சுதந்தரதின ஸ்பெஷல் ஜோக் ஒன்று எஸ்.எம்.எஸ். ஆக வந்தது.
உனக்கு நியாபகம் இருக்கா,
அந்த நாள்?
ஆகஸ்ட் 15..
நம்ம ரெண்டு பேரும் தேசியக் கொடி வாங்க போனோம்..
கடைக்காரன் கொடி தந்த போது
நீ கேட்ட கேள்வி...
*
*
*
"வேற “கலர்” இருக்கா?"
சிரிக்காத..
வெக்கமாயில்ல?
அனைவருக்கும் இனிய சுதந்தரதின நல்வாழ்த்துகள்!
Labels:
அனுபவம்,
வாழ்த்துகள்
Posted by
சுபத்ரா
at
1:28 AM
25
comments
என்றும்
Aug 9, 2011
என்றைக்கும் அல்லாத
ஞாயிறு ஒன்றில்
வந்து விழுந்ததொரு
‘மிஸ்ட் கால்’.
மிஸ்ட்கால் செய்தவர்
முகம் அறியாதவராயினும்
‘மிஸ்’ பண்ண விரும்பாத
மாடர்ன் மங்கை..
மெசேஜிற்குத் தாவி
அழைத்து உரையாடி
இணையம் வழியே
இதயங்களை இணைத்து
கவிதைகள் இயக்கி
கருத்துகள் பேசிக்
கவலைகள் பகிர்ந்து
கனவுகளில் பறந்து
மற்றும் ஒரு
ஞாயிறு ஒன்றில்
சந்திப்பும் நடந்தேறி
அண்ணலும் நோக்கி
அவளும் நோக்க
செம்புலப் பெயல்நீர்
கலந்தது போல
அன்புடை நெஞ்சம்
இரண்டும் கலந்தன..
காதல் பிறந்தது!
நாட்கள் ஓடின..
சுபயோக சுபதினம்
ஒன்றில்..
இருவருக்கும் திருமணம்
தனித்தனியாக!
எக்காலம் ஆயினும்
காதலுக்குக்
கண் தானில்லை
சாதி இருக்கிறது..
சாதியைக் கட்டிக்கொண்டு
புரளும் பெற்றோர்களும்
இருக்கிறார்கள்!
மறக்கத் துடிக்கும்
இரு மனங்களையும்
சிதைந்து கிடக்கும்
இரு ‘சிம்’களையும் தவிர
சாட்சிகள் ஏது..
சாகடிக்கப்பட்ட
நவயுகக் காதலுக்கு?!
Labels:
கிறுக்கல்
Posted by
சுபத்ரா
at
11:55 PM
17
comments
என்னமோ ஏதோ..
Aug 1, 2011
அலுவலகத்தில் ஆணி.. சாரி.. (எல்லாரும் இப்படிச் சொல்லிச் சொல்லி எனக்கும் அப்படியே வருது) வேலை அதிகமாக இருப்பதால் ப்ளாக்ஸ்பாட் பக்கம் எட்டி கூட பார்க்க முடியவில்லை! அதிக வேலை செய்ய வேண்டியிருக்கையில் “சரி பரவால்ல. இதெல்லாம் முடிச்சிட்டு இன்னைக்குப் போய் ஜாலியா ஒரு ப்ளாக் போஸ்ட் போட்றலாம்”னு சமாதானம் சொல்லிக்கிட்டே எந்த வேலையா இருந்தாலும் முடிச்சிடுறேன் :-) ப்ளாக் வச்சிருந்தா இது ஒரு அட்வான்டேஜ் போல!
சாயந்தரம் 5.00 மணிக்கு மேலே வாடிக்கையாளர்களின் வருகை ஓரளவிற்குக் குறைந்த பின்னர் அலைபேசியில் இயர்போனைச் சொருகி நான் பாட்டுக்கு பாட்டு கேட்டுட்டே கணினியில் வேலையைச் செய்துகொண்டு இருப்பேன்.
“...நான் மாமரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும் பார்த்திருந்து மாமனுக்குக் காத்திருந்தேன் காணல.. அட சாயங்காலம் ஆன பின்னும் சந்த மூடிப் போன பின்னும் வீடு போயி சேர்ந்திடத்தான் தோனல....”
“மேடம் எப்பவும் தனியாவே பாட்டு கேட்குறாங்க... நமக்கும் கொஞ்சம் தமிழ்ப் பாட்டு வெச்சுக் காட்டலாம்ல”
“ஆமா.. அஞ்சு மணியாச்சுனா அவங்க பாட்டுக்கு ‘டிவோஷனல் சாங்ஸ்’ கேட்க ஆரம்பிச்சிட்டே வேலையை முடிச்சிருவாங்க”
இதையெல்லாம் கேட்டுக்கொண்டு ‘ஹிஹீ’னு ஒரு சிரிப்பு மட்டும் சிரித்து வைத்துவிட்டு அப்படியே வேலையைக் கன்டினியூ தான். இன்னும்மா இந்த உலகம் நம்மள நம்பிகிட்டு இருக்கு!
*~*~*~*~*~*
நான் குஜராத் வந்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகியும் அம்மாவை ஒருமுறை கூட இங்கு அழைத்து வந்ததில்லை. அம்மா திருப்பதியைத் தாண்டி வடப்பக்கம் வந்ததேயில்லை. ஒரு மாதம் இங்கு வந்து இருப்பதாகச் சொன்ன அம்மாவிற்கும் கூடவே வந்து அவரை விட்டுச் செல்லும் அப்பாவிற்கும் டிக்கெட்ஸ் எல்லாம் எடுத்து வைப்பதாக முடிவானது. முடிவான நொடியிலிருந்து இப்பொழுது வரை அம்மா என்னிடம் கேட்டுக் கொண்டே இருக்கும் ஒரே கேள்வி..
“சுபா, அங்க சின்ன வெங்காயமே கிடைக்காதா?”
“ஐயோ.. அதை எத்தன தடவ மா சொல்லுவேன். நீங்க இங்க வரவே வேண்டாம் போங்க! :-)
*~*~*~*~*~*
நீண்ட நாட்களாய் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் ஒன்று இது. நான் ஐந்தாம் வகுப்பு படிக்கையில் கட்டுரைப் போட்டி ஒன்றில் முதல் பரிசு வென்றதுக்காக எனக்கு ஒரு புத்தகம் பரிசாகத் தரப்பட்டது. அது ஒரு நாவல். வாழ்க்கையில் நான் படித்த முதல் நாவல். வாங்கிய அன்றே படிக்க ஆரம்பித்தேன். படித்து முடித்து விட்டுப் பிழியப் பிழிய அழுதுவிட்டு அந்தப் புத்தகத்தைத் தோழி ஒருத்திக்கு நினைவுப் பரிசாகக் கொடுத்துவிட்டேன். அது என்ன புத்தகம் என்றே அறிந்திருக்காத நிலையில் கதையை மட்டும் அடிக்கடி மனதில் நினைத்துக் கொள்வேன். இன்று கூகிளாண்டவரின் அருளால் அது என்ன புத்தகம் என்பதைக் கண்டுபிடித்து விட்டேன் :-) ஒரு ஐந்தாம் வகுப்பு மாணவிக்குப் பரிசாக அந்தப் புத்தகமா என ஆச்சர்யமாக இருந்தது!
நாவலின் பெயர் : மனோரஞ்சிதம் எழுதியவர் : காண்டேகர்
தேடிப் பிடித்து நியூபுக்லேண்ட்ஸ் தளத்தில் கிடைப்பதை அறிந்து கொண்டேன்.
குறிப்பு : மனோரஞ்சித மலரை வைத்துக் கொண்டு எந்த வாசனையை மனதில் நினைத்தாலும் அந்த வாசனை வீசுமாம் :-) மலர்களுக்கே உரிய வண்ணங்களில் இல்லாமல் மிகவும் வித்யாசமாக இலைகளைப் போலவே பச்சை நிறத்தில் இருக்கும் இந்த மனோரஞ்சித மலர்கள் அதன் நிறத்தால் அல்லாமல் மணத்தாலே பூச்சிகளைக் கவருகின்றனவாம்.
என்னமோ ஏதோ.. இந்த மனோரஞ்சிதம் நாவலைப் படித்தவர்கள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.
*~*~*~*~*~*
கடைசியாக ஒன்று.. ரசிக்க!
இலைகள் காய்ந்தால்
உயிர் உள்ள கொடியும்
பட்டுப் போகிறது.
உன் உடைகள் காய்ந்தால்
உயிரற்ற கொடியும்
உயிர் பெறுகிறது.
-தபூ சங்கர்
*~*~*~*~*~*
Labels:
அனுபவம்
Posted by
சுபத்ரா
at
10:57 PM
29
comments
Subscribe to:
Posts (Atom)