கமலாவும் நானும்
Aug 23, 2012
வணக்கம்! ரொம்ப நாள் கழிச்சு என்னோட பதிவு இட்லிவடைல வந்திருக்கு. உங்க எல்லாருக்கும் “திரு.பி.எஸ்.ரங்கநாதன் aka கடுகு aka அகஸ்தியன்” அவர்களை நல்லா தெரிஞ்சிருக்கும். அவரோட “தாளிப்பு” வலைப்பூல வந்த கமலா சீரீஸ் கட்டுரைகளோட, அவரோட பல முக்கியமான சொந்த அனுபவங்களை எல்லாம் சேர்த்து வந்த புத்தகம் தான் “கமலாவும் நானும்”. நந்தினி பதிப்பகம். அவரோட வலைத்தளம் கூட ஒரு treasure house மாரி இருக்கும். அவர்கள் எழுதுன “கமலாவும் நானும்” புத்தகத்தைப் பத்தி ரசிச்சு ஒரு பதிவு எழுதிருக்கேன்.
Labels:
இட்லிவடை,
புத்தக விமர்சனம்
Posted by
சுபத்ரா
at
2:47 PM
2
comments
பறக்கவே என்னை அழைக்கிறாய்!
Aug 19, 2012
எனக்கு என் அம்மாவை ரொம்பப் பிடிக்கும். அவங்களைப்
பிடிக்க ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே எங்க ஆச்சியை எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.
எங்க பாட்டிக்கு எங்க அம்மா ஒரே பொண்ணு. எங்க அம்மாவுக்கு நான் ஒரே பொண்ணு :-) அதனால
என் மேல பயங்கர பாசம் எங்க பாட்டிக்கு. நான் ஏதாவது சேட்டை பண்ணிட்டு அம்மாகிட்ட அடிவாங்கி
அழுதபோதெல்லாம் எங்க பாட்டி என் அம்மா மேல கோபப்பட்டு ‘உண்ணாவிரதம்’ இருப்பாங்கன்னா
பார்த்துக்கோங்க! அதனாலயே நான் எப்பவும் அவங்க கூடவே அலைவேன். அவங்க எனக்கு இன்ட்ரோ
கொடுத்து வெச்சதுதான் “அக்கக்கோ குருவி”. பெரிய ஆலமரத்துல எங்கேயோ ஒரு கிளையில உக்கார்ந்து
“அக்கோ... அக்கோ”னு கூவிக்கிட்டே இருக்கும். என் தம்பி வேற என்னை அக்கானு தான் கூப்பிடுவானா..
ஸோ அது என்னைத் தான் கூப்பிடுதோனு எனக்குப் பயங்கர ஆவல். தினமும் அதுக்காகக் காத்திருந்து
காத்திருந்து, எங்க அம்மாகிட்டேயும் ஆச்சிகிட்டேயும் கூட கேட்க ஆரம்பிச்சேன் அக்கக்கோ
குருவி எங்கேனு. சமீபத்துல ஒருநாள் அதே குரலை இங்கே வீட்டருகில் கேட்டதும் ஒரு கணம் டைம் மெஷினில்
ஏறி இறங்கிவிட்டேன்.
விடுமுறை விட்டதும் ஒவ்வொரு வருடக் கோவில் கொடைக்கும்
அப்பாவின் ஊரான மணியாச்சிக்கு ரயிலில் செல்வது வழக்கம். அவ்வாறு சின்ன வயதிலேயே ரயில்
எனக்கு அறிமுகமாகியிருந்தது. ரயிலில் பயணிப்பதைவிடவும் மிகவும் சுவாரசியமான விஷயம்
என்ன தெரியுமா? வழியில் தென்படும் மயில்கள். நான் எப்போதும் அதைப் பற்றியே கேட்டுக்கொண்டிருந்ததால் தொல்லை பண்ணாமல் இருப்பதற்காக ஜன்னல் ஓரத்தில் உட்காரவைத்துவிட்டு ‘மயில் தெரியுதா
பார்’ எனச் சொல்லிவிடுவார்கள்.
நான் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த
நேரம். முழுவாண்டு பப்ளிக் தேர்வு. கணக்குப் பரிட்சைக்காக அதிகாலையில் எழுந்து படித்துக்
கொண்டிருந்தேன். அது எனக்கு மிகவும் பிடித்த அறை. பெரிய ஜன்னலை ஒட்டிப் போடப்பட்ட மேஜையும்
வயர் நாற்காலியும். ஜன்னலுக்கு வெளியே காம்பவுண்டு சுவருக்கு மிக அருகில் இளமையான ஒரு
வேப்பமரம். நன்றாகப் படர்ந்து குளுகுளுவென காற்றை வீசிக்கொண்டிருக்கும். பலமுறை பலவிதமான
பறவைகள் அந்த மரத்தில் வந்து அமர்வதைக் கண்டிருக்கிறேன். சில நாட்களில் ஒரு சிட்டுக்குருவி
ஜோடியொன்று அந்த அறையில் வைக்கப்படிருந்த பீரோவிற்கும் லாஃப்ட்டிற்கும் இடையே கூடு
கட்டத் தொடங்கியது. எவ்வளவு துரத்திவிட்டாலும் பலனில்லை. அதற்குமேல் ஒன்றும் செய்ய
மனமில்லாமல் விட்டுவிட்டோம். இன்னும் சில நாட்களில் அது முட்டையிட்டுக் குஞ்சும் பொரித்துவிட்டது.
கீச் கீச் என வீடு முழுதும் குட்டீஸ் சத்தம். என் தம்பியின் உதவியுடன் அவ்வப்போது அவற்றில்
அகப்பட்டதைக் கையில் எடுத்துப் படபடவென அடிக்கும் அதன் இதயத்துடிப்பை ரசிக்கையில் அதைவிட
வேகமாக நம் இதயம் துடிக்கத் தொடங்கும். கையிலேயே உச்சா போய்விடுமோ எனப் பயந்து அதை
மறுபடியும் கூட்டிற்குள் வைத்துவிடுவோம் ;-) ஆ! அந்தக் கூடு தான் எத்தனை அழகு!! எங்கிருந்து
தான் அந்தக் குப்பைகளை அள்ளிக்கொண்டு வந்து அவற்றையும் அவ்வளவு அழகாகப் பயன்படுத்திக்
கூடு கட்டுமோ என மிகவும் ஆச்சர்யமாக இருக்கும்! அம்மா-அப்பா குருவிகள் வெளியே பறந்ததுமே
எங்கள் வேலை மேலேயிருக்கும் குஞ்சுகளைப் பார்ப்பதும் என்னென்ன குப்பைகள் எங்கிருந்து
எடுக்கப்பட்டன என்ற கணக்கெடுப்பை நடத்துவதும்தான். சும்மா சும்மா “ஆ ஆ” என்று பசியில்
வாயைத் திறந்து திறந்து மூடியவாறே இருக்கும் அந்தக் குஞ்சுகளுக்கு உடலில் முடியே முளைத்திருக்காது!
இந்நிலையில் அந்த அறையில் காற்றாடி போடுவது மிகவும்
சிரமமாகிவிட்டது. ஒரு அதிகாலை வேளையில் என்னைத் தவிர வேறு யாரும் கண்விழித்திருக்க
மாட்டார்கள் என்னும் சோகத்துடன் படித்துக் கொண்டிருந்தவளின் கண்முன் திடீரென எங்கிருந்தோ
பறந்து வந்து ஜன்னல் கம்பியில் நின்றது அந்தத் தாய்க்குருவி. எனக்கு முன்னரே எழுந்து இரைதேட பறந்துவிட்டது
போல. ஜன்னல் வழியே பறந்து ட்யூப்லைட்டில் வந்து அமர்ந்துகொண்டது. அப்போதுதான் திடீரென
எனக்குக் காற்றாடியின் நினைவு வந்தது! ஆனால் அசைய முடியாத நிலை. ஸ்விட்சை அணைப்பதற்காக
எழுந்தால் அது பயந்து பறந்து காற்றாடியில் அடிபட்டுவிடும். ஆனாலும் என் அசைவைக் கண்ட
அது அறையில் எங்கெங்கோ பறக்க, வழியறியாமல் பயத்தில் கண்களை மூடிக்கொண்ட நான் “சொத்” என்ற சத்தம் கேட்டு விழித்துப்
பார்த்தேன். என் கண்முன்னே ஒரு அடி தூரத்தில் மேஜையின் மேல் அந்தக் குருவி துடிதுடித்து இறந்து போனது
:’( இன்று நினைத்தாலும் அதைத் தடுத்திருக்காத எனது இயலாமையை எண்ணி மிகவும் மனம் வருந்துகிறேன்...
அடுத்ததாக இங்கே எனது அப்பார்ட்மெண்ட்டில் தினமும்
காலையில் என்னை உறக்கத்திலிருந்து எழுப்பி விடும் புறாக்கள் :-) ஜன்னலைத் திறந்துவைத்துக்
கொண்டு தூங்கிக்கொண்டிருக்கும் நான் அதிகாலையின் அரைத்தூக்கத்தில் எழுந்து சென்று காற்றாடியை
அணைத்துவிடுவேன். அப்புறம் எங்கே தூங்குவது? அவ்வளவுதான். ஃப்ரெஷ் பண்ணிவிட்டு மறுபடியும்
வந்து பார்த்தால் ஒரு ஜோடிப் புறாக்கள் உள்ளே விளையாடிக் கொண்டிருக்கும். செல்லமாக
வெளியே துரத்தி(?) ஜன்னலை மூடிவிட்டுத் தேனீர் போடுவதற்காக சமையலறைக்குள் வந்தால்,
அங்கேயும் அந்தப் புறாக்கள் பால்கனியில் அமர்ந்து விளையாட்டைத் தொடர்ந்து கொண்டிருக்கும்.
பல நாட்கள் வீட்டுக்கு உள்ளே வந்து எல்லா அறைகளையும் சுற்றிச் சுற்றிப் பார்க்கும்.
எனது புத்தகங்களைப் புரட்டிப் போட்டுவிடும். உடைகள் மேல் அசுத்தம் செய்துவிடும். சமயத்தில்
பீங்கான் பாத்திரங்களை கீழே தள்ளி உடைத்தும் விடும் :-)
ஒரு நாள் நள்ளிரவு நான் தனியே உறங்கிக்கொண்டிருந்த
நேரம். பயங்கரமான அலறல் சத்தங்கள் பல திசைகளிலிருந்து. ஜன்னல்கள் எல்லாம் வேறு திறந்திருந்தன.
ஏதோ ஒரு பறவை என்று யூகித்திருந்தும் எதுவென்று சரியாகக் கணிக்க முடியவில்லை. ஆந்தைகளாக
இருக்குமோ என நினைத்தேன். அடுத்த சில தினங்களில் ஒரு மழைநாளில் அலுவலகத்தில் இருந்தபோது
அதே சத்தம். உடனே பக்கத்தில் இருந்தவர்களிடம் கேட்க அவர்கள் “மோர்” என்றார்கள். அப்படியென்றால்
என்னவென்று அவசரமாகக் கேட்டேன். “Peacock” என்று சொன்னார்கள். அத்தனை அழகு மயில்களா
இப்படிக் கத்துகின்றன என ஒரு கணம் அதிசயப்பட்டுப் போனேன்.
இரு தினங்களுக்கு முன் மாலை 7 மணி அளவில் அலுவலத்தை
விட்டு வெளியே வந்து கொண்டிருந்தேன். மழை அப்போதுதான் வெறித்திருந்தது. அந்தச் சூழலை
அனுபவித்தவாறே வெளியே வந்தவள், திடீரென வானத்தில் ஒரு பெரிய கரிய உருவம் நீண்ட வால்
போன்ற ஒன்றுடன் ‘ஸ்வைங்ங்’ எனப் பறந்து அலுவலகத்தின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த அந்தப்
பல அடி உயர விளம்பர பேனரின் உச்சியில் போய் அமர்ந்தது. பயந்துவிட்டிருந்த நான் கண்ணைக்
கசக்கிவிட்டு மீண்டும் மேலே பார்த்தேன். மூன்று மயில்கள் ஏற்கனவே மேலே அமர்ந்துகொண்டு
மிகவும் சத்தமாக அகவிக்கொண்டிருந்தன! 24 மணிநேரமும் போக்குவரத்து நெரிலாகவே இருக்கும்
அந்தச் சாலையோரத்தில் எவ்வளவு சாதாரணமாகப் புலங்குகின்றன பாருங்கள் இந்த மயில்கள்!
மொட்டை மாடியில் காயப்போட்ட அம்மாவின் சேலையில்
ஒட்டிக்கொண்டிருந்த வவ்வால், ஆலமரத்துக் கிளையில் அசையாமல் அமர்ந்திருந்த ஆந்தை, எங்கிருந்தோ
பறந்துவந்து வீட்டில் தஞ்சம் அடைந்த பார்வையற்ற மைனா, பண்டிகை தினங்களில் வந்து உணவு
உண்டுபோகும் காகங்கள், வீடுகளில் வளரும் கோழிக்குஞ்சுகள், நம்மைப் போலவே பேசும் திறன்கொண்ட
கிளிகள், ஒற்றைக்காலில் மீன்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் நாரைகள், கூட்டமாக
வானில் பறந்து விரல் நகங்களில் வெள்ளை போட்டுச்செல்லும் கொக்குகள், தர்கா முற்றத்தில்
நிறைந்திருக்கும் சாம்பல்-வெள்ளைப் புறாக்கள், வியாழக்கிழமைகளில் வானில் தென்படும்
கருடன்............ என எங்கும் எப்போதும் பறவைகளைப் பார்த்துக்கொண்டிருக்கும் நான்
ஓரிரவின் ஆழ் உறக்கத்தில் கடலின் மேற்பரப்பில் இறக்கை விரித்துப் பறக்கக் கற்றுக்கொண்டதில்
இருந்துதான் இன்னும் அதிகமான ஆச்சர்யத்துடன் அவற்றைப் பார்க்கத் தொடங்கியிருக்கிறேன்...
Labels:
குட்டீஸ்
Posted by
சுபத்ரா
at
3:53 AM
19
comments
ஐ.ஏ.எஸ். தமிழ்ப் பாடம்
Aug 3, 2012
ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழை ஒரு பாடமாக (optional subject) எடுப்பவர்களுக்கு என்ன பாடங்கள் (syllabus) கொடுத்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா? பொதுவாக இந்தப் பாடங்கள் இணையத்தில் ஆங்கிலத்தில் தான் அதிகம் கிடைக்கின்றன. தமிழில் தேடுபவர்களுக்காக இது :-)
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் – இதில் வரும் பாடங்களில் நல்ல materials கிடைத்தால் சிரமம் பாராமல் எனக்கு subadhra23@gmail.com மின்னஞ்சல் அனுப்புங்கள்.. ப்ளீஸ்.
தமிழ் முதல் தாள்
UPSC Tamil optional syllabus
Tamil I paper
பிரிவு-A
பகுதி : 1 தமிழ் மொழி வரலாறு
முதன்மையான இந்திய மொழிக் குடும்பங்கள் - இந்திய மொழிகளுக்கிடையே பொது நிலையிலும் சிறப்பாக திராவிட மொழிகளிடையிலும் தமிழ்மொழி பெருமிடம் - திராவிட மொழிகளின் வகைப்பாடும் அவை பரவியுள்ள தன்மையும்.
சங்ககாலத் தமிழ் - இடைக்காலத் தமிழ் – பல்லவர் காலத் தமிழ் மொழி அமைப்பு மட்டும் - தமிழில் பெயர், வினை, பெயரடை, வினையடை, கால இடைநிலைகள் மற்றும் வேற்றுமை உருபுகள் ஆகியவற்றின் போக்கு பற்றிய வரலாற்று நோக்கிலான ஆய்வு.
பிறமொழிகளிலிருந்து தமிழ் கடன் பெற்ற சொற்கள், தமிழில் வழங்கும் சமூக மற்றும் வட்டாரக் கிளை மொழிகள் - பேச்சுத் தமிழுக்கும் இலக்கியத் தமிழுக்குமான வேறுபாடு.
பகுதி : 2 தமிழிலக்கிய வரலாறு
தொல்காபியம் - சங்க இலக்கியம் - அகம், புறம் எனும் பாகுபாடு - சங்க இலக்கியத்தின் சமயப் பொதுமைப் போக்கு - அற இலக்கியங்களின் வளர்ச்சி - சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை.
பகுதி : 3
பக்தி இலக்கியம் (ஆழ்வார்களும் நாயன்மார்களும்) - ஆழ்வார் பாடல்களில் நாயக நாயகி பாவம் - சிற்றிலக்கிய வடிவங்கள் : தூது, உலா, பரணி, குறவஞ்சி.
இக்கால் தமிழ் இலக்கியங்களின் வளர்ச்சிக்கான சமூகக் காரணிகள் : நாவல், சிறுகதை, புதுக்கவிதை - புதுமைப் படைப்புகளின் ஆக்கத்தில் வேறுபட்ட அரசியல் கருத்தாக்கங்களின் தாக்கம்.
பிரிவு - B
பகுதி : 1 தமிழியலின் அண்மைக்கால போக்குகள் :
திறனாய்வு அணுகுமுறைகள் : சமூகவியல், உளவியல், வரலாற்றியல் மற்றும் அறிவியல் - திறனாய்வின் பயன்பாடு - பல்வகை இலக்கிய உத்திகள் : உள்ளுறை, இறைச்சி, தொன்மம், ஒட்டுருவகம், அங்கதம், மெய்ப்பாடு, படிமம், குறியீடு, இருண்மை - ஒப்பிலக்கிய கருத்தாக்கம் - ஒப்பிலக்கிய கொள்கை.
பகுதி : 2
தமிழில் நாட்டுப்புற இலக்கியங்கள் : கதைப்பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள் - சமூகவியல் பார்வையில் நாட்டார் வழக்காற்றியல் - மொழிபெயர்ப்பின் பயன்கள் – மொழி பெயர்க்கப்பட்டுள்ள தமிழ் இலக்கியங்கள் - தமிழ் இதழியல் வளர்ச்சி.
பகுதி : 3 தமிழர்களின் பண்பாட்டு வரலாறு
காதல், போர் பற்றிய கருத்தாக்கம் -அறக்கோட்பாடுகள் – தொல்தமிழர் தம் போரியல் அறநெறி முறைகள் - பழக்க வழக்கங்கள் - நம்பிக்கைகள், சடங்குகள், ஐந்திணைகள் காட்டும் வழிபாட்டு முறைகள் - சங்க மருவிய கால இலக்கியங்களில் புலப்படும் பண்பாட்டு மாற்றங்கள் - இடைக்காலத்தில் ஏற்பட்ட பண்பாட்டுக் கலப்புகள் (சமணம் மற்றும் பௌத்தம்). காலந்தோறும் கலை மற்றும் கட்டட நுட்பங்களில் ஏற்பட்ட வளர்ச்சி (பல்லவர், பிற்கால சோழர்கள், நாயக்கர் காலம்). பல்வேறு அரசியல், சமூக, சமய பண்பாட்டு இயக்கங்கள் தமிழ்ச் சமூகத்தின் மீது ஏற்படுத்திய தாக்கங்கள் - இக்கால தமிழ்ச் சமூகத்தின் பண்பாடு மாற்றத்தில் வெகுசன ஊடகங்கள் பெறும் பங்கு.
தமிழ் இரண்டாம் தாள்
UPSC Tamil optional syllabus
Paper-II
பிரிவு - A
பகுதி 1 : முற்கால இலக்கியம்
1) குறுந்தொகை (பாடல்கள் :1-25)
2) புறநானூறு (பாடல்கள் :182-200)
3) திருக்குறள் பொருட்பால் : அரசியலும், அமைச்சியலும் (இறைமாச்சியிலிருந்து அவையஞ்சாமை வரை)
பகுதி:2 காப்பிய காலம்
1) சிலப்பதிகாரம் : மதுரை காண்டம்
2) கம்பராமயணம் : கும்பகர்ண வதைப் படலம்
பகுதி 3: பக்தி இலக்கியம்
1) திருவாசகம் : நீத்தல் விண்ணப்பம்
2) திருப்பாவை முழுவதும்
பிரிவு : B
நவீன இலக்கியம்
பகுதி :1 கவிதை
1) பாரதியார் : கண்ணன்பாட்டு
2) பாரதிதாசன் : குடும்பவிளக்கு
3) நா. காமராசன் : கறுப்பு மலர்கள்
உரைநடை
1) மு. வரதராசன் : அறமும் அரசியலும்
2) சி. என். அண்ணாதுரை : ஏ! தாழ்ந்த தமிழகமே.
பகுதி :2 புதினம், சிறுகதை மற்றும் நாடகம்
1) அகிலன் : சித்திரப்பாவை
2) ஜெயகாந்தன் : குருபீடம்
3) சோ : யாருக்கும் வெட்கமில்லை
பகுதி 3: நாட்டுபுற இலக்கியங்கள்
1) முத்துப்பட்டன் கதை - பதிப்பித்தவர் ந. வானமாமலை (மதுரை காமராஜர் பல்கலை வெளியீடு)
2) மலையருவி - பதிப்பித்தவர் கி. வா. ஜெகநாதன் (தஞ்சை சரஸ்வதி மஹால் வெளியீடு)
Labels:
IAS
Posted by
சுபத்ரா
at
12:37 AM
14
comments
Subscribe to:
Posts (Atom)