மருதாணி

Dec 9, 2012



மருதாணி.. இந்த வார்த்தையைக் கேட்டாலே அவ்ளோ சந்தோசமா இருக்கும் சின்ன வயசுல. அப்பமெல்லாம் இலையை அரைச்சு வைக்கிற மருதாணி தான். எல்லார் வீட்டுலயும் மருதாணி மரம் இருக்காது. எங்கயாவது தான் இருக்கும். யாரு வீட்டுத் தோட்டத்துக்குப் போனாலும் அங்க மருதாணி மரம் நிக்கானு தான் கண்ணு அலைபாயும்.
பார்த்தவொடனே ஒரு கவர் வாங்கி இலையைப் பறிச்சு வீட்டுக்குக் கொண்டுவந்தா.. அதை அம்மியில அரைக்கக் கூடாது ‘விசம்’னு அம்மா திட்டும். அப்பம் மிக்ஸில அரைச்சுக் கொடுங்கனு கேட்டா அடியே விழுந்திருமேனு பயந்து முழிச்சிட்டு இருக்கும் போது அம்மாவே அதுக்கு ஒரு வழி பண்ணிக் கொடுப்பாங்க. ஒரு கருங்கல் எடுத்துட்டு வந்து ஒரு கல்தரையைச் சுத்தம் பண்ணி அதுல வச்சு அரைக்கச் சொல்லுவாங்க. புளியை அல்லது சுண்ணாம்பு கொஞ்சம் சேர்த்து அரைச்சா நல்லா புடிக்கும்னு சொல்லுவாங்க. ஏழு வீட்டுக் கூரையில இருக்குற கோழிப்**யை எடுத்துட்டு வந்து அதைச் சேர்த்து வெச்சு அரைச்சா இன்னும் திக்கா பிடிக்குமாம் ;-)


இது இருக்க சிலபேர் சீனித் தண்ணி அல்லது வெல்லம் குங்குமம் எல்லாம் போட்டுக் காய்ச்சி டார்க் ப்ரவுன் கலர்ல ஒரு லிக்விட் மருதாணி செய்வாங்க. அதோட வாசம் வித்தியாசமா நல்லாருக்கும். மருதாணி வெச்சிட்டு அது பிடிச்சிருக்கா திக் ஆகியிருக்கானு பார்த்துகிட்டே இருக்குறமாதிரி அந்த வாசம் இன்னும் கையில இருக்கானு பாக்குறதும் ஒரு வேலையாவே இருக்கும். தீபாவளி வந்தா தான் எல்லாரும் மருதாணி வைப்போம். நிறைய தீபாவளிக்கு மருதாணி பொடி வாங்கி அதுல தண்ணி கலந்து கையில வைப்போம். ஆனா அது திக்காவே பிடிக்காது. நிறைய மருதாணி இருந்துச்சுனா வழக்கமா வைக்கிற ரவுண்ட் டிசைனை விட்டுட்டு மருதாணியைக் கைமுழுக்க வச்சு ஒரு துணியால கட்டிகிட்டுத் தூங்கப் போயிருவாங்க சிலபேர். காலைல எந்திரிச்சிப் பார்த்தா கைமுழுக்க சிவந்து போய் இருக்கும். அதுல ஒரு கொண்டாட்டம். 


கோயில் கொடை அப்பம் ஊரெல்லாம் கலர் கலரா பேப்பர் வெட்டி வெட்டித் தோரணம் கட்டியிருப்பாங்க. காத்துல அசைஞ்சு அது கீழ விழும்போது கலர் கலரா (முக்கியமா வாடாமல்லிக் கலர்) இருக்குற அந்தத் தாளைப் பொறக்கி அதை அழகா சின்ன சின்ன வட்டமா கிழிச்சு எச்சில் தொட்டு கையில வெச்ச அனுபவமெல்லாம் உண்டு. கொஞ்சம் காய்ஞ்சதுக்கு அப்புறம் அதை எடுத்தோம்னா சாயமெல்லாம் கையில இறங்கி அழகா வட்ட டிசைன் உழுந்திருக்கும் :-) அது இன்னொரு கொண்டாட்டம். 


தீபாவளிக்கு மொதநாள் ராத்திரி மருதாணி வெச்சிட்டுப் படுத்துக் காலைல எந்திரிச்சுப் பார்க்கும்போது பாதி மருதாணி முகம், வாய், பாய், தலவாணி, போர்வைனு ஃபுல்லா உதிர்ந்து கிடக்கும். எல்லாத்துக்கும் போட்டி போடுற தம்பி “எனக்கும் மருதாணி வைச்சுவுடுங்க”னு அழுது அடம்பிடிக்கும் போது “ஏல நீ என்ன பொம்பளப் பிள்ளையா மருதாணி வைக்க? இத ஆம்பிளைங்க வைக்கக் கூடாதுல”னு சொல்லிச் சமாதானப்படுத்தித் தூங்க வைச்சப்பம் பொறாமையில என் கையவே பாத்துகிட்டுத் தூங்கிப்போன என் தம்பி.. காலையில முழிச்சதும் முழிக்காததுமா இது தான் சாக்குனு அம்மாகிட்ட போட்டுக் கொடுப்பான்.. “எம்மா...ஆஆ அக்கா பாய் ஃபுல்லா மருதாணி ஆக்கிட்டா”னு. அப்புறம் கொஞ்ச நேரத்துல முழுத்தூக்கமும் கலைஞ்ச பின்னாடி ரெண்டு பேரும் சண்டையை மறந்து மருதாணி எவ்ளோ திக்கா பிடிச்சிருக்குனு பார்த்து ஆராய்ச்சி பண்ண போயிருவோம். 


பரதநாட்டியம் ஆடப்போம்போது சிகப்பு கலர்ல ‘அல்டா’ வெச்சுவிடுவாங்க அம்மா. எவ்ளோ அழகா இருந்தாலும் மருதாணியோட இடத்தை எந்த அல்ட்ராவாலயும் நிரப்ப முடியல. மனசுக்குப் பிடிச்சவங்களை நினைச்சுகிட்டு மருதாணி வெச்சு அது நல்லா பிடிச்சிருந்தா நாம நினைச்சவங்க நம்ம மேல நிறைய்ய்ய்ய்ய்ய அன்பு வெச்சிருக்காங்கனு அர்த்தமாம். இப்போலாம் மெஹெந்தி கோன் வந்திருச்சு. எப்ப பார்த்தாலும் வட்டம் வைக்காம டிசைன்ஸ் வெச்சே பழகிட்டோம். கை, கால்ல மணப்பொண்ணுக்கு மெஹெந்தி வைக்காம கல்யாணமே நடக்குறதில்ல. அழகோட ஒருவித ஹோம்லி ஃபீலையும் தரும் இந்த மருதாணி வைப்பதில் சில டிப்ஸ் உங்களுக்காக:

1.   வீட்டிலயே கெமிக்கல் இல்லாத மருதாணி கோன் செய்யும் முறை: மருதாணி இலையைக் கொஞ்சமா தண்ணிவிட்டு கூட எலுமிச்சம்பழச் சாரையும் விட்டு மைய அரைச்சு வெச்சிக்கோங்க. அப்புறம் வெத்துப் பால் கவர் எடுத்து அதுக்குள்ள அரைச்சு வெச்சிருக்குற இந்த மருதாணி பேஸ்டை ஸ்டஃப் பண்ணி நல்ல டைட்டா நூல் போட்டுக் கட்டிருங்க. இப்போ கோன் ரெடி :-)


2.   மருதாணி வைக்கிறதுக்கு 2-3 மணிநேரம் முன்னாடியே கையை நல்லா கழுவிருங்க. அப்புறம் அப்ளை பண்றதுக்கு முன்னாடி எலுமிச்சம் பழச்சாற்றைக் கையில தேய்ச்சுக் காயவிட்டுக்கலாம். 


3.   அப்ளை பண்ணுன மருதாணி கொஞ்சம் காய்ஞ்சதுக்கப்புறம் சீனித் தண்ணி வெச்சு ஒத்தடம் கொடுக்கலாம். ஒரு 2 அல்லது 3 வாட்டி கூட இப்படிச் செய்யலாம்.


4.   கடைசியா காய்ஞ்சு போன மருதாணியைத் தண்ணி வெச்சுக் கழுவாம ரெண்டு கையையும் நல்லா தேய்ச்சு உரசினதுக்கு அப்புறமா யூகலிப்டஸ் ஆயில் / விக்ஸ் / தேய்ங்காய் எண்ணெய் / கடுகு எண்ணெய் இதுல ஏதாவது ஒன்னைத் தடவி அப்படியே விட்டுருங்க. (அதுக்கப்புறம் எருமை மாட்டு முதுகுல சப் சப்புனு அடிச்சா இன்னும் திக்கா பிடிக்கும்ங்குறது எங்க ஊர் ஐதீகம்) ;-)


5.   ராத்திரி முழுக்க வெச்சிருந்து காலையில எடுத்தா நல்லது. மருதாணி உடம்புக்கு நல்ல குளிர்ச்சி. அதனால குளிர் காலத்துல வைக்காம இருக்குறது நல்லது.


6.   மணப்பெண்ணுக்கு : பொதுவா கை, கால்ல வேக்ஸிங் பண்ணுற பழக்கம் இல்லைன்னாலும் கல்யாணத்தப்போ மெஹெந்தி வைக்கிறதுக்கு முன்னாடி மேனிக்யூர், பெடிக்யூர் எல்லாம் செஞ்ச அப்புறம் மருதாணி வெச்சுகிட்டா அழகோடு கூட வலியில்லாமல் மருதாணியை எடுக்குறதும் சுலபமா இருக்கும்.

இதுவரை நான் முயற்சி செய்து பார்த்த மெஹந்தி டிசைன்களைக் கொடுத்துள்ளேன். கருத்துகள் வரவேற்கப்படுகின்றன :-)

இன்னும் சில ...










10 comments:

Yaathoramani.blogspot.com said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மிக மிக அருமையாக டிஸைன் செய்துள்ளீர்கள்
மருதாணி குறித்த அறியாத பல விஷயங்களை
பதிவாக்கி அறியத் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

கோவை நேரம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மருதாணி அலசல்..நன்று...போட்டிருக்கிற படங்கள் அனைத்தும் மெகந்தி வகையை போல...கடைகளில் விற்கப்படும் கோன் தானே....இவை உடலுக்கு ஒவ்வாமை தருமே...
நானும் எழுதி இருக்கிறேன்..
http://www.kovaineram.com/2012/10/blog-post_3.html

கார்த்திக் சரவணன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அருமையான பகிர்வு.... மனதைக் கவரும் படங்கள்... நன்றி...

உதய குமார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ரொம்பவே நல்லா இருக்கு...

semmalai akash said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

யப்பாப்பா! மருதாணி பற்றிய உங்களுடைய அனுபவம் மிக மிக பெரியது என்று தெரிகிறது, நானும் என் அக்காகூட சண்டைப் போட்டதெல்லாம் நினைவுக்கு வந்துவிட்டது. அருமையான அனுபவ பகிர்வுக்கு நன்றி.

இந்திரபோகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தோழி,
ரிஷப ராசியில் லக்னாதிபதியான சுக்ரன் வீற்றிருக்க, சந்திரன் கடகத்தில் உச்சம் பெற்றிருக்க, அத்தகைய பெண்ணின் கைகள் மருதாணி இல்லாமலேயே சிவப்பாக இருக்குமாம்.

இந்திரபோகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தோழி,
ரிஷப ராசியில் லக்னாதிபதியான சுக்ரன் வீற்றிருக்க, சந்திரன் கடகத்தில் உச்சம் பெற்றிருக்க, அத்தகைய பெண்ணின் கைகள் மருதாணி இல்லாமலேயே சிவப்பாக இருக்குமாம்.

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ Ramani
கருத்துக்கு நன்றி!

@ கோவை நேரம்
தங்களது பதிவைப் படித்தேன். எனக்கும் இயற்கையான மருதாணி இலையை அரைத்து வட்ட வட்டமாக வைப்பது தான் பிடிக்கும். இலை கிடைக்காத காரணத்தால் தான் கோன் வைக்கிறேன்.

எங்க ஊர்ல ஆண்கள் மருதாணி வச்சிக்க மாட்டாங்கனு நினைக்கிறேன் :)

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ ஸ்கூல் பையன்
கருத்துக்கு நன்றி!

@ உதயா
மிக்க நன்றி!

@ செம்மலை ஆகாஷ்
அக்கா கூட சண்டை போட்டீங்களா :) குட்.. கருத்துக்கு நன்றி!

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ குருச்சந்திரன்
தகவலுக்கு மிக்க நன்றி :))))