படிக்கும் வயதில் யாரேனும் பாடம் எடுத்திருக்கிறீர்களா? எனக்கு இதுவரை ஏற்பட்ட அனுபவங்களில் சொல்லியே தீரவேண்டியவை-லேபிளில் இதுவும் ஒன்று! கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கையில் மிகவும் ஆசைபட்டு மாலை வகுப்புகள் எடுக்கப் போவதாகப் பக்கத்து வீடுகளில் சொல்லி வைத்திருந்தேன். முதல் நாளே நான்கு மாணவர்கள்.. ஒரு மாதத்தில் ஏறத்தாழ வீட்டுக்கு அருகிலிருந்த எல்லாக் குட்டீஸ்களும் என் வீட்டில் ஆஜர் எனலாம். கிட்டதட்ட பதினாறு
பேர்..
1.
கல்யாணி
– 1ம் வகுப்பு
2.
ப்ரியா
– 2ம் வகுப்பு
3.
ராஜேஷ்
– 1ம் வகுப்பு
4.
செல்வா
– யு.கே.ஜி.
5.
பிரகாஷ்
– 6ம் வகுப்பு
6.
முத்துமாரி
– 3ம் வகுப்பு
எனப்போய்க் கொண்டேயிருக்கும். “என்னடா இது! ஏதோ
ட்யூஷன் எடுக்கலாம். சின்ன க்ளாஸ் பாடங்கள் எல்லாம் திரும்பவும் படிச்சமாரி இருக்கும்னு
பார்த்து நாம ஒன்னு யோசிச்சா இப்படி நண்டுகளையும் வண்டுகளையும் வெச்சு என்ன பண்ண..”
என்று தோன்றியது. “சரி இந்தச் சின்ன குழந்தைகளை மேனேஜ் பண்ண கத்துகிட்டோம்னா நமக்கும்
ஜாலியா இருக்கும், பொழுதும் போகும், அவங்களுக்கும் பாடம் சொல்லிக் கொடுக்கலாம்” என்று
மனதைத் தேற்றிக்கொண்டு தொடர்ந்தேன்.
ட்யூஷனுக்கு ஃபீஸ் வாங்கலாமா கூடாதா என்று ஒரு சின்ன
குழப்பம். நம்ம ஊர் வழக்கப்படி பொதுவா, அதிகமா ஃபீஸ் வாங்குற டாக்டர் தான் நல்ல டாக்டர்.
அதிகமா ஃபீஸ் வாங்குற பள்ளிக்கூடம் தான் சிறந்த பள்ளிக்கூடம். வரதட்சணை வாங்கிக் கல்யாணம்
பண்ணுகிற மாப்பிள்ளை தான் குறை இல்லாதவன். இலவசமா கிடைச்சா அதுக்கு மதிப்பு இருக்காது..
அதில் ஒழுங்கும் இருக்காது (மாப்பிள்ளையைச் சொல்லலப்பா!) இப்படி இருக்கையில், காசுக்குக்
காசும் ஆச்சு. பாடமும் ஆச்சு என நினைத்து ரீசனபில் ஃபீஸ் வாங்கிக்கொண்டு ட்யூஷன் எடுக்கத்
தொடங்கினேன்.
எதைச் சொல்வது எதை விடுவது எனத் தெரியவில்லை. முதல்
நாள் வாயையே திறக்காமல் இருந்து போகப் போக மர ஸ்கேல் வைத்துக் கட்டுப்படுத்தும் அளவுக்குச்
சென்ற குட்டீஸ்களின் சுட்டித்தனத்தையா.. “மிஸ் மிஸ் மிஸ் மிஸ்” என ஓயாமல் அழைத்துக்
கொண்டிருந்த அவர்களின் அன்புத் தொல்லைகளையா.. “அடிக்கிறான்.. கிள்ளுறான்.. என் பென்சில்
ஷார்ப்னரை எடுத்து வெச்சுகிட்டான்” எனப் புகார்களை அள்ளிவீசும் அவர்களது டார்ச்சர்களையா..?
எல்லாவற்றையும் சொல்ல வேண்டுமெனில் ஒரு சின்ன புத்தகம் போடலாம். சில சுவாரஸ்யமான நினைவுகள்
மட்டும் இப்பதிவில்..
முதலில் ராஜேஷ்.. சேட்டைனா சேட்டை அப்படி ஒரு சேட்டை.
நெற்றியில் செந்தூரம் வைத்துக்கொண்டு வெள்ளையாக, சின்னதாக இருப்பான். அவனது பாட்டிதான்
கொண்டுவந்து விட்டுச் செல்வார்.
“மிஸ் இங்கப் பாருங்க, இவன் சொன்னவடி கேக்கமாட்டான்.
நல்லா அடி குடுங்க, நாங்க என்ன எதுக்குன்னே கேக்க மாட்டோம். இவன் ஒழுங்கா படிச்சா போதும்.
ஸ்கேல் வச்சிருக்கீங்கல்ல? பத்து மணிக்குத் தான் வருவேன். அதுவரைக்கும் படிக்கட்டும்..
கொஞ்சம் பார்த்துக்கோங்க”
என அவர் கூறிவிட்டு அவனை என்னிடம் விட்டுச் சென்றபோது
என் அம்மா தான் அவனை ஒரு இடத்தில் உட்கார வைத்தார். சிரித்துக்கொண்டே இருந்தான். அடிப்படை
விஷயங்களை அவனிடம் கேட்டறிந்த பின்னர் வீட்டுப்பாடம் டையரியைத் திறந்து பார்த்து அவனுக்குச்
சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன். அவனது இடாலிக்ஸ் கையெழுத்து மிகவும் அழகாக இருந்தது.
முதலில் ஸ்கேல் சகிதமாக என்னை அவன் பார்த்தபோது கொஞ்சம் பயந்தான் போல. போகப் போகப்
பழகப் பழகப் பயங்கர வால். என்னிடமிருந்த அந்த ஸ்கேலில் அதிகமாக அடிவாங்கியவன் அவன்
தான். வலித்தபோதும் கையை உதறிக்கொண்டு சிரித்துக் கொண்டே இருப்பான். யாராவது அவனைப்
பற்றிய புகார்களைச் சொல்லும் போதோ, அருகிலிருக்கும் பிள்ளையை/பையனை அவன் தொல்லை பண்ணிக்
கொண்டிருக்கையிலோ, “ராஜே........ஷ்” என அழுத்தமாக அழைத்தால் போதும். பக்கத்தில் ஓடி
வந்து விடுவான். நானே எதிர்பார்க்காதபோது என்னிடம் கையை நீட்டிக்கொண்டு,
“என்ன மிஸ்.. அடிக்கப் போறீங்களா? அடிங்க. எனக்கு
வலிக்கவே வலிக்காது”
என்று சிரித்துக் கொண்டே அவன் சொல்லும்போது பலமுறை
நானும் சிரித்துவிடுவேன். சிலமுறை “உன்னை இப்படியே விடமுடியாது” எனச்சொல்லி அவனை அடித்தும்
விடுவேன். அவன் கையை உதறிக்கொண்டு போன பின்பு வலித்துக் கொண்டிருக்கும் எனக்கு!
இரவு ஒன்பதரை மணிக்கு அவனை அழைத்துச் செல்வதற்காக
வரும் அவனுடைய பாட்டி அவனிடம், “என்னல.. சும்மா வார? மிஸ் கிட்ட தேங்க்யூ சொல்லிட்டு
வரவேண்டாமா?” எனக்கேட்க, உள்ளே திரும்பி வந்து கொஞ்சம் கூட மதிக்காமல் நக்கலாக அவன்
என்னைப் பார்த்து “மிஸ் டாட்டா” எனக் கூறிவிட்டுச் செல்ல, அவன் பாட்டியிடம் அதுவரை
எனக்கிருந்த பில்டப்புகள் எல்லாம் சுக்கு நூறாக உடைந்துபோய்விடும்.. “இந்த மரியாதய
எல்லாம் வேணும்னு நான் கேட்டனா?” என அந்தப் பாட்டியிடம் ஒரு கேள்வி கேட்கவேண்டும் போலத்
தோன்றும் :-)
அடுத்தது செல்வா. மிகவும் க்யூட். படித்தது யு.கே.ஜி.
பேசுவது எல்லாம் பாட்டி மாதிரி. படிப்பில் எப்பவும் ஃபர்ஸ்ட்.. எல்லோரிலும் சின்னவன்.
கற்பூர புத்தி. வந்து உட்கார்ந்தவுடன் தானாக நோட்டையும் டையரியையும் எடுத்துக் கொண்டு
என்னிடம் வந்துவிடுவான். திரும்பிக் கூட பார்க்கத் தேவையில்லை. ஒழுங்காக நீட்டாக எழுதி
முடித்துவிடுவான்.
ஒரு நாள் வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இருந்த அனைவரும் கூச்சலிட செல்வா மட்டும் அமைதியாக உட்கார்ந்திருந்தான். அவசர விளக்கைப்
போட்டுவைத்தும் கூட பேசாமல் அப்படியே இருந்தான். இருட்டில் பயந்துவிட்டான் போல என நினைத்து,
“என்ன செல்வா, அமைதியா இருக்க?” என நான் கேட்க, “நான் ஏசு சாமி கிட்ட ப்ரேயர் பண்ணிட்டு
இருக்கேன்.. ஜீசஸ் ஜீசஸ்.. எங்களுக்கு கரண்ட் வரனும், நாங்க ஹோம் வொர்க் எல்லாம் படிக்கனும்,
வீட்டுக்குப் போனும்னு ப்ரேயர் பண்ணுதேன்” என்று சொன்னானே பார்க்கலாம்.
இன்னொரு நாள் இப்படித்தான், “செல்வா, நீ படிச்சு
என்ன வேலைக்குப் போற?” என்று கேட்டதும், “நான் கலெக்டர் ஆவேன். நான் சுபா மிஸ்ஸ மாரியே
ஐ.ஏ.எஸ்.படிப்பேன்னு அம்மா கிட்ட சொல்லியிருக்கேன்” என அவன் கூறவும் வாயடைத்துப் போனேன்.
செல்வாவின் அம்மா ஒரு பெண் காவலர். அவனை விட மென்மையானவர்.
என்னைப் பார்க்கும் போதெல்லாம், “என்ன மிஸ்.. செல்வா நல்லா படிக்கிறானா? ஃப்யூச்சர்ல
நல்ல வருவானா? நான் எப்பவும் உங்களைப் பத்தி தான் அவன் கிட்ட சொல்லிட்டே இருப்பேன்.
சுபா மிஸ்ஸை மாரியே ஐ.ஏ.எஸ். படிச்சு கலெக்டர் ஆகனும்னு. (நிற்க: ஐ.ஏ.எஸ்.க்குப் படிக்கிறது மட்டும் தான் சுபா மிஸ் மாதிரி)
சரின்னு சொல்லியிருக்கான்.. பார்ப்போம். நல்ல படிச்சிருவானா மிஸ்?” என அப்பாவியாக கேட்கும்
இப்படி ஒரு தாய்...அப்படி ஒரு மகன். நான் என்ன பதில் சொல்லியிருப்பேன்?
(சேட்டைகள்
தொடரும்...)
*
11 comments:
குழந்தைகளின் குறும்புகள் ரசிக்கும்படி இருந்தது..வாழ்த்துகள்..சேட்டைகளைத் தொடருகிறேன்..இன்ட்லியிலும் யுடான்ஸிலும் இணைத்துவிட்டேன்..
அன்போடு அழைக்கிறேன்..
மௌனம் விளக்கிச் சொல்லும்
Thanks for sharing
//அவன் கையை உதறிக்கொண்டு போன பின்பு வலித்துக் கொண்டிருக்கும் எனக்கு!// மெருகேறிய எழுத்து நடை சுபா... வாழ்க..
//அவன் கையை உதறிக்கொண்டு போன பின்பு வலித்துக் கொண்டிருக்கும் எனக்கு!//
அப்படியே விட்டிருந்தா ”மடக்கி” யாகவும் கொஞ்சம் மெனக்கெட்டா கவிதையாகவும் ஆக வேண்டிய வரிகள்.
கட்டுரை நடையில் பின்னுதிய.
நல்ல கட்டுரை இதை இதைத் தான் வரவேற்கிறோம்.
”தீர்த்தபதி”சுந்தரேசன்
புது வருஷ வாழ்த்துக்கள்
தீசு
Good one suba!!! I can understand your joy in teaching... try to pursue those happy days again....
கதை மிகவும் அருமை
ரசிக்கவைக்கும் மழ்லை உலகம்! பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்..
கள்ளமில்லா குழந்தகளிடம் நாம் கற்க வேண்டியதும் நிறையவே உள்ளன.....
அருமையான சேட்டைகள் தொடரட்டும்
really niz plz share like tat post
Post a Comment