முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கவிதைகள்

நான் ரசித்த பிரமிள், ஆத்மாநாம், கல்யாண்ஜி மற்றும் கலாப்ரியாவின் கவிதைகள் உங்களுக்காக...



வாக்கு

சரி இது தவறது
என்று உணர்ந்துருகி
அறிவில் தெளிந்ததை
முறை பிசகற்று
வெளியிடும் தவம்
சுய வெளியீடல்ல.
சுயத்தின் எல்லைக்குள்
நில்லாத உயிருக்கு
அதுவே வேரும்
கிளையும் இலையும்
புராணனும் பிராண
வெளியின் உயிரும்.
சுயத்தை மீறி
உலவும் வெளியில்
உள்ளல் உடன் பூண்டு
சொல்லாயிற்று.
உணர்வில் நான் நீ
இருமை உருகி
அறிவில் ஒளிர்ந்து
கருவும் உருவும்
பிசகாது பிறந்து
பொருளயிற்று.
சுயத்தின் சுமை
அற்ற பொருளே
பறக்கும் பரந்து
ஆழ்ந்து நிலைக்கும்.
இதனால் தான் போலும்,
‘சொல்ல வந்ததை
முறையற்று வெளியிட்டால்,
அர்த்தம் மட்டுமல்ல
உயிரும் ஒருவிதத்தில்
சிதையும்’ என்றான்
கிரிட்டனிடம் அன்று
பிளேட்டோ.
*
லயம், அக்டோபர் 1995.

-    -  பிரமிள்


கண்டிப்பாக

விற்பனை
ஒரு அழைப்பு
நீங்கள்
ஏதாவது ஒரு இடத்திலாவது
வாங்கியாக வேண்டும்
மனைவியை
பிள்ளைகளை
இத்துடனில்லாது
கடைகளில் ஏதாவது
இன்றைக்கு
இலக்கியம் ஒரு பொருள்
அது உயிரல்லாதது
உயிருள்ள இலக்கியம்
இன்றைக்கு
மௌனமாய்ப் பேசிக்கொண்டிருக்கின்றது
நீங்கள்
ஏதாவது ஒன்றைச் சொல்லியாக வேண்டும்

-    -  ஆத்மாநாம்


வருகை

காக்கையின் ஒற்றை இறகைத்
தலையணைக்கு அருகில் வைத்து
உறங்கப் போன குட்டிப் பெண்
கேட்டது
‘சொப்பனத்தில் மயில் வருமா?.
தாத்தா பதில் சொல்லி
தலை வருடி விடுகிறார்,
‘மயில் கோபித்துக் கொள்ளாதா
காக்கைச் சிறகைப் பார்த்தால்?.
பதில் வரக் காணோம்,
தூங்கிவிட்டது.
அதற்குள்ளாகவா
மயில் வந்திருக்கும்?

-     -  கல்யாண்ஜி


மூன்று கவிதைகள்

1.    இன்றும் விற்றுவிட்ட
முற்றத்துச் சிமெண்டுத் தளத்தில்
கன்றுக் குட்டியின்
கால்த் தடங்கள்.

2. வழி புலப்படாத இருளில்
கிராமத்துத் தெருவில்
காலில் மிதிபட்டது
மின்மினி.

3. தைக்கும்
கடிகாரத்தில்
மணி காட்டும்
தராசில் பணம்
நிறுக்கும்;
முள்
எங்கும் தவறாக.

-    -  கலாப்ரியா


கருத்துகள்

Yaathoramani.blogspot.com இவ்வாறு கூறியுள்ளார்…
மிக மிக அருமையான கவிதைகள்
பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாரதி இன்று இருந்தால்

  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழ்க் குடியின் மணிமகுடமே.. பைந்தமிழ்த் தேர்ப்பாகனே.. பாரதியே.. இன்று நீ இருந்தால்... கல்பனா சாவ்லாவையும் கிரண் பேடியையும் கண்டு பிரமித்துப் போவாயா.. அல்லது.. 'ஆதிக்கம்' செய்யும் ஆண் வர்க்கத்தின் அடிமைச் சின்னங்களாய்.. காவியம் படைக்காமலே காணாமல் போன நம் கண்ணம்மாவையும் செல்லம்மாவையும் பார்த்துப் பரிதவித்துப் போவாயோ.. தெரியவில்லை! ஐந்து வயதில் ஐம்பது புத்தகங்களும் ஈரைந்து வயதில் இணையதளமும் என்று சாதனை படைக்கும் நம் பாரதச் சிறுவர்களைக் கண்டு களிப்பாயா.. அல்லது.. கரன்சிகளுக்குள்ளே காணாமல் போன 'கல்விக் கலை'யை கனவிலேயே கற்றுக் கொள்ளும் ஏழை 'ஏகலைவன்'களை எண்ணிக் கொதிப்பாயோ.. தெரியவில்லை! ஆழிப்பேரலையால் அடித்துச் செல்லப்பட்ட 'மனித சாதி'க்கு அன்பாலே அருமருந்திட்ட அன்னை உள்ளங்களை எண்ணி ஆனந்தம் கொள்வாயா.. அல்லது.. ஆயிரம் சாதிக்கொடிகள் உயரே பறக்க தன் உடலை மறைத்துக் கொள்ள ஓர் ஒற்றைத் துணிக்கு ஏங்கித் தவிக்கும் ஏழையைப் பார்த்து ஏமாற்றம் கொள்வாயோ தெரியவில்லை! தாய்நாட்டைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாத ...

தமிழ் vs சமஸ்கிருதம்

நாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா ? அதைத் தான் நானும் “ தீ ” விரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் .             சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது . துருக்கி தான் Indo-European மொழிகள் உருவாகிய இடம் என்று . “Indo” என வந்ததால் இந்திய மொழிகள் எல்லாமே இதில் அடக்கம் என நினைத்து ஓர் அதிர்ச்சியுடன் அதைப் பற்றிப் படிக்கத் தொடங்கினேன் . “ இதில் என்ன அதிர்ச்சி ” என்று கேட்பவர்களுக்கு – “ பின்னே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கியங்களைக் கொண்ட நம் ‘ தமிழ் ’ மொழியின் பூர்வீகம் துருக்கி என்றால் எப்படி இருக்கும் ?”             நிறைய வாசித்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தது , Indo-European மட்டுமல்ல   மேலும் பல மொழிக் குடும்பங்களும் அவற்றின் கீழே எக்கச்சக்கமான உப மொழிக் குடும்பங்களும் (Indo-Iranic, Indo-Pacific, Indo-Germanic etc.) பிரிவு ...

கதையின் கதை

... “ அ ந்த ராஜாவும் மந்திரியும் தனித்தனிக் குதிரையில ஒரு பெரிய்ய்ய ஆலமரம் ஒன்னைக் கடந்து போய்ட்டு இருந்தாங்களாம். ரொம்பக் களைச்சுப் போயிருந்த அந்த ரெண்டுபேருல ஒருத்தரான மந்திரிக்கு மட்டும் ஆலமரத்தில அமர்ந்திருந்த அந்த ஆண்கிளியும் பெண்கிளியும் பேசிட்டு இருந்த சத்தம் தெள்ளத்தெளிவாக் கேட்டுச்சாம். “இதோ குதிரையில் போகிறார்களே ஒரு ராஜாவும் மந்திரியும், இவர்களைக் கவனமாகப் பார்த்துக்கொள். இந்த ராஜாவுக்கு எண்ணி இரு பௌர்ணமிகளுக்குள் உயிர்போகும் அபாயமிருக்கிறது. யார் நினைத்தாலும் அவனைக் காப்பாற்றவே முடியாது! அவனது உயிர் ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி இருக்கும் ஒரு குகையில் கூண்டிற்குள் கைதாகியிருக்கும் ஒரு பஞ்சவர்ணக்கிளியின் விடுதலையில் இருக்கிறது. இந்த ராஜா அவன் கையாலேயே அதை விடுவித்தாக வேண்டும்...” “ இரு பௌர்ணமிகளுக்குள் அவன் அந்தக் கிளியை விடுவித்து விட்டால்?” “அதற்கு வாய்ப்பு இல்லை. ஏனென்றால் இந்த ராஜாவின் உயிர் பற்றிய ரகசியம் அறிந்தவர்கள் இந்த உலகினில் மூன்றே பேர்தான். ஒன்று நான்; ஒன்று நீ; மற்றொன்று அவனது உடன் இருந்து இப்போது நாம் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருக்கும் அந்த மந்திரி. ராஜாவின் ...