ஏப்ரல் 20
Apr 20, 2015
காவியம்
சிறகிலிருந்து
பிரிந்த
இறகு
ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது.
ரஸவாதம்
இதயத்தில்
உன் மறுப்பின்
வேல்
புதைந்து
வாய்
பிளந்து
பசி
என்ற குரல் எடுத்தது
வடு
குரல்
மேட்டு
தாய்
மன நிலவு
முலை
சுரந்தாள்
சொரிந்ததுவோ
துக்கத்தின்
விஷ
நீலம்
ஆனால்
பருகிய
வடுவின்
இதய
வயிற்றுள்
துக்கம்
செரித்துப்
பிறந்தது
வேதனை
அமிர்தம்.
சைத்ரீகன்
வெண்சுவர்த்
திரையிலென்
தூரிகை
புரண்டது.
சுவரே
மறைந்தது.
மீந்தது
காட்சி.
ஓஹோ,
உயிர்த்தெழும்
ஒளிக்கு
இருள்
ஒரு திரையா?
பாழாம்
வெளியும்
படைப்பினை
வரையவோர்
சுவரா?
வண்ணத்துப் பூச்சியும் கடலும்
சமுத்திரக்
கரையின்
பூந்தோட்ட
மலர்களிலே
தேன்குடிக்க
அலைந்தது ஒரு
வண்ணத்துப்
பூச்சி
வேளை
சரிய
சிறகின்
திசைமீறி
காற்றும்
புரண்டோட
கரையோர
மலர்களை நீத்து
கடல்
நோக்கிப் பறந்து
நாளiரவு பாராமல்
ஓயாது
மலர்கின்ற
எல்லையற்ற
பூ ஒன்றில்
ஓய்ந்து
அமர்ந்தது
முதல்
கணம்
உவர்த்த சமுத்திரம்
தேனாய்
இனிக்கிறது.
ஒளிக்கு ஒரு இரவு
காக்கை
கரைகிறதே
பொய்ப்புலம்பல்
அது.
கடலலைகள்
தாவிக் குதித்தல்
போலிக்
கும்மாளம்.
இரும்பு
மெஷின் ஒலி
கபாலம்
அதிரும்.
பஞ்சாலைக்
கரித்தூள் மழை
நுரையீரல்
கமறும்.
அலமறும்
சங்கு இங்கே
உயிர்ப்புலம்பல்.
தொழிலின்
வருவாய்தான்
கும்மாளம்.
லாப
மீன் திரியும்
பட்டணப்
பெருங்கடல்.
தாவிக்
குதிக்கும்
காரியப்
படகுகள்.
இயற்கைக்கு
ஓய்வு ஓயாத
மகத்
சலித்த அதன்
பேரிரவு.
நிழல்கள்
பூமியின்
நிழலே வானத் திருளா?
பகலின்
நிழல்தான் இரவா?
இல்லை,
பூமிப்
பந்தின் பின்னே
இருளின்
பிழம்பு,
இரவில்
குளித்து
உலகம்
வீசும்
வெளிச்சச்
சாயை பரிதி.
ஆமாம்.
இரவின்
நிழலே பகல்;
இருளின்
சாயை ஒளி.
முதுமை
காலம்
பனித்து விழுந்து
கண்களை
மறைக்கிறது
கபாலத்தின்
கூரையுள்
ஒட்டியிருந்து
எண்ணவலை
பின்னிப்பின்னி
ஓய்கிறது
மூளைச் சிலந்தி.
உணர்வின்
ஒளிப்பட்டில்
புலனின்
வாடைக் காற்று
வாரியிறைத்த
பழந்தூசு.
உலகை
நோக்கிய
என்
விழி வியப்புகள்
உயிரின்
இவ் அந்திப்போதில்
திரைகள்
தொடர்ந்து வரும்
சவ
ஊர்வலமாகிறது.
ஓவ்வொரு
திரையிலும்
இழந்த
இன்பங்களின்
தலைகீழ்
ஆட்டம்
அந்தியை
நோக்குகிறேன்.
கதிர்க்
கொள்ளிகள் நடுவே
ஏதோ
எரிகிறது
ஓன்றுமில்லை
பரிதிப்பிணம்.
இன்று பிரமிள் பிறந்தநாள்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
'kaaviyam' my favourite. Thanks for sharing.
Post a Comment