முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முகமூடி


சில பல காரணங்களால் ப்ளாக் பக்கமே எட்டிக்கூடப் பார்க்கமுடியவில்லை. Now I am back :) வெட்டி ப்ளாக்கர்ஸ் போட்டிக்காக நான் அனுப்பிய சிறுகதை. (இரண்டாவது சுற்றுக்குக் கூடப் போகவில்லை) :) படித்துவிட்டுப் பின்னூட்டமிடுங்களேன்?

நான் உங்களுக்குப் புரியாத பாஷை ஒன்றில் பேசப்போகிறேன். அல்லது புரிந்த பாஷையில் புரியாத வார்த்தைகளை இழைத்துப் பேசி என் மனப்பாரத்தைச் சற்று இறக்கிவைக்கப் போகிறேன். உங்களுக்குப் புரியப்போவதில்லை என்று இப்போது நான் சொன்னதை அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டாம். புரிந்துகொண்டால் மட்டும் எனக்காக நீங்கள் என்ன கிழித்துவிட முடியும் என்ற மனச்சலிப்பே நான் அப்படிச் சொன்னதற்குக் காரணம்.

நீங்கள் சற்றே எரிச்சலுற்றாலும் தொடர்ந்து படிக்கிறீர்களென்பதே எனக்கு ஆறுதலாக இருக்கிறது. இதற்குமேல் உங்களது கவனம் நீங்கள் வாசிக்கப்போகும் வார்த்தைகளிலேயே மையம் கொண்டிராமல் அவற்றின் சாரத்தில் இருக்கட்டும். ஏனென்றால், முள்கிரீடம் அணிந்து பாவிகளுக்காகச் சிலுவையைச் சுமந்து சென்ற இயேசுவைப் போல இவ்வார்த்தைகள் எனக்காக என் துயரத்தைச் சுமக்கவிருக்கின்றன. அச்சிலுவையில் அறையப்பட்டு மரித்த கிறித்துவைப் போல உங்களிடம் நான் பகிர்ந்துகொள்ளப்போகும் இவ்வார்த்தைகளில் என் துயரம் மரித்துவிடப்போகிறது என்று அப்பாவியாக இம்முறையும் நான் நம்பியிருந்து ஏமாறப்போவதில்லை. ‘இம்முறையும்என்று சொல்கிறேனே? அதனர்த்தத்தை நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள். அதற்குப் பிரம்மப்பிரயத்தனமொன்றும் தேவையில்லை. நான் கிடந்து, “இவ்வார்த்தைக் கனிகளைப் புசிக்கப்போகும் நீங்கள் ஏவாளோ ஆதாமோ கிடையாதென்று குறியீடுகூட்டிக் கூறினால் உங்களுக்கு விளங்குமா? உங்களுக்கு விளங்கினாலும் நான் எழுதும் என் கதையிலேயே பாவக்கனியைக் கைநீட்டும் ஒரு சாத்தானின் கதாப்பாத்திரத்தைச் சித்தரித்து எனக்கு நானே சூட்டிக்கொள்ளும் அவசியம் கிஞ்சித்தும் எனக்கில்லை.  முதல் கட்டம், இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டமென முன்னேறி, ஸர்ப்பங்களால் கொத்தப்பட்டும் ஏணிகளிலேறியும் தத்திக்கொண்டிருக்கும் என் கதைக்குப் பரமபதம் கிடைக்கப்போவது பிரளயத்தில் தான். அப்போது ஆனந்தத்தாண்டவம் புரியப்போகும் ருத்ரனின் முகச்சாயலில் என்னழகு தெரியலாம்.   

இப்படி இப்போதைக்கு நான் யாரென்றே உங்களுக்குத் தெரியாத நிலையில் என் நாட்குறிப்பின் பக்கங்களை நீங்கள் படிப்பதற்காகத் திருப்புகிறேன். இளமை ததும்பும் ஓர் இருபதுவயது இளம்குமரியின் உள்ளத்தில் உறைந்துகிடக்கும் ரகசியங்கள் சிலவற்றை நீங்கள் அறிந்துகொள்ளப்போகிறீர்கள். மன்னிக்கவும், சென்ற வரியின் பன்னிரெண்டு வார்த்தைகளுள் ஒன்று, உண்மையாக இல்லாமல் இருக்கலாம். அவ்வார்த்தையின் அர்த்தம் அல்லது பரிமாணம் எனக்குத் தெரியாது என்பதே அதற்குக் காரணமேயொழிய உங்களை நான் ஏமாற்ற எத்தனிக்கவில்லை. தடுப்புக்குப் பின்னாலிருக்கும் ஒரு பாதிரியாரிடம் மண்டியிட்டுப் பாவமன்னிப்பு கோருவதைப் போல முகம்தெரியாத உங்களிடம் என் உண்மைகளை எல்லாம் கொட்டிவிட எனக்கென்ன அவசியம் என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. முகம் தெரியாத உங்களிடம் என் ரகசியங்களைச் சொல்லுவது தான் எனக்கு வசதியாயிருக்கிறது. கேளுங்கள், இந்த ரகசியங்களைப் படித்து முடித்து நீங்கள் நிமிரும்போது உங்கள் கண்முன்னால் நான் நின்றுகொண்டிருந்தால் கூட உங்களால் என்னை அடையாளம் கண்டுபிடிக்க முடியாதபடிக்கு எனக்கு நடிக்கத் தெரியும். மனிதனுக்கு நடிப்புகம்பன் வீட்டுக் கட்டுத்தரிக்குக் கவிபாடவா கற்றுத்தர வேண்டும்?  

ஆனால், உங்கள் முன்னால் நிற்கையில் மட்டும்தான் நான் நடிக்க நேரிடும். நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இந்த உண்மைவிளம்பலின் ஒரு வார்த்தையைக் கூட நீங்கள் உரசிப்பார்க்கத் தேவையிராது. ஒரு ரயில் சினேகிதியிடம் ஏற்படுத்திக்கொள்ளும் திடீர் நட்பைப் போல, நான் சொல்லுவதைக் கேட்க ஆவலாக அமர்ந்திருக்கும் உங்களோடு, ஒரு திடீர் உறவை உங்களின் பரிபூர்ண சம்மதத்துடன் இக்கணம் முதல் நான் ஏற்படுத்திக்கொள்ளட்டுமா? நான் சொல்லியிருப்பதைப் போல நீங்கள் ஆவலுடன் இருந்தீர்களானால் அதற்குக் காரணம் நீங்கள் ஓர் ஆணாகத்தான் இருக்க வேண்டும் என்ற பொதுப்புத்தி எனக்கில்லை. அதைத் தவிர வேறு என்னென்ன காரணங்கள் இருக்கக்கூடும் என்று ஆராயலாம். ஆனால் அந்த ஆராய்ச்சியில் இறங்கினால் நான் சொல்லவருவதைச் சொல்ல எனக்கு மறந்துபோகலாம்.

உங்கள்முன் என் முகமூடியை எப்போதோ கழற்றியாகிவிட்டது. இப்போது ஒரு மருத்துவரிடம் சிகிச்சைக்காக நின்றுகொண்டிருக்கும் ஒரு நோயாளியின் இடத்தில் என்னை உங்கள்முன் இருத்திப்பார்க்கிறேன். முகமூடி இல்லாமல் உங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதே எனக்கு நம்பவியலாத ஓர் ஆச்சர்யமாக இருக்கிறது. ஏன் என்று கேட்கிறீர்களா? என் கண்களை நேராகப் பார்த்த யாருமே அதற்குமேல் என் வார்த்தைகளைக் காதுகொடுத்துக் கேட்டதில்லை. என் மனத்தின் ஆழத்திலிருந்து கதறும் என் உயிரின் ஓசை அவர்களது இதயச்சுவர்களை ஊடுறுவியதில்லை. மாறாக, இப்போது என் மனம் உங்கள் மனத்துடன் உரையாடிக் கொண்டிருக்கிறது; என் அதிர்வுகளை, வளைத்துச் சுழித்து எழுதும் இவ்வெழுத்துக்களின் மூலம் உங்களுக்கு அது கடத்திக் கொண்டிருக்கிறது.

நான் பேசுவது வழவழா கொழகொழா என்று இந்நேரம் உங்களுக்குத் தோன்றியிருக்கலாம். அதற்கும் காரணம் அந்த முகமூடி கழற்றல்தான். கோபித்துக்கொள்ள வேண்டாம். என் உளக்குமுறல்களைக் கேட்கும் அளவுக்கு உங்களுக்குப் பொறுமையிருக்கிறது என்பதை எப்போதோ நான் அறிந்துகொண்டேன். அதில் எனக்கு ஆனந்தம்.

ஆனந்தம் என்ற வார்த்தையைத் தட்டச்சும் போதே என் மனதைக் கவலை ஆட்கொண்டுவிடுகிறது. இவ்வளவு பிரச்சனைகளை வைத்துக்கொண்டு உன்னால் எப்படிச் சிரிக்கமுடிகிறது என்று என் புடதியில் அடித்து என்னிடம் அது கேட்கிறது. ஓர் இழவுவீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து உரக்கச் சிரித்துக் கொண்டிருப்பவனை நோக்கும் விநோதப் பார்வையை என்மீது அது செலுத்துகிறது.

பதின்மூன்று வயதில் என் பக்கத்து வீட்டுப் பையனை நான்நோக்கஆரம்பித்திருந்தேன். நான் எங்கே போனாலும் அனைவரது பார்வையையும் கவர்ந்துவிடும் வழக்கம் அவனிடமும் பொய்க்கவில்லை. நான் அவனைப் பார்ப்பதை அறிந்திருந்தும் அவன் அதைத் தவிர்க்க நினைக்கவில்லை. ஒரு சமயம் என் வீட்டிலுள்ள அனைவரும் தொலைவிலிருக்கும் அங்காளத்தம்மன் கோவிலுக்குச் சென்றுவிட அவனை என் வீட்டுக்கு வருமாறு ரகசிய அழைப்புவிடுக்க நினைத்து, ஒரு சீட்டில் எழுதி ஜன்னல் வழியே அவனது அறைக்குள் எறிந்துவிட்டு வந்தேன். நான் நினைத்தவாறே சில நொடிகளில் அவன் என் வீட்டுக்கே வந்துவிட்டான். எனக்கு அவனிடம் பேச நிறைய இருந்தது. ஆனால் பொங்கிவரும் வெட்கத்தை மறைத்து எப்படி அவன் முன்னால்போய் நிற்பது என்ற கேள்வி என்னை வதைத்தெடுத்தது. அவன் மெல்ல நெருங்கிவந்து என் இடது தோளில் கைவைத்தான். மெதுவாக என் கன்னத்தைத் தடவினான். எனக்கு ஜிவ்வென்று இருந்தது.

நான் உடனே எனது அறைக்குள் ஓடிச்சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டேன். என் உடைகளைக் களைந்துவிட்டு யாருக்கும் தெரியாமல் அலமாரிக்குள் மறைத்துவைத்திருந்த மாம்பழக்கலர் பட்டுப்பாவாடை, அரக்குத் தாவணி, ஜாக்கெட்டை எடுத்து உடுத்திக்கொண்டேன். கண்ணாடியின் முன் நின்று பார்த்தபோது அவ்வளவு அழகாகத் தெரிந்தது. அவசர அவசரமாக வகிடெடுத்துத் தலையை வாரினேன். மேஜையிலிருந்த கண்மையை எடுத்து இரு கண்களிலும் படியத் தீட்டிக்கொண்டேன். நெற்றி நிறைய சாந்து பொட்டால் பெரிய திலகமிட்டுக் கொண்டேன். அதே பரவசநிலையோடு வெளியே வந்தேன்.  

தலைகுனிந்தவாறே நான் வெளியே வந்து பார்க்கையில் எனக்காக அவன் கண்களில் ஆயிரம் எதிர்பார்ப்புகளோடு காத்துக் கொண்டிருந்தான். என் அருகில் வந்து என்னை இறுக அணைத்து என் இதழ்களில் முத்தமிட்டான். நான் மிகவும் அழகாக இருப்பதாகக் கூறினான். அவனது ஸ்பரிசம் என்னை என்னென்னவோ செய்தது.

எங்களுக்குள் இத்தகைய சந்திப்புகள் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நடந்தேறின. நான் அவனை மனதார விரும்பத் தொடங்கியிருந்தேன். அவனது ஆண்மை என்னை அலைகழித்தது. அவனது நெருக்கத்தில் சொர்க்கம் எப்படியிருக்கும் என்பதை நான் உணர்ந்திருந்தேன். இதோ உங்களிடம் நான் பேசிக்கொண்டிருப்பதைப் போல முகமூடியில்லாமல் என்னால் அவனிடம் பேச முடிந்தது. நான் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அவனுக்குப் புரிந்தது. நடந்தவையனைத்தும் எனக்குப் புதிதாக இருந்தன. அப்படியே அவனோடு என் வாழ்க்கையைத் தொடர்ந்திருந்தால் இந்த உலகிலேயே பெரிய அதிர்ஷ்டசாலி நானாகத் தான் இருந்திருப்பேன். ஆனால் விதி என்று ஒன்று இருக்கிறதே? இப்போது உங்களோடு ஓர் உறவை ஏற்படுத்திக்கொடுத்திருக்கும் அதே விதிதான் அன்று என்னிடமிருந்து அவனைப் பிரித்துவைத்தது. அவன் என்னை அனாதையாகத் தவிக்கவிட்டுச் சென்றபோது நான் அனுபவித்த அதே வலியை நீங்களும் எனக்குக் கொடுத்துவிடாதீர்கள் என உங்களிடம் நான் கெஞ்சப்போவதில்லை.

ஒரு காதல் தோல்வியைச் சந்தித்திருப்பதெல்லாம் ஒரு விஷயமா என்று நீங்கள் கேட்கலாம். கேளுங்கள். அப்போதுதான் அந்தக் கேள்வியின் பின்னணியில் திரைமறைவில் தன் கண்களைச் சுருக்கி அழகாகச் சிரித்துக் கொண்டிருக்கும் உங்கள் பழைய காதலி அல்லது காதலனின் முகம் உங்களுக்கு நினைவுவரும். நிறுத்துங்கள்! கழற்றாதீர்கள்! உங்கள் முகமூடியை கழண்டுபோகவிடாமல் இறுக்கமாகப் பற்றிக் கொள்ளுங்கள். நிராகரிப்பின் உச்சத்தில் மெல்ல மெல்ல அவ்வுருவம் மறைந்து காற்றில் கரைவது உங்கள் முகமூடிக் கண்களுக்குத் தெரியப்போவதில்லை. அவ்வுருவத்தின் அமானுஷ்யச் சிரிப்பு உங்கள் முகமூடியை ஊடுறுவப்போவதில்லை. நீங்கள் மிகத்தைரியமாக மறுபடியும் அந்தக் கேள்வியை என்னிடம் கேட்கலாம். உங்கள் நேரத்தை, ஆயுளின் ஒரு பகுதியைத் திருடிக் கொண்டிருக்கும் ஒரே காரணத்துக்காக அக்கேள்விக்கு நான் பதில் சொல்லுவேன் என நீங்கள் நினைத்தால் அது என்னைத் தர்மசங்கடத்துக்குள்ளாக்கும்.

மறுபடியும் தகாத வார்த்தைகளால் என்னைத் திட்ட எத்தனிக்கும் நீங்கள் இன்னொரு கேள்வியை என்னிடம் கேட்க மறந்துவிட்டீர்கள் அல்லது அவ்வாறு ஒரு கேள்வி எழுந்ததை என்னிடம் மறைத்துவிட்டீர்கள். அது உங்களுக்குத் தேவையில்லாதது என்று சொல்லிமட்டும் என்னைப் புண்படுத்திவிடாதீர்கள். நான் முகமூடியைக் கழற்றிவிட்டேன். அக்கேள்வியை நீங்கள் என்னிடம் கேட்காவிட்டாலும் கூடப் பரவாயில்லை; அக்கேள்விக்கான பதிலை நான் சொன்னவுடன் என்மீது அவலப்பார்வைகளை அமிலத்தைத் தெளிப்பதைப் போலத் தெளித்துவிடாதீர்கள். என் உடலில் ஏற்கனவே அவைபோன்ற எண்ணற்ற தழும்புகள் ஏற்பட்டுள்ளதை, வேண்டுமானால் என் உடைகளை விலக்கிப் பார்த்துக்கொள்ளுங்கள். இனிமேல் உங்களிடம் மறைப்பதற்கு என்ன இருக்கிறது? அத்தழும்புகள் கூறும் கதைகளும் உங்களுக்குத் தேவையற்றவையாக இருக்கலாம். ஆனால் அவற்றைப் போலவே பழைய அல்லது புதிய பின்நவீனத்துவக் கதை ஒன்றைத் தீட்டுவதற்கு அவை உங்களுக்கு ஒரு களம் அமைத்துக் கொடுக்கலாம்.

கதை என்று சொன்னவுடன் நீங்கள் எழுதமறந்த அல்லது எழுத நினைத்த அல்லது எழுதிப் பாதியில் விட்டுவிட்ட கதையொன்றை நோக்கி உங்கள் மனதைச் செலுத்திவிடாதீர்கள். என்னிடம் நீங்கள் கேட்கவேண்டிய அந்தக் கேள்வியை நானே உங்களுக்கு நினைவூட்டுகிறேன். இதோ நான் தட்டச்சு செய்துவிடுகிறேன். உங்கள் சார்பில் நீங்கள் ஒருமுறை அதனை உரக்க வாசித்துவிடுங்கள்.

உன் காதல் ஏன் தோல்வியடைந்தது?”

நீங்கள் வாய்விட்டுக் கேட்ட பிறகு என்னால் எப்படி அதற்குப் பதில் சொல்லாமல் இருக்கமுடியும்? அந்தப் பதிலில் தானே எனது சுயம் இருக்கிறது. இல்லை இல்லை.. எனது முகமூடி இருக்கிறது. பாருங்கள் நானே தெளிவில்லாமல் இருக்கிறேன். பதிலைக் கேட்கப்போகும் உங்களுக்காவது ஏதாவது விளங்கினால் சொல்லுங்கள். நிற்க. இதுவரை நான் உங்கள் பெயரைக் கேட்கவில்லையே?

உங்கள் பெயர் என்ன?

எனக்கு இரண்டு பெயர்கள். நானாக எனக்கு வைத்துக்கொண்ட பெயர் ஆனந்தி. என் அம்மா அப்பா எனக்கு வைத்த பெயர் ஆனந்த்.

இப்போது முந்தையக் கேள்விக்கான பதிலை நான் சொல்லாமலே நீங்கள் தெரிந்துகொண்டிருப்பீர்கள்

இருக்கிறீர்களா? உங்கள் பெயரைக்கூடச் சொல்லாமல் எங்கே ஒழிந்து போனீர்கள்?

கருத்துகள்

வருண் இவ்வாறு கூறியுள்ளார்…
Being "gay" is not a big deal these days. They should come forward and speak out and find like-minded people on-line. In the internet world, they can be anonymous or with a "mask" just like your "hero(ine)" in this story!

I have seen "boys" like these get attracted towards other boys. But their parents did not know how to deal with such kids. I think it is changing today. However, being a "minority" it is going to be a problem for them in the ignorant society. They need to understand people's ignorance and deal with it.

Well, 13-year old having a crush on someone is just a "crush" even if he is "gayish". It generally fails whether he is gay or straight. I dont buy the justification that it failed because it is "gayish love"! Now love of such could easily fail or not?

Let me talk to the "heroine"!

Ananthi might be able to find her "true love" soon. Move on! It is a very big world and there is plenty of love around here! :)
திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
வழவழா கொழகொழா என்று இல்லாமல் உரையாடல் நன்றாகவே உள்ளது... வாழ்த்துக்கள்...
திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
பாலச்சந்தர், பாரதிராஜா - சில காட்சிகள் மற்றவர்கள் சொன்னால் தான் புரியும்... பாக்யராஜ் போல் சொல்லி விட்டேன்... உங்களுக்கு புரிகிறதா...?
கவிஞர்.த.ரூபன் இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம்
கதை நன்றாக உள்ளது...
மதுவுண்டு கழிக்கும் வண்டுகள் போல....மனிதனின் மனம்.
வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@வருண்

Thank u for ur long review :)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@திண்டுக்கல் தனபாலன்

நன்றி டிடி சார்
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@திண்டுக்கல் தனபாலன்

புரிஞ்சவரை சரி :)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ரூபன்

ம்ம்.. நன்றி!
மகிழ்நிறை இவ்வாறு கூறியுள்ளார்…
இவ்வளவு வித்தியாசமான ஒரு கதை சொல்லல். கமலஹாசனின் மனிதன் பாதி மிருகம் பத்தி போல விவரிப்பால்(முதல் ரெண்டு பத்திகள்)கொஞ்சம் ஆழ்ந்து படிக்கவேண்டியுள்ளது. அது குறையல்ல ததும்பும் நிறை. வாழ்த்துக்கள் !
திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

வலைச்சர தள இணைப்பு : என் வீட்டுத் தோட்டத்தில்
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@Mythily kasthuri rengan

Thank U Mythili :)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@திண்டுக்கல் தனபாலன்

நன்றி. உடனே பார்க்கிறேன் :)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாரதி இன்று இருந்தால்

  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழ்க் குடியின் மணிமகுடமே.. பைந்தமிழ்த் தேர்ப்பாகனே.. பாரதியே.. இன்று நீ இருந்தால்... கல்பனா சாவ்லாவையும் கிரண் பேடியையும் கண்டு பிரமித்துப் போவாயா.. அல்லது.. 'ஆதிக்கம்' செய்யும் ஆண் வர்க்கத்தின் அடிமைச் சின்னங்களாய்.. காவியம் படைக்காமலே காணாமல் போன நம் கண்ணம்மாவையும் செல்லம்மாவையும் பார்த்துப் பரிதவித்துப் போவாயோ.. தெரியவில்லை! ஐந்து வயதில் ஐம்பது புத்தகங்களும் ஈரைந்து வயதில் இணையதளமும் என்று சாதனை படைக்கும் நம் பாரதச் சிறுவர்களைக் கண்டு களிப்பாயா.. அல்லது.. கரன்சிகளுக்குள்ளே காணாமல் போன 'கல்விக் கலை'யை கனவிலேயே கற்றுக் கொள்ளும் ஏழை 'ஏகலைவன்'களை எண்ணிக் கொதிப்பாயோ.. தெரியவில்லை! ஆழிப்பேரலையால் அடித்துச் செல்லப்பட்ட 'மனித சாதி'க்கு அன்பாலே அருமருந்திட்ட அன்னை உள்ளங்களை எண்ணி ஆனந்தம் கொள்வாயா.. அல்லது.. ஆயிரம் சாதிக்கொடிகள் உயரே பறக்க தன் உடலை மறைத்துக் கொள்ள ஓர் ஒற்றைத் துணிக்கு ஏங்கித் தவிக்கும் ஏழையைப் பார்த்து ஏமாற்றம் கொள்வாயோ தெரியவில்லை! தாய்நாட்டைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாத ...

தமிழ் vs சமஸ்கிருதம்

நாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா ? அதைத் தான் நானும் “ தீ ” விரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் .             சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது . துருக்கி தான் Indo-European மொழிகள் உருவாகிய இடம் என்று . “Indo” என வந்ததால் இந்திய மொழிகள் எல்லாமே இதில் அடக்கம் என நினைத்து ஓர் அதிர்ச்சியுடன் அதைப் பற்றிப் படிக்கத் தொடங்கினேன் . “ இதில் என்ன அதிர்ச்சி ” என்று கேட்பவர்களுக்கு – “ பின்னே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கியங்களைக் கொண்ட நம் ‘ தமிழ் ’ மொழியின் பூர்வீகம் துருக்கி என்றால் எப்படி இருக்கும் ?”             நிறைய வாசித்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தது , Indo-European மட்டுமல்ல   மேலும் பல மொழிக் குடும்பங்களும் அவற்றின் கீழே எக்கச்சக்கமான உப மொழிக் குடும்பங்களும் (Indo-Iranic, Indo-Pacific, Indo-Germanic etc.) பிரிவு ...

பொன்மொழிகள் - சுவாமி விவேகானந்தர்

நேற்று சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தையொட்டி அவரின் கருத்துக்களை நினைவுகூரலாம் என எண்ணியிருந்தேன். இன்று தான் முடிந்தது. Ø   Stand up, be bold, be strong. Take the whole responsibility on your own shoulders, and know that you are the creator of your own destiny. Ø   They alone live who live for others, rest are more dead than alive. Ø   Arise! Awake! And stop not till the goal is reached. Ø   To be good and to do good – that is the whole of religion. Ø   Strength is life, Weakness is death. Ø   All the power is within you; you can do anything and everything. Believe in that; don’t believe that you are weak. Stand up and express the divinity within you. Ø   Whatever you think, that you will be; if you think yourself strong; strong you will be. Ø   Stand and die in your own strength; if there is any sin in the world, it is weakness; avoid all weakness; for weakness is sin, weakness is death. Ø   Neither money pays, nor name pays, ...