பழந்தமிழர்களின் வாணிகம்

Dec 20, 2012


தமிழர்கள் பழங்காலத்திலேயே கடல் வாணிகத்திலும் உள்நாட்டு வாணிகத்திலும் சிறப்படைந்திருந்தார்கள் என்பதற்குத் தமிழிலக்கியச் சான்றுகள் மட்டுமல்லாமல் வெளி நாட்டாரின் பழங்காலக் குறிப்புகளின் சான்றுகளும் உள்ளன.

கி.மு. பத்தாம் நூற்றாண்டின் அரசனாகிய சாலமனுக்குத் தமிழ்நாட்டுக் கப்பல்கள் மயில் தோகையும் யானைத் தந்தமும் வாசனைப் பொருள்களும் கொண்டு சென்றன. பழைய ஈப்ரூ (Hebrew) மொழியில் உள்ள துகி (மயில் இறகு) என்னும் சொல்தோகைஎன்னும் தமிழ்ச் சொல்லின் திரிபு.

அஹலத்” (வாசனைப் பொருள்) அகில் என்னும் தமிழ்ச்சொல் திரிந்து அமைந்தது.

ஆங்கிலத்தில் உள்ள சாண்டல் (Sandalwood), ரைஸ் (Rice) என்னும் சொற்கள் கிரேக்க மொழியின் வாயிலாகப் பெறப்பட்ட பழைய தமிழ்ச் சொற்களாகிய சந்தனம் (சாந்து). அரிசி என்பவற்றின் திரிபுகளே. கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்பே அரிசியும் மயிலும் சந்தனமும் தமிழ்நாட்டிலிருந்து பாபிலோனியாவுக்குக் கடல்வழியாகச் சென்றன


அக்காலத்தில் கிரேக்க நாட்டிற்கு அனுப்பப்பட்ட இஞ்சியும் பிப்பிலியுமே சிக்கிபெரஸ், பெப்பரி (Ginger, Pepper) என்ற கிரேக்கச் சொற்களின் தோற்றத்திற்குக் காரணமாயின. ரோமப் பேரரசன் அகஸ்டஸ் காலத்தில் அந்நாட்டுடன் தமிழ்நாட்டுக்குக் கடல் வாணிக உறவு இருந்தது. அக்காலத்து ரோம நாணயங்கள் தமிழ்நாட்டின் புதை பொருள் ஆராய்ச்சியில் கிடைத்துள்ளன.

கி.மு. ஒன்பதாம், பத்தாம் நூற்றாண்டுகளில் தமிழர் பிலிப்பைன்ஸ் தீவுகளுக்குச் சென்று வாணிகம் செய்து வந்தனர். அங்குக் கிடைத்துள்ள இரும்புக்காலப் பொருள்கள் அதைக் காட்டுகின்றன. பர்மா, மலேயா, சீனம் முதலிய நாடுகளோடு தமிழ்நாட்டார் வாணிகம் செய்து வந்தார்கள். அதனால் சர்க்கரை சீனி என்று தமிழில் சொல்லப்படுகிறது. சீனப் பட்டு என்பது இலக்கியத்தில் குறிப்பிடப்படுகிறது

ரோமர்கள் தமிழ்நாட்டு முத்துக்களையும் யானைத் தந்தங்களையும் மெல்லிய (மஸ்லின்) ஆடைகளையும் பெற்று மகிழ்ந்த காரணத்தால், ரோமர்களின் செல்வம் நாட்டை விட்டு வெளியேறி விடுகிறதே என்று ஆட்சியாளர்கள் வருந்திய காலம் ஒன்று இருந்தது. (கி.பி.16-37) ஐரோப்பாவிலிருந்து யாத்திரை செய்த பிளைநி (கி.பி.24-79) என்பவரின் குறிப்புகள் சான்றாக உள்ளன. பெரிப்ளுஸ் (கி.பி.60) என்ற ஆசிரியரும் இத்தகைய குறிப்புகள் பல எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் பழங்காலத் துறைமுகங்களாகிய தொண்டி, முசிறி, கொற்கை, காவிரிப் பூம்பட்டினம் என்ற இடங்களைப் பற்றிய குறிப்புகளையும் அவர் நூலில் காணலாம்

தாலமி (கி.மு. 150) என்பவர் மேலும் பல குறிப்புகளை எழுதி வைத்துள்ளார். சேரர், சோழர், பாண்டியர் என்ற அரசர்களைப் பற்றிய குறிப்பும், கருவூர், நாகப்பட்டினம், புதுச்சேரி முதலிய ஊர்களைப் பற்றிய குறிப்பும் அவர் நூலில் உள்ளன. அந்த ஐரோப்பிய அறிஞர்களின் குறிப்புகள் பழைய இலக்கியத்தில் உள்ள வரலாற்றுக் குறிப்புகளோடு ஒத்தவைகளாக இருக்கின்றன.

தமிழர்களின் பழைய பின்னக் கணக்கு மிக்க நுட்பம் உடையது என்பது அவர்களின் மிகப் பழைய வாணிக அனுபவத்தைக் காட்டுவதாக உள்ளது. 1/320 x 1/7 என்னும் பின்னத்தை இம்மி என்றும், அதில் ஏழில் ஒரு பங்கை அணு என்றும், அதில் பதினொன்றில் ஒரு பங்கை மும்மி என்றும், அதில் ஒன்பதில் ஒரு பங்கைக் குணம் என்றும் குறித்துக் கணக்கிட்டு வந்தனர்.

வடமொழியில் உள்ள இதிகாசங்களாகிய ராமாயணத்திலும் மகாபாரதத்திலும் தமிழ்நாட்டைப் பற்றியும், மதுரை என்னும் தலைநகரத்தைப் பற்றியும் குறிப்புகள் உள்ளன. சந்திரகுப்த மௌரியன் காலத்தில் கிரேக்கத் தூதராக வந்த மெகஸ்தனீஸ், பாண்டிய நாட்டைப் பற்றியும் நாட்டு அரசியல் பற்றியும் எழுதியுள்ளார். அசோகன் கல்வெட்டுகளில் தமிழ் அரசர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

நன்றி: டாக்டர் மு.

பட உதவி : Google

1 comments:

Easy (EZ) Editorial Calendar said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மிக மிக நல்ல பதிவு....பகிர்வுக்கு மிக்க நன்றி......

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)