டாக்டர் மு.வ.வை அனைவரும் அறிவோம். மதுரைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தவர். தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதச்சொல்லி சாகித்ய அகாதமி இவரைக் கேட்டுக்கொண்டதற்கிணங்க அருமையான ஒரு படைப்பை உலகிற்கு வழங்கியுள்ளார். அவரது உரைவழி தமிழ்மொழியின் வரலாற்றை நாம் பார்க்கலாம்.
![]() |
தேடுக: Khyber Pass & Bolan Pass |
தமிழ் vs சமஸ்கிருதம் பதிவில்
Proto-Dravidian பற்றிப் பார்த்தோம். தமிழில் அது “பழந்திராவிடம்” எனப்படுகிறது. இந்தியா முழுவதும் இந்த மொழி பேசப்பட்டு வந்தது. பின்னர் வடகிழக்குக் கணவாய் (Khyber
Pass) வழியாகத் துரானியரும் (Turanians)
வடமேற்குக் கணவாய் (Bolan
Pass) வழியாக ஆரியரும் (Aryans)
இந்தியாவுக்குள் வந்தனர். அப்போது பழந்திராவிட மொழி பல்வேறு மாறுதல்களைப் பெற்று பிராகிருதம் (Prakrit)
பாலி (Pali)
முதலிய மொழிகள் தோன்றின. அப்போதும் சிற்சில பகுதிகளில் பழந்திராவிட மொழியின் திரிபுகள் பேசப்பட்டு வந்தன. அந்த மொழிகளைப் பேசிய மக்கள் மற்றவர்களோடு கலக்காமல் தனித்து வாழ்ந்ததால் அம்மொழிகள் திராவிட மொழிகளாகவே நின்றுவிட்டன.
![]() |
Dravidian Languages |
கோலமி (Kolami) பார்ஜி (Parji)
நாய்கி (Naiki)
கோந்தி (Gondi)
கூ (Ku) குவி (Kuvi)
கோண்டா (Konda)
குருக் (Khurukh)
பிராகூய் (Brahui)
மால்டா (Malda)
ஒரொவன் (Oroan)
கட்லா (Gadla)
முதலிய மொழிகள் இன்றும் திராவிட மொழியினத்தைச் சார்ந்தவைகளாக இருப்பதற்குக் காரணம் அதுவே. வரவர இந்த மொழிகளைப் பேசும் மக்கள் அடுத்துள்ள மொழிகளைக் கற்று மற்ற மக்களோடு ஒன்றுபட்டு வருவதால் அவர்களின் தொகை குறைந்து வருகிறது. வங்காளத்தில் ராஜ்மஹால் மலைப்புறங்களில் வாழ்வோரும், சோடா நாகபுரியில் சுற்றுப்புறத்தில் வாழ்வோரும் இன்னும் பிறரும் இதற்குச் சான்றாக இருக்கிறார்கள்.
![]() |
Balochistan |
பலுச்சிஸ்தானில் வடமேற்குப் பகுதியில் பேசப்படும் பிராகூய் (Brahui)
மொழிக்கும் தமிழுக்கும் உரிய ஒற்றுமை சுவாரசியமானது. அந்த மொழியில் திராவிட மொழிக் கூறுகள் மிகுதியாக உள்ளன. ஆரியர் அந்த வழியாக வந்து இந்தியாவில் குடிபுகுந்த பிறகும், அவர்கள் பேசும் மொழி தனித்து இருந்துவந்தது. இரட் (இரண்டு), மூசிட் (மூன்று) முதலான எண்ணுப்பெயர்களும், மூவிடப்பெயர்களும் (Personal
Pronouns) வாக்கிய அமைப்பும் (Syntax)
மற்றும் சில இயல்புகளும் பிராகூய் மொழியில் இன்னும் தமிழைப் போலவே இருப்பது வியப்பு. 1911 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கில் (Census)
அந்த மொழி திராவிட மொழிகளோடு வைத்துக் கணக்கிடப்பட்டபோது, அதைப் பேசிய மக்களின் எண்ணிக்கை 1.7 லட்சம். இப்போது சில ஆயிரம் மக்களே பிராகூய் பேசிவருகிறார்கள்.
திராவிடர்கள் வடமேற்குக் கணவாய் (Bolan
Pass) முதல் வங்காளம் வரையில் பழங்காலத்தில் பரவியிருந்தார்கள் என்பதற்கும் பழந்திராவிட மொழி (Proto-Dravidian)
பேசிவந்தார்கள் என்பதற்கும் இவை சான்றுகளாக உள்ளன :-)
வட இந்திய மொழிகள் பலவற்றிற்கும் தென்னிந்திய திராவிட மொழிகளுக்கும் வாக்கிய அமைப்பு முறையில் இன்று வரையில் ஒற்றுமை இருந்து வருவதற்குக் காரணம், மிகப் பழங்காலத்தில் இருந்து வந்த ஒருமைப்பாடு. வட இந்தியாவில் பிராகிருதம், பாலி முதலியவை செல்வாக்குப் பெற்ற பிறகு, பழந்திராவிடமொழி தென்னிந்தியாவின் அளவில் குறுகிவிட்டது. காலப்போக்கில் தென்னிந்தியாவிலும் ஆட்சி வேறுபாடு, மலை/ஆறுகளின் எல்லை வரையறை முதலான காரணங்களால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப் பழந்திராவிட மொழி நான்கு வகைகளாக வேறுபட்டது. இந்த நான்கு மொழிகளுக்குள் நெடுங்காலமாக இலக்கிய வளர்ச்சி பெற்று வளர்ந்த மொழி தமிழ்.
‘திராவிடம்’ என்னும் வார்த்தையே பிற்காலத்தில் தோன்றியது தான். அது ‘தமிழ்’ என்ற சொல்லின் திரிபே :-)
தமிழ் -> தமிள -> த்ரமிள -> த்ரமிட -> திரபிட -> திரவிட
என்று திரிந்து அமைந்த சொல்லே அது. ஒரு காலத்தில் கன்னடத்தைக் கருநாட்டுத் தமிழ் என்றும், துளு மொழியைத் துளுநாட்டுத் தமிழ் என்றும், மலையாளத்தை மலைநாட்டுத் தமிழ் என்றும் சிலர் குறிப்பிட்டது உண்டு. ஆனால் இன்று ‘திராவிடம்’ என்னும் சொல், அந்த மொழிகள் தனித் தனியே பிரிவதற்குமுன் இருந்த பழைய நிலையைக் குறிப்பதற்கும், இவை ஓர் இனம் என்று கூறி அந்த இனத்தைக் குறிப்பதற்கும் உரிய சொல்லாகப் பயன்படுகிறது!
சரி, மீதியை அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..
கருத்துகள்
அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்...
தொடர்கிறேன்... நன்றி...
அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்...
தொடர்கிறேன்... நன்றி...