நான் நான்காவது படித்துக்கொண்டிருந்த சமயம் நாங்கள் வசித்தது ஒரு கிராமம். அப்போது எனக்கு ஆறுமுகவடிவு என்று ஒரு தோழி இருந்தாள். ஊரில் ஐந்தாறு ஆறுமுகவடிவுகள் இருந்ததாலும் அவளுக்கு ப்ரவுன் நிறக் கண்கள் இருந்த காரணத்தாலும் ஊருக்குள் எல்லோரும் அவளைப் பூனை என்றே அழைத்தனர். என்னைவிட ஓரிரு வருடங்கள் மூத்தவள்.
நாங்கள் இருவரும் சேர்ந்து ஊருக்குள் பல adventures நிகழ்த்தியிருக்கிறோம். அப்போது தான் வற்றத் தொடங்கியிருந்த ஆழமான வாய்க்காலை நீந்தியே கடந்து அந்தப்புறம் சென்று வயல்களுக்குள் கிணற்றோடு சேர்ந்திருந்த மோட்டாரில் குளித்து முடித்து இன்னும் கொஞ்ச தூரம் நடந்தே சென்று இலந்தைப்பழம் பறித்துச் சட்டையில் சுருட்டிக்கொண்டு அதே ஈரத்துணியுடன் வயல் வரப்பில் அலைந்து வெண்டைக்காயைப் பறித்துச் சாப்பிட்டு அப்படியே திட்டுக்கு வந்து புளியங்காய் பொறுக்கித் தின்று உடைகள் காயும்போது தான் வீட்டு ஞாபகம் வரும். அம்மா வீட்டு வாசலில் நின்றுகொண்டு ‘ஏ.. சுபத்துரா’ என்று கத்துவது போல் காதுக்குள் ஒலிக்கத் தொடங்கும். அவளையும் இழுத்துக்கொண்டு திட்டிலிருந்து இறங்கி வாய்க்காலின் இந்தக் கரையில் வந்து நின்றால் பயம் பிய்த்தெடுக்கும். இங்கிருந்து பார்க்கும்போது தண்ணீர் மிக வேகமாகச் செல்வது போலத் தெரியும். அதற்குள் அக்கரையில் நிற்கும் யாரவது ஒரு அக்காவோ அத்தையோ ‘ஏ பிள்ள.. உங்கம்மா உன்னய ரொம்ப நேரமா ஈக்குச்சிய கையில வெச்சுகிட்டுத் தேடிக்கிட்டு இருக்கு’ என்று சொல்ல, ஆழமாவது வேகமாவது? தண்ணீருக்குள் ஒரே பாய்ச்சல் தான். படித்துறையை அடைந்து ஈரம் சொட்டச் சொட்ட மேலே வந்தபின் பூனை பயமில்லாமல் வீட்டுக்குச் சென்றுவிடுவாள். நான் வீட்டுக்குப் போய் வாங்கிக் கட்டிய விஷயங்களை எல்லாம் இதயம் பலவீனமானவர்கள் படிக்கக்கூடாது என்பதால் இங்கே என்னால் எழுத முடியவில்லை.
அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டிலிருந்து அரிசி எடுத்துக்கொண்டு போய் கூட்டாஞ்சோறு சமைத்துச் சாப்பிடுவது, குளத்துக்குள் இறங்கித் தாமரைப்பூக்களைப் பறித்து மாலை செய்து போட்டுக்கொள்வது, தூரத்திலிருக்கும் தோட்டத்துக்குச் சென்று கொடுக்காப்புளி பறித்துத் தின்பது, வயலுக்குப் போகும் வழியில் வாய்க்காலுக்கு அப்பாலிருந்த புளியந்தோப்புக்கு பனைமரத்தால் செய்யப்பட்டிருந்த கைப்பிடி இல்லாத அந்த ஒற்றையடிப் பாலத்தில் நடந்தே செல்வது, மருதாணி இலைகள் பறித்து வருவது, ஐஸ்பால் விளையாடுவது, வயதுக்கு வரும் அக்காமார்களின் வீட்டுக்குச் சென்று தாயம் விளையாடுவது என நான் செய்த எல்லாவற்றிலும் பூனையும் உடனிருந்தாள். ஒருமுறை வாய்க்காலில் தண்ணீர் வற்றியிருந்த நாள் ஒன்றில் மீன் பிடிக்கலாம் என்று இருவரும் உள்ளே இறங்கினோம். வெயிலுக்குள் விளையாடிக் கொண்டிருந்ததால் பயங்கரமாகத் தாகம் எடுக்கவே தெளிவாக நீர் தேங்கியிருந்த ஓர் இடத்துக்குப் போனாள். அங்கேயிருந்த தண்ணீரைக் கலக்காமல் மெதுவாகக் கைகளில் அள்ளிக் குடிக்கத் தொடங்கினாள்.
‘என்ன பாக்க? நெறைய பேருக்கு இந்தத் தண்ணீ கூட கிடைக்காம கஷ்டப்படுதாங்க. நமக்கு இதாவது கிடைச்சிருக்கே, குடிச்சிக்கோ’
என்று சொல்ல நானும் அவளைப் போலவே தண்ணீரைக் கைகளில் மொண்டுக் குடித்தேன். ஒரு முறை அவளது வீட்டுக்குக் கூட்டிச்சென்று அவளாகவே கருவேப்பிலை, மிளகாய்வற்றல் போட்டுச் செய்து வைத்திருந்த அரிசி மாவு உப்புமாவை எனக்குச் சாப்பிடத் தந்தாள். தீபாவளி, பொங்கல், கோயில் கொடைகளுக்கு என் வீட்டில் ஃப்ராக், மிடி என எடுத்துத்தர அவளுக்கோ எப்போதும் துணிவாங்கித் தைத்த நீளமான பாவாடை சட்டை. தீபாவளிக்குப் போட்டுக்கொள்வதுக்காக வைத்திருந்த கத்திரிப்பூ நிறப் பாவாடைச் சட்டையை எனக்கு எடுத்துக் காட்டினாள். எனக்கு மிகவும் பிடித்த நான் அணிவதற்கு ஏங்கிய அந்த உடையைத் தொட்டுத் தடவிப்பார்த்துக்கொண்டேன். பின்னர் வீட்டுச் சட்டத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்த ஓரிரு கருப்பு-வெள்ளை புகைப்படங்களைக் காட்டி அது யார் யாரென விளக்கிக் கொண்டிருந்தாள். அவளது அப்பா தான் ஊர் அம்மன் கோயில் பூசாரி. நாலு அண்ணன்மார்கள். இவள் ஒரே பெண். கடைசி அண்ணனுக்கு அப்போது தான் திருமணம் முடிந்திருந்தது.
ஒரு நாள் கும்பலாக பூனையோடு ஒரு பத்துப் பேர் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது திடீரென ஆட்டம் நிறுத்தப்படவே திரும்பிப் பார்த்தால் பூனை ஒரு பக்கமாக நின்று வாந்தி எடுத்துக் கொண்டிருந்தாள். முழுவதும் இரத்தம். கொஞ்ச நேரம் அங்கே கலவரமாகி மீண்டும் ஆட்டம் தொடங்கப்பட்டது. வீட்டுக்குத் திரும்புவதற்குமுன் நான் பூனையிடம் கேட்டேன்.
‘என்னாச்சு?’
‘எனக்கு அடிக்கடி பல்லுல இருந்து இரத்தம் வரும். அதான் வந்துச்சி’
இரண்டு வருடங்கள் அவ்வூரை விட்டு வேறு ஊரில் வசிக்க வேண்டிய நிலைமை வந்தது. பின்னர் மீண்டும் அங்கேயே குடிபோனோம். வந்ததிலிருந்து நான் பூனையைத் தேடத் துவங்கினேன். எங்கேயும் காணாமல் அவள் வீட்டுக்கே போய்ப் பார்க்கலாம் என நினைத்துப் போனேன். வீட்டு வாசலில் போய் நிற்க உள்ளே யாரையும் காணவில்லை. முற்றத்தைக் கடந்து தார்சாவுக்குப் போனேன். நின்று மெதுவாக ‘ஆறுமுடிவு..’ என்று அழைத்தேன். பதிலில்லை. மேலே நிமிர்ந்து அவள் காட்டிய அந்தக் கருப்பு வெள்ளைப் புகைப்படங்களைப் பார்த்து அவள் முன்னால் சொன்னதை ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தேன். வரிசையில் கடைசியாக ஒரு வண்ணப்படம் மாட்டப்பட்டிருந்தது. கத்திரிப்பூ நிறப் பாவாடையில் தலையில் செவ்வந்திப் பூவுடன் பூனை ஒரு ஸ்டுடியோவின் திரைக்கு முன்னால் நின்று சிரித்துக் கொண்டிருந்தாள். எடுக்கப்பட்ட அந்தப்புகைப்படத்தில் சரியாக அவள் நெற்றி இருந்த இடத்தில் சந்தனம் குங்குமம் வைக்கப்பட்டுக் காய்ந்துபோய் இருந்தது. அதைக் கவனித்தபோது தான் போட்டோவில் தொங்கிக் கொண்டிருந்த சந்தனமாலையும் மின்னிக் கொண்டிருந்த சிவப்புக் கூம்பு விளக்கும் என் கண்களுக்குத் தென்பட்டன. அதிர்ச்சியடைந்த நான் நேராக வீட்டுக்கு ஓடிவந்து அம்மாவிடம் கேட்டேன்.
‘எம்மா, பூனப் பிள்ளைக்கி என்னாச்சு?????’
‘ஸ்ஸ்.. ஒனக்கிப்போந்தான் தெரியுமா? அந்தப் பிள்ள அநியாயமா செத்துப்போச்சு. புத்து நோயாம். கேன்சர்’
‘ஹாஸ்பிடல் போலையா?’
‘ஐக்கிரவுண்டுல காட்டுனாங்களாம். காப்பாத்த முடியல. தனியார்ல காட்ட எங்க வசதியிருக்கு? ரொம்பக் கஸ்டப்பட்டவங்க’
நான் மீண்டும் பூனையின் வீட்டுக்கு ஓடினேன். முற்றத்தில் என்னை யாரென்றே தெரியாத கடைசி அண்ணனின் மனைவி நின்றுகொண்டிருந்தாள்.
‘என்ன?’
‘சும்மா தான் வந்தேன்’
‘வந்து உக்காரேன்’
‘இல்ல வேண்டாம். நான் போறேன்’
‘ஆறுமுடிவுகிட்ட ஒரு புது டிரெஸ் இருந்துச்சில்லா.. அத என்ன செஞ்சீங்க?’ என மனதுக்குள் தோன்றிய கேள்வியைக் கேட்காமலே வீட்டுக்குத் திரும்பி வந்தேன்.
குறிப்பு: இது என் நூறாவது பதிவு.
26 comments:
கதைபோல சொல்லிய புற்றுநோய்விடயம் கலங்க வைக்கின்றது!பூனை போல பலர் போதிய வசதி இன்மையால் போட்டோவில் வாழ்கின்றார்கள்.
100 வது பதிவு இன்னும் ஆயிரம் தாண்ட அன்பான வாழ்த்துக்களும் பிரார்த்தனையும்.
கிராமத்து நினைவலைகளுடன் அழகா சொல்லியிருக்கீங்க சகோதரி. இதை ஒத்த என்னுடைய ஒரு பதிவையும் படித்துப் பாருங்களேன்.
http://schoolpaiyan2012.blogspot.com/2014/01/blog-post_27.html
அறியாத புரியாத வயது...
ஆறுமுகவடிவு நிலை வேதனை...
நூறாவது பதிவு - மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...
இதை என்ன வகைக்குள் அடக்குவது என தெரியாமல் முழிக்கிறேன்.. சிறுகதையா இல்லை அனுபவமா?
சிறுவயது சுபத்ராவுக்கு மரணத்தின் வலியை விட அந்த கத்தரிப்பூ பாவாடையின் மீது தான் ஒரு கண் என்று முடியும் அந்த இறுதி வரிகள் மிக எதார்த்தம்...
உங்கள் எழுத்து நடையில் பிரமாதமான பதிவு.. திருநவேலி எழுத்து சுகாவைவையும் தொட்டுச் செல்கிறது :-)))))
excellent after long wait
kamal
இதே போல் என் இளவயதிலும் ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது! கனக்க வைத்த பதிவு! நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!
Nice narration.... Author deserves
applause of highest sound..best wishes...
VETRIS...
அருமை அருமை ...
நூற்றுக்கு ஒரு நூறு வாழ்த்து...
நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்..!
எழுத்து மூலம் அழகாக காட்சி படுத்தி இருக்கீங்க!!
பூனை தோழி சோகம் பாதிக்காத வயதின் அனுபவம்!!!
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : சீனு என்ற ஸ்ரீனிவாசன் அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : திடங்கொண்டு போராடு
வலைச்சர தள இணைப்பு : கற்றுக்கொடுக்கும் பதிவர்கள்
கடைசி வரி class ...!
தார்சா ?
@தனிமரம்
மிகவும் நன்றி!
@ஸ்கூல் பையன்
படித்தேன். அருமையான பதிவு. கருத்துக்கு நன்றி.
@திண்டுக்கல் தனபாலன்
மிக்க நன்றி!
@சீனு
சிறுகதை அல்ல. அனுபவம் தான் ஸ்ரீ.
@kamal
Thank U :))
@‘தளிர்’ சுரேஷ்
ம்ம். கருத்துக்கு நன்றி.
@Unknown
Thank U pa.. :)
@sivamahan
நன்றி :))
@இராஜராஜேஸ்வரி
மிக்க நன்றி :))
@சமீரா
பாதிக்கவில்லை என்றால் இந்தப் பதிவே வந்திருக்காது தோழி. I have taken it in a lighter vein.
@திண்டுக்கல் தனபாலன்
அப்பவே பார்த்தேன். பதில் இட முடியவில்லை. ஸ்ரீக்கும் உங்களுக்கும் மிக்க நன்றி :)
@ஜீவன் சுப்பு
தார்சா? எனக்கே சரியா தெரியாது :) Hall + Veranda னு vechikkalam.
Post a Comment