There should be no fear of death, for the death of the body is but a gentle passing to a much freer life – Helen Greaves

At his best, man is the noblest of all animals; separated from law and justice he is the worst – Aristotle

What's in a name? That which we call a rose by any other name would smell as sweet - Shakespeare

குழப்பம்

Mar 30, 2012




அப்படியே பைத்தியம் பிடித்துவிடும் போல இருக்கிறது. ஒருவேளை ஏற்கனவே பிடித்திருக்குமோ? ஆனால் யாரும் எதையும் சொல்லக் காணோமே! தலையைத் திருப்பிப் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த தரணி சாரைப் பார்த்தால் அவர் எப்போதும் போலப் புன்னகைத்துவிட்டுஎன்னஎன்பதுபோல் பார்த்தார்.
ஒன்றுமில்லைஎனத் தலையசைத்துவிட்டுத் திரும்பி வேலையைத் தொடர்ந்தேன்.

கொஞ்ச நாளாகவே இப்படித்தான் இருக்கிறது. அலுவலகத்தில் ஒரே குழப்பம். ஒரே இரைச்சல். ஒருமுறை அலுவலகத்திலிருந்தவாறே அம்மாவைத் தொலைபேசியில் அழைத்துப் பேசிக்கொண்டிருந்தபோது அவள் கேட்டது நினைவுக்கு வந்தது.

என்னடி பேபி இது பேங்க் தானா இல்ல எதுவும் சந்தகடையா? இந்தச் சத்தத்துக்குள்ள இருந்து வேலை பார்த்தா மைண்டுக்கு எதாது ஆகிறாதா?”

மறுபடியும் எனது கணினி முழுக்கத் தேடினாலும் நான் தேடிய கோப்பு கிடைக்கவே மாட்டேன் என்கிறது.

இந்த ட்ரைவில் இந்த ஃபோல்டரில் இந்தப் பெயரில் தான் வச்சிருந்தேன் சார்என ஆறாவது தடவையாக மேனேஜரிடம் சொன்னேன்.

என்னம்மா இது? இங்கதான் வெச்சேன்னா இப்ப எங்க போச்சு? சரி பரவாயில்ல. இன்னொரு தடவ நான் டைப் பண்ணிக்கிறேன், பத்து நிமிஷம் ஆகுமா?” கோபமாகத் தொடங்கி மாறிக்கொண்டிருந்த என் முகப்பாவனையைப் பார்த்தவர் சமாதானப்படுத்துவது போல் சொல்லிமுடித்தார்.

            எனக்குக் குழப்பம் அதிகமாகிவிட்டது. இந்த குளிரூட்டப்பட்ட அறையிலும் வேர்த்துவிட்ட முகத்தை அவ்வப்போது துப்பட்டாவால் துடைத்துக் கொண்டேயிருக்கிறேன். அந்தப் பக்கம் தரணி சார் மறுபடியும் எதற்காகவோ சத்தமாகச் சிரித்துக் கொண்டிருக்கிறார். என் வேலை தொடர்கிறது..

மேனேஜர் சார், இந்த க்யூவை ஆதரைஸ் செய்து சிஃப் நம்பர் சொல்றீங்களா?”

ம்ம்.. எழுதிக்கோ.. எயிட் ஒன் த்ரீ செவன் ... ...”

அவர் சொல்லியதைக் கடகடவென ஃபைலில் எழுதிவிட்டுக் கணினியில் செக் செய்து சரியா என்று பார்த்தால் நான் நினைத்ததைப் போலவே தவறாக இருந்தது! இவர் எப்பவுமே இப்படித்தான். ஒரு தடவை இரண்டு தடவையானால் பரவாயில்லை. எப்பொழுது கேட்டாலும் எந்த எண்ணைச் சொன்னாலும் பிழையாயிருக்கிறது. இது எப்படிச் சாத்தியம்? நேற்று கிட்டதட்ட ஒரு பத்து வாடிக்கையாளர்களின் சிஃப் எண்களை உருவாக்கியிருப்பேன். அவற்றுள் நான்கு எண்களைத் தவறாகவே சொன்னார். இரண்டை நான் நேரடியாகத் திரையைப் பார்த்துச் சரியாகக் குறித்துக்கொண்டேன். மீதமிருந்த நான்கைந்து சிஃப் எண்களையும் பதினொன்று இலக்கங்களாக இல்லாமல் பத்து இலக்க எண்களாகவே சொல்லியிருந்தார். வாய்ப்பேயில்லை. எங்கோ தப்பு நடக்கிறது. அது எங்கே?

ஒருவேளை என் செவித்திறனில் கோளாறோ? அவர் கூறுவதை நான் சரியாகக் கேட்டுக் கொள்வது இல்லையோ? இல்லை காது ஒழுங்காகக் கேட்டாலும் மனது வேறு ஒரு எண்ணை உள்வாங்கிக்கொள்கிறதோ? இல்லையென்றால் காதும் கேட்டு மனதும் சரியாகப் புரிந்துகொண்டு எழுதுகையில் கை வேறு ஒரு எண்ணைக் குறித்துவிடுகிறதோ? என்ன தான் நடக்கிறது..! எனக்குத் தலையே வெடித்துவிடும் போல இருக்கிறது.

மறுபடியும் வழக்கம்போல் கஸ்டமரின் பெயரை வைத்தும் பான் நம்பர் போன்ற இன்னும் சில அடையாளங்களை வைத்தும் கணினியில் தேடிப்பார்த்தபோது சரியான எண் கிடைத்தது. ‘மூன்றுஎன்ற எண்ணைஎட்டுஎனச் சொல்லியிருக்கிறார். ஒரு வேளை அவருக்குப் பார்வைக் கோளாறாக இருக்குமோ?

சா...ர்

என்னம்மா?”

உங்களுக்குக் கண்ணுல பவர் இருக்கா என்ன?”

இல்லையே.. இதுநாள் வரை அப்படி ஒன்னும் இல்ல. ஏன் கேக்குற?”

கேட்டிருக்கவே கூடாதோ என்று தோன்றியது. “ஆமா, எனக்கு லேசா பவர் இருக்கு.. கண்ணாடி போடனும்இப்படி ஏதாவது சொல்லுவாரோ என எதிர்பார்த்தது நடக்கவில்லை. எனக்கு மறுபடியும் மண்டை காய்கிறது.

சும்மாதான் சார்.. எனக்குப் பவர் இருக்கு.. கான்டாக்ட் லென்ஸ் வாங்கப் போறேன். அதான் உங்ககிட்ட கேக்கலாமேனு

அப்படியா? சரி சரி.. என்னோட எம்.ஆர்.. ஸ்கேன் ரிப்போர்ட் வந்திருச்சு பார்க்குறியா?”

நாம எம்.பி.பி.எஸ். படிக்காத குறை ஒன்னுதான்என மனதில் தோன்ற ரிப்போர்ட்டை வாங்கிப் படித்தால் லெஃப்ட் தலாமஸ், செரிபரல் இன்ஃபார்க்ட், லெசன் அது இது என்று என்னவெல்லாமோ எழுதப்பட்டிருக்கிறது. உடனே அறிந்துகொள்ளும் அவசரத்தில் அந்த ரிப்போர்ட்டைக் கையில் எடுத்துக்கொண்டு டாக்டர் மாமாவிடம் பேசப்போவதாக மேனஜரிடம் சொல்லிக்கொண்டு ஓய்வறைக்குப் போனேன். வேலையாயிருந்த மாமாவைத் தொலைபேசியில் பிடித்து, சிறிது நேரத்தை ஒதுக்கச்சொல்லிக்கேட்டுப் படபடவெனப் படித்துக் காட்டினேன்.

“...அப்படினா அவரது மூளையோட லெஃப்ட் தலாமஸ் பகுதியில சின்ன சின்ன கட்டிகள் மாதிரி இருக்கலாம். அந்தக் கட்டிகள் காற்றுப் பாக்கெட்டுகளாகவோ நீர்க்கட்டிகளாகவோ கூட இருக்கலாம். அது எவ்வளவு இருக்கு எங்க இருக்குனு ரிப்போர்ட் பார்த்தா தான் சொல்லமுடியும் பேபி..”

சரி மாமா.. திடீர்னு ஒரு நாள் அவர் ஆபீசுக்கு வரல. போன் பண்ணிக்கேட்டப்போ அவரை ஆசுபத்திரியில சேர்த்திருக்கறதாச் சொன்னாங்க. என்னனு கேட்டா பிபி, சுகர் எல்லாம் கன்னாபின்னானு ஏறியிருக்குனு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்களாம். சி.டி. ஸ்கேன் எல்லாம் எடுத்துப் பார்த்தாங்க. ட்ரீட்மெண்ட்டுக்குப் பிறகு கொஞ்ச நாள் ரெஸ்ட்ல இருந்தார். அப்புறம் ஒரு ஒரு வாரம் கழிச்சு இன்னைக்கு மத்யானம் போய் இந்த எம்.ஆர்.. ஸ்கேன் எடுத்துட்டு வந்தார். சாயங்காலம் டாக்டர்ட்ட போனுமாம்.. ஒன்னும் பிரச்சனை இல்லல்ல?”

நார்மலாத் தான் இருக்கும்

சொல்ல மறந்துட்டேன் மாமா.. அவருக்கு வலது கை மணிக்கட்டுக்குக் கீழ வேலை செய்யல. கால்பாதம் கூட மரத்துப் போனமாரி இருக்காம். வண்டி ஓட்டுறது இல்ல.. ஆட்டோ ரிக்ஷால தான் ஆபீசுக்கு வந்துட்டுப் போறார்

எத்தனை வயசாகுது?”

இன்னும் ரெண்டு வருஷத்துல ரிட்டயர் ஆகப்போறார் மாமா

ரொம்ப ஹைப்பராவே இருப்பாரா?”

ஆமா..”

தான் சொல்றதுதான் பெருசுங்கற மாதிரி பேசுவாரா?

ம்

கஸ்டமர்ஸ்கிட்ட சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் கத்துவாரா?”

ம்

ரொம்ப ரூல்ஸ் பேசுவாரா?”

ம்

என் கெஸ் கரெக்ட்னா, ரிப்போர்ட்ல இருக்குறத வெச்சுப் பார்க்கும்போது அந்த கட்டிகள் இவரோட நியூரான்ஸ லைட்டா அரிச்சிட்டு இருக்கிறதாத் தோனுது. ப்ரெயின் ரொம்ப சென்சிட்டிவ் பார்ட்.. அதுல ஒரு சின்ன டிஸ்டர்பன்ஸ் இருந்தா கூட பெருசா தன்னோட விளைவுகளைக் காட்டும்.. அது என்ன என்னனு அவர் கூட இருந்து பேசிப் பழகிப்பார்த்தா தான் கண்டுபிடிக்கலாம். வேற எதாவது அப்னார்மலிடீஸ் தெரியுதா?”

“...”

பேபி..”
           
“...”

ஹலோ!”

“...”

அமைதியாக இணைப்பைத் துண்டித்துவிட்டு அலுவக அறைக்குள் வந்தேன். சீரியஸாக வேலை செய்துகொண்டிருந்த தரணி சாரிடம் கொஞ்சம் வம்பு அளந்துவிட்டு அனிதா மேடத்தின் ஸ்னாக்ஸ் டப்பாவில் கைவிட்டு கொஞ்சம் உப்புக்கடலையை எடுத்துக் கொறித்தவாறே இருக்கைக்கு வந்துவிட்டேன். ஆர்வம் கொப்பளிக்கும் முகத்தை வைத்தவாறு என்னை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் மேனேஜர்.

ரிப்போர்ட்ல என்னவாம்?”

எந்த ரிப்போர்ட் சார்? இதுவா? ஒன்னும் பிரச்சனையில்ல எல்லாமே நார்மல் தான்னு சொன்னார்

புன்னகைத்தவாறே இருக்கையில் அமர்ந்த நான் ரிப்போர்ட்டை அவரிடம் கொடுத்துவிட்டு வேலையைத் தொடங்கினேன். குழப்ப ரேகைகள் முற்றிலுமாக விலகி அப்போது கவலை ரேகைகள் என் மனதை அரிக்கத் தொடங்கியிருந்தன.   *

2 comments:

Erode Nagaraj... said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

எனக்கு பைத்தியம் பிடிக்கிறது, உன்னைப் பிடித்திருப்பதைச் சொன்னேன் என்று தோழியை வாரியது நினைவுக்கு வந்தது. கவனிக்க: கலைக்கவில்லை; வாரினேன். :)

ஸ்கேன்-ஆ ஸ்கான்-ஆ?

பொதுவாக அலுவலகங்கள் தங்கள் ஊழியர்கள் உடல்நிலை என்ன என்பதை நிலை கடந்து (மேல் நிலை உழியர், இடை நிலை, கேழ் நிலை) சோதித்தல் அவசியம், தங்கள் சுய இலாபங்களுக்காகவேனும்.

அதன் அடிப்படியில், பணி மாற்றம், சில நாட்கள் ஓய்வு, இறுக்க நிலை தளர்த்தல் போன்றவை செய்யப்படுதல் நலம்.

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

என்னாங்க கடை காத்தாடிருச்சே ?

எதாவது கவிதை போட்டுருவீங்களோன்னு பயந்துகினு நானும் ரொம்ப நாள் வரலை பாத்துகிடுங்க.

கவிதைத் தளத்தில் நீங்க எழுதற கவிதைகளை பார்க்கும் போது, ஜெண்டில் மேன் படத்தில் சொக்கலிங்க பாகவதர் சொல்ற வசனம் தான் ஞாபகம் வந்திட்டுதுன்னா பார்த்துகிடுங்க. ( அந்த வசனம் “சொல்லத் தெரியாமா அப்பளத்தில எழுதிருக்கு அசடு!!)

இந்தக் கதை எனக்கு வெளங்காட்டியும் எழுதற நடை புடிச்சிருந்திச்சி. கட்டுரை எழுதுங்க... அந்தத் திறமை இருக்கு ஆனா கவிதை பாவம் உட்டுடுங்கோ !!!!