கவிதைகள்
Dec 29, 2012
நான் ரசித்த பிரமிள், ஆத்மாநாம், கல்யாண்ஜி மற்றும் கலாப்ரியாவின் கவிதைகள் உங்களுக்காக...
வாக்கு
சரி இது தவறது
என்று உணர்ந்துருகி
அறிவில் தெளிந்ததை
முறை பிசகற்று
வெளியிடும் தவம்
சுய வெளியீடல்ல.
சுயத்தின் எல்லைக்குள்
நில்லாத உயிருக்கு
அதுவே வேரும்
கிளையும் இலையும்
புராணனும் பிராண
வெளியின் உயிரும்.
சுயத்தை மீறி
உலவும் வெளியில்
உள்ளல் உடன் பூண்டு
சொல்லாயிற்று.
உணர்வில் நான் நீ
இருமை உருகி
அறிவில் ஒளிர்ந்து
கருவும் உருவும்
பிசகாது பிறந்து
பொருளயிற்று.
சுயத்தின் சுமை
அற்ற பொருளே
பறக்கும் பரந்து
ஆழ்ந்து நிலைக்கும்.
இதனால் தான் போலும்,
‘சொல்ல வந்ததை
முறையற்று வெளியிட்டால்,
அர்த்தம் மட்டுமல்ல
உயிரும் ஒருவிதத்தில்
சிதையும்’ என்றான்
கிரிட்டனிடம் அன்று
பிளேட்டோ.
*
லயம், அக்டோபர் 1995.
- -
பிரமிள்
கண்டிப்பாக
விற்பனை
ஒரு அழைப்பு
நீங்கள்
ஏதாவது ஒரு இடத்திலாவது
வாங்கியாக வேண்டும்
மனைவியை
பிள்ளைகளை
இத்துடனில்லாது
கடைகளில் ஏதாவது
இன்றைக்கு
இலக்கியம் ஒரு பொருள்
அது உயிரல்லாதது
உயிருள்ள இலக்கியம்
இன்றைக்கு
மௌனமாய்ப் பேசிக்கொண்டிருக்கின்றது
நீங்கள்
ஏதாவது ஒன்றைச் சொல்லியாக வேண்டும்
- -
ஆத்மாநாம்
வருகை
காக்கையின் ஒற்றை இறகைத்
தலையணைக்கு அருகில் வைத்து
உறங்கப் போன குட்டிப் பெண்
கேட்டது
‘சொப்பனத்தில் மயில் வருமா?’.
தாத்தா பதில் சொல்லி
தலை வருடி விடுகிறார்,
‘மயில் கோபித்துக் கொள்ளாதா
காக்கைச் சிறகைப் பார்த்தால்?’.
பதில் வரக் காணோம்,
தூங்கிவிட்டது.
அதற்குள்ளாகவா
மயில் வந்திருக்கும்?
- -
கல்யாண்ஜி
மூன்று கவிதைகள்
1.
இன்றும் – விற்றுவிட்ட
முற்றத்துச் சிமெண்டுத் தளத்தில்
கன்றுக் குட்டியின்
கால்த் தடங்கள்.
2. வழி புலப்படாத இருளில்
கிராமத்துத் தெருவில்
காலில் மிதிபட்டது
மின்மினி.
3. தைக்கும்
கடிகாரத்தில்
மணி காட்டும்
தராசில் பணம்
நிறுக்கும்;
முள் –
எங்கும் தவறாக.
- -
கலாப்ரியா
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
மிக மிக அருமையான கவிதைகள்
பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
Post a Comment