There should be no fear of death, for the death of the body is but a gentle passing to a much freer life – Helen Greaves

At his best, man is the noblest of all animals; separated from law and justice he is the worst – Aristotle

What's in a name? That which we call a rose by any other name would smell as sweet - Shakespeare

கேள்வியின் நாயகனே

Jan 2, 2013




இறுதியில் வென்றுவிட்டாய் நீ. போட்டியில் ஜெயித்துவிட்டாய். அறுதியிட்டு எதையும் கூறிவிடமுடியாது எனினும் நானே ஒப்புக் கொண்டுவிடுகிறேன். நமக்குள் எதற்கும் எப்போதும் போட்டி நிலவுவதுண்டு நிலவியதுண்டு. (நிகழ்காலத்தில் குறிப்பிடமுடியாமல் கடந்தகாலமாகக் குறிப்பிடச் செய்கிறதே, அதன் பெயர் தான் விதி என்பதா?) தேர்வுகளில் யார் அதிக மதிப்பெண்கள் எடுக்கிறோம் என்று; ஒரு புத்தகத்தை யார் முதலில் வாசித்து முடிக்கிறோம் என்று; இப்போது ஒன்று ஞாபகம் வருகிறது. “புத்தகம் என்ன பியானோவா வீணையா புல்லாங்குழலா, அதை வாசிப்பதற்கு? புத்தகத்தைப்படிக்கத் தான் முடியும்என்று நீ கிண்டல் செய்வாய். இதைச் சொல்லும்போது இன்னொரு ஞாபகம். Shenoy-யும் Flute-ம் வெவ்வேறென அறிந்திருந்தவளுக்கு Flute-ன் இந்திப் பதம் தான் Shenoy என்று கூறி என்னைக் கேலி செய்திருக்கிறாய்.

ஏதாவது ஒரு சந்தேகத்தை என்னிடம் பகிர்ந்துவிட்டு அதை யார் முதலில் google செய்து கண்டுபிடிப்பது என்ற போட்டி நிலவும். யார் முதலில் SMS செய்வது; யார் முதலில் call செய்வது என்று நீண்ட பட்டியலில் ஒரு முறை நாம் விளையாடிய வார்த்தை விளையாட்டில் என்னோடு போட்டியிட்டு நீ வென்றதுபோல் வாழ்க்கை விளையாட்டிலும் இதோ இப்போது நீயே வென்றுவிட்டாய். எப்போதும் நம் இருவருக்குள் நிகழ்ந்து கொண்டேயிருந்த போட்டி ஒன்று இருந்தது. அது, ஒருவர் மற்றவர்மீது யார் அதிகமாக அன்பு செலுத்துகிறோம் என்று. நமக்குள் நிகழ்ந்த போட்டிகளில் மிகவும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் உன் வெற்றியில் நானும் என் வெற்றியில் நீயும் களித்திருந்தது. உனது ஒவ்வொரு வெற்றியிலும் நானே பெருமிதம் கொண்டிருந்தேன். அவையே எனது தோல்விகளை என்னை மறக்கச் செய்துவந்தன. ஆனால் இப்போது நீ அடைந்திருக்கும் வெற்றியைப் பூரணமாக என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

பாரதியாரின்காற்றுகவிதையைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். கந்தன், வள்ளியம்மை என இரு கயிறுகள் காதல் கொள்கின்றன. இப்போது அதிலிருக்கும் வசனங்களைப் படித்து நான் சிலாகித்துக் கொள்கிறேன். அப்போதே நீ அவற்றைப் பற்றியெல்லாம்சிறுமியாயிருந்த என்னோடு உரையாடியிருக்கிறாய். ஊரே உறங்கிக் கொண்டிருந்தபோது அப்துல் ரஹ்மானின் கவிதைகள் அடங்கிய ஒரு முழுப் புத்தகத்தை எனக்காகப் படித்துக் காட்டியிருக்கிறாய். கீ-போர்டில்கண்ணன் வந்து பாடுகின்றான்...காலமெல்லாம்வாசித்துக் காட்டியிருக்கிறாய். விவேகானந்தரின் மரணத்தைப் பற்றிப் பேசியிருக்கிறாய். நீ சொல்லித்தான் கலீல் ஜிப்ரானின்முறிந்த சிறகுகள்படித்து நான் அழுதிருக்கிறேன். சிக்மண்ட் ப்ராய்டின் அனைத்துப் புத்தகங்களையும் விடாமல் வாசித்திருந்த நீ அவற்றின் பல உண்மைகளைப் புரியவைத்திருக்கிறாய்.

பொருளாதாரத்தின் கடின பக்கங்களைப் படித்துக் கொண்டிருந்த என்னிடம் ‘What is Money?’ என்று கேள்வி கேட்டுச் சிரிப்பாய். திடீரென Stem Cells பற்றி ஒரு கட்டுரை எழுதுவாய். Quantum Physics பற்றிப் பேசி என்னைப் பிரமிக்க வைப்பாய். Life of Pi, Brief History of Time, Glimpses of World History எல்லாம் நீ படிப்பதைப் பார்த்து அவற்றை வாங்கி என் அலமாறியில் அடுக்கி வைத்திருக்கிறேன். Aristotle, Plato, Confusious, Osho, Taoism இன்னும் என்னவெல்லாமோ என்னிடம் பேசும் நீ தபூ சங்கரின் காதல் கவிதைகளையும் வியப்பாய்.

‘முத்தைத் தரும் பத்தித் திருநகை’யை இருவரும் ஒரே சமயத்தில் மனனம் செய்தது எனக்கு நினைவிருக்கிறது. திருப்புகழின் பல பாடல் வரிகளைப் பகிர்ந்திருக்கிறாய். ‘கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்’ பாடலை நீ ரசிப்பதைக் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். ‘உங்களில் பாவம் செய்யாதவன் அவள்மீது கல்லெறியட்டும்’ என்ற பைபிள் வசனத்தை எடுத்துக் கூறுவாய். ‘இன்ஷா அல்லா அது நடக்கட்டும்’ என்பாய். ‘சமரசம் உலாவும் இடமே’ பாடலைப் பார்க்கச் சொல்லியிருக்கிறாய். Capital Punishment- எதிர்த்து வாதிடுவாய். ஊழல் பெருச்சாளிகள் சூழ்ந்திருக்கும் அலுவலர்கள் நிறைந்த இடத்தில் உன்னைப் போன்ற நேர்மையான அதிகாரியைக் காண்பது அரிதிலும் அரிது.

சேரியில் வாழும் சிறுவர்கள் பலருக்குத் தீபாவளிக்குப் புத்தாடை வாங்க பணம் கொடுத்திருக்கிறாய். ஒரு பிறந்தநாளுக்குச் சத்தமேயில்லாமல் பத்தாயிரம் ரூபாயை UNO-க்குத் தானம் செய்திருந்தாய். இவற்றையெல்லாம் நீ வாங்கிய அந்தச் சிறிய சம்பளத்தொகையில் செய்திருந்ததை எண்ணி நான் இன்றும் வியக்கிறேன். உன் முயற்சியால் உன் அலுவலகத்தின் கடைநிலை ஊழியர்கள் பலர் நிரந்தரம் செய்யப்பட்டு அவர்களது குடும்பத்துக்கு ஓய்வூதியம் கிடைக்க வழிசெய்த போது அதில் நன்மைபெற்ற ஒருவர் உன் காலில் விழவந்ததாய்ச் சொன்னாய். இவை எல்லாவற்றையும் நான் வியந்தாலும் நான் அதிகமாக ஆச்சர்யப்படுவது ஒன்றைத் தான். உனது இருப்பை இந்த உலகத்துக்குக் காட்டிக் கொள்வதற்காக நீ எந்த முயற்சியுமே செய்ததில்லை; மாறாக மறுத்து வந்திருக்கிறாய். சமூக வலைத்தளங்களில் கூட உன்னை இணைத்துக் கொண்டதில்லை. வலைப்பூக்களைப் படித்து எனக்கு அறிமுகம் செய்துவைத்த நீ தனக்கென ஒரு வலைப்பூவைக் கூட வைத்திருக்கவில்லை. எனது வற்புறுத்தலின் பெயரில் நீ எழுதிய சில கட்டுரைகளை நான் பொக்கிஷமாக வைத்திருக்கிறேன்.

 எப்படியோ... யார் முதலில் உலகை விட்டுப் போவது என்று நமக்குள் நிலவிய கடைசிப் போட்டியில் நீயே வென்றுவிட்டாய். நம்மை உறுத்திக்கொண்டிருந்த எண்ணற்ற கேள்விகளுக்கு நீ இப்போது விடைகள் கண்டுகொண்டிருப்பாய் என நம்புகிறேன். யார் உலகைப் படைத்தது? இறந்ததற்கு அப்புறம் நாம் எங்கே செல்வோம்? UFO-க்களில் வந்திறங்கும் Alien-கள் எங்கே வசிக்கிறார்கள்? Many Lives Many Masters-ல் சொல்லியிருப்பது போல அடுத்த பிறவியில் நீ எங்கே பிறக்கப் போகிறாய் என ஏதும் தெரிந்ததா? “என்ன மாதிரி டிசைன் இது? என அடிக்கடிப் பேசிக் கொள்வோமே.. இந்த மாதிரி டிசைனைப் படைத்த அந்தக் கடவுள் பார்ப்பதற்கு எப்படி இருக்கிறார்? ஒருவேளை அவரும் வேற்றுக் கிரகத்தில் வசிக்கும் ஒரு Alien தானா? சொர்க்கம் நரகம் எல்லாம் உண்மையா? அப்படியென்றால் சொர்க்கத்தில் நீ யாரையெல்லாம் சந்தித்தாய்? இனிமேல் என்னோடு எப்படி நீ பேசப்போகிறாய்? சூட்சும வடிவில் என்னைச் சுற்றிச் சுற்றி வருவாயா? நாம் இப்போது பிரிந்திருக்கிறோமா? இல்லை தடைகள் ஏதுமின்றிச் சேர்ந்திருக்கிறோமா?

நான் நன்றாக எழுதுவதாக அடிக்கடிச் சொல்லியிருக்கிறாய். நாம் ஒருவருக்கொருவர் கொண்டிருந்த அன்பை வார்த்தைகளால் எழுத முயல்கிறேன். முடியவில்லை. இதுவரை நான் உனக்காக எதுவுமே செய்ததில்லை. நீ செய்ய நினைத்த காரியங்களை என்னால் முடிந்தவரை செய்துமுடிக்க முயலுகிறேன். உன்னுடனான எனது அத்தியாயங்கள் முடிந்து போயிருக்கலாம். வாழ்க்கையோடு வாழ்க்கையாகக் கலந்துவிட்ட உனது ஞாபகங்கள் தொடர்கின்றன...

8 comments:

பால கணேஷ் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நண்பருக்கான அழகிய கட்டுரை. உங்களின் தடையற்ற எழுத்து வன்மையால் அந்த நண்பரைப் பற்றிய உயர்ந்த சித்ரத்தை எங்கள் மனதில் தீட்டி விட்டீர்கள். அவர் கேள்விகளுக்கெல்லாம் விடை கண்டு அமைதி பெறட்டும். நாம் கேள்விகளுக்கு விடை தேடிப் போராடுவோம் தொடர்ந்து - அவரின் நினைவுகளுடன்!

kamal said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை

mohan baroda said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

After creating much interest while reading because of your beautiful narrations, you ended this abruptbly and that too tragically. Really nice way of telling your friendship and I thought you will tell about him in the end but it turned out to be something different.

வை.கோபாலகிருஷ்ணன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

//எப்படியோ... யார் முதலில் உலகை விட்டுப் போவது என்று நமக்குள் நிலவிய கடைசிப் போட்டியில் நீயே வென்றுவிட்டாய்.//

அருமையான எழுத்துக்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

jayakumar said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

nijamave neengale eluthiyatha?itharku mun ippadi oru vadivam ungal eluthil nan kandathillai...nalla munetram....nenjam vimmukirathu subathra.....

Rathnavel Natarajan said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அருமை மகளுக்கு எங்கள் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

சாதாரணமானவள் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அடக்கடவுளே.... என்னை மன்னியுங்கள். முதலில் நான் இதை காதல் பிரிவு என்று நினைத்தேன். முடிவில் தெரிந்தது மரணம் பிரித்தது என்று. இது வெறும் பதிவு அல்ல, நல்ல நடை, நல்ல பகிர்வு என்று கூற. இது ஒரு வலி என்று புரிந்து கொண்டேன் தோழி. விரைவில் இந்த வலியை மறக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

சீனு said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

//அதை வாசிப்பதற்கு? // நம்ம ஊருக்காரங்கள கிண்டல் அப்ன்ன இவங்க சொல்ற மொத பாயிண்ட் இது தான்

எங்க யாருக்கு என்னாச்சு.. காதல் பிரிவுன்னு தான் நானும் நினைச்சேன்