முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

கிறுக்கல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

என்றும்

என்றைக்கும் அல்லாத ஞாயிறு ஒன்றில் வந்து விழுந்ததொரு ‘மிஸ்ட் கால்’. மிஸ்ட்கால் செய்தவர் முகம் அறியாதவராயினும் ‘மிஸ்’ பண்ண விரும்பாத மாடர்ன் மங்கை.. மெசேஜிற்குத் தாவி அழைத்து உரையாடி இணையம் வழியே இதயங்களை இணைத்து கவிதைகள் இயக்கி கருத்துகள் பேசிக் கவலைகள் பகிர்ந்து கனவுகளில் பறந்து மற்றும் ஒரு ஞாயிறு ஒன்றில் சந்திப்பும் நடந்தேறி அண்ணலும் நோக்கி அவளும் நோக்க செம்புலப் பெயல்நீர் கலந்தது போல அன்புடை நெஞ்சம் இரண்டும் கலந்தன.. காதல் பிறந்தது! நாட்கள் ஓடின.. சுபயோக சுபதினம் ஒன்றில்.. இருவருக்கும் திருமணம் தனித்தனியாக! எக்காலம் ஆயினும் காதலுக்குக் கண் தானில்லை சாதி இருக்கிறது.. சாதியைக் கட்டிக்கொண்டு புரளும் பெற்றோர்களும் இருக்கிறார்கள்! மறக்கத் துடிக்கும் இரு மனங்களையும் சிதைந்து கிடக்கும் இரு ‘சிம்’களையும் தவிர சாட்சிகள் ஏது.. சாகடிக்கப்பட்ட நவயுகக் காதலுக்கு?!

ஹைக்கூ முயற்சி

  அடியை வாங்கியதும் அடம்பிடித்த குழந்தை அணைத்துக் கொண்டது ** திடுக்கிடச் செய்யும் சைரன் சத்தம் மரண பயமோ? **  ஜெர்ஸியானாலும் சிந்தியானாலும் பசித்தே இருக்கிறது பசுவின் கன்று. **   உறங்கி விழித்ததும் குழம்பிப் போகிறேன் எது வாழ்வு? எது கனவு? **   மழைக்காலம் முழுவதும் மழைநீர் சேகரிப்பு ஒழுகும் வீடு **

கவிதைகள்

கட்டிய புடவையோடு வாழ்க்கைப்பட கைகொடுத்தது வறுமையின் நிறம்  *** "பட்டினி" கவிதைக்கு கிடைத்த பரிசு காலித் தட்டு *** பஞ்சு மெத்தை தோற்றுப் போனது பழைய சேலையிடம் *** மழையில் வெளுக்காத வண்ணத்துப்பூச்சி வெளுத்தது மனதை. *** யாரென்று தெரியவில்லை அசைத்த கையோடு ரயிலுக்குள் நான் *** முதுகில் குத்தியவனை முதுகால் தாங்கியது வண்டியில் மாடு *** வியர்வையைத் துடைத்த அழுக்குச்சட்டையால் மணத்தது வெள்ளைச்சட்டை *** உறங்கிய தாயின் உறங்காச் சேயை தாலாட்டிச் சிரித்தது காற்றாடிச் சத்தம் *** கடலில் கலவரம் விஷமச் சிரிப்புடன் வெள்ளை நிலா. *** கதிரவனுக்கும் கடலுக்கும் கலவரமில்லாக் கலப்புத் திருமணம் இடம்: தொடுவானம் * *