தோழி கூற்று
Nov 4, 2012
ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு இந்திய மொழிகள் சிலவற்றில் ஏதாவது ஒன்றை ஒரு முக்கியப்பாடமாக எடுத்துப் பரீட்சை எழுதலாம். அவ்வாறு கொடுக்கப்பட்டுள்ள மொழிகளின் பாடத்திட்டங்களைப் பரவலாகப் படித்துப் பார்த்தபோது, தமிழுக்கு இருக்கும் ஒரு சிறப்பு புலப்பட்டது. உங்க எல்லாருக்கும் தெரிஞ்சதுதான் அது. என்னன்னா, தமிழில் மிக மிகத் தொன்மையான இலக்கியங்கள் இருப்பது தான்! தொன்மையான இலக்கியங்கள்னு சொன்ன உடனே நம் நினைவுக்கு வருவது “சங்க இலக்கியங்கள்”.
எட்டுத்தொகை(8), பத்துப்பாட்டு(10), பதினென்கீழ்க்கணக்கு(18) – இவை மூன்று தொகுப்புகளும் தான் பொதுவாக ‘சங்க இலக்கியங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. “அந்தக் காலத்திலேயே யார் இப்படி அடுக்கடுக்கா எழுதிவெச்சாங்க?”னு யோசிக்கிறீங்களா? இதெல்லாம் அடுக்கா எழுதினது கிடையாது. பல காலங்களில் எழுதப்பட்டவைகளில் கிடைத்த பாடல்களை அழகாகப் பொருள்வாரியாகத் தொகுத்தவர்கள் தனித் தனி நபர்கள். பல பாடல்களை எழுதியவர் யாரென்ற பெயர்களே கிடைக்காமல் நாமாகப் பெயரிட்டுக்கொண்ட நிலைகளும் உண்டு. ஆச்சர்யமா இருக்குல்ல?
எட்டுத்தொகையை எடுத்துகொண்டால் எட்டு நூல்களின் தொகுப்பு அது.
“நற்றினை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை”
நற்றினை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு – இவையனைத்தும் எட்டுத்தொகை நூல்கள். இதுல நற்றினை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு எல்லாம் ‘அகப்பொருள்’ பற்றியவை. பதிற்றுப்பத்து மற்றும் புறநானூறு இரண்டும் ‘புறப்பொருள்’ பற்றியவை. மீதியிருக்குற ஒன்னே ஒன்னு – பரிபாடல். இதுல அகமும் புறமும் கலந்து வருமாம். சரி அதென்ன அகம் புறம்?
அகம் என்றால் உள்ளம். உள்ளத்தில் தோன்றும் காதல்,
காமம், அது தொடர்ந்த திருமணம், இல்லறம் – இவை தொடர்பானவற்றைப் பற்றியது அகப்பொருள்.
போர், அரசியல் போன்றவை புறப்பொருள்.
“ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன?” என
நம்மால் இருக்கமுடியும். ஆனால் காதல், திருமணம் போன்ற விஷயங்கள் பொதுவாக நம்மால் தவிர்க்கவியலாதவை.
அதனால் தான் பெரும்பாலும் ‘அகப்பொருள்’ பற்றிய நூல்கள் அதிகமாகப் பேசப்படுகின்றன. குறுந்தொகையின்
முதல் 25 பாடல்களும் புறநானூற்றில் இடையில் வரும் ஒரு பதினெட்டுப் பாடல்களும் நம் பாடத்திட்டத்தில்
வருகின்றன.
பாடல்கள் செம இண்ட்ரெஸ்டிங் :-) ஒரு பாட்டைப் பார்ப்போமா?
பார்ப்பதற்கு முன்னால் ஒரு சிறு இடைவேளை. இந்தக் காலத்தில் காதலைப் பெற்றோருக்குச்
சொல்வதற்குப் பல வழிகள் இருக்கின்றன. நேராகக் கூட்டிக்கொண்டுபோய் “இவ/இவன் தான் என்
கேர்ள்/பாய் ஃப்ரெண்ட்” என்று அம்மாவிடம் அறிமுகப்படுத்தியிருக்கும் நண்பர்களை நான்
அறிவேன். ஆனால் ‘அந்த’க் காலத்தில் அதற்கென ஒரு ‘ட்ரெண்ட்’ (போக்கு) இருந்தது.
தலைவி --> தோழி --> செவிலித்தாய் --> நற்றன்னை --> கல்யாணம்/கலாட்டா
பொதுவாக
இப்படித்தான் ஒரு பெண் தன் தாயிடம் தன் காதலைத் தெரிவிப்பாளாம் :-) ஒரு பாட்டு...
அகவன்
மகளே! அகவன் மகளே!
மனவுகோப்பு
அன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன்
மகளே! பாடுக பாட்டே!
இன்னும்
பாடுக பாட்டே! அவர்
நன்னெடுங்
குன்றம் பாடிய பாட்டே!
-
ஔவையார்
அகவுதல்
– அழைத்தல்; அகவன் மகள் – குறத்தி / கட்டுவிச்சி / சாமியை அழைத்துக் கூவிப் பாடுபவள்
/ குறி சொல்பவள்; மனவு – சங்குமணி.
அகவன் மகளே, சங்குமணி மாலையைப் போன்ற வெண்மை நிறத்து
நீண்ட கூந்தலை உடையவளே (வயசான பாட்டி) அந்தப் பாட்டைப் பாடு! அவருடைய அந்த மலையைப்
பற்றிய பாட்டைப் பாடினாயே, அதை மறுபடியும் மறுபடியும் பாடிக்கொண்டேயிரு! – என்று தோழி
குறத்தியிடம் சொல்வதாக அமைந்த பாட்டு இது. இதுல என்ன இருக்குனு கேட்குறீங்களா?
தோழிக்கு உடம்பு சரியில்லை. நாளுக்கு நாள் மெலிஞ்சுகிட்டே
போறா. என்னவெல்லாமோ வைத்தியம் பார்த்தும் ஒன்னும் சரியாகல. சரி குறி சொல்லும் குறத்தியைக்
கூப்பிட்டுக் காரணத்தைத் தெரிஞ்சிக்கலாம்னு ஒரு மலைவாழ் குறத்தியைக் கூப்பிட்டு எல்லாரும்
சுத்தி உட்கார்ந்து குறி கேட்குறாங்க. பொதுவா குறி சொல்றதுக்கு முன்னாடி அந்தக் குறத்தி
தன்னோட மலைப்பெருமையைப் பாடுவா. அப்படிப் பாடுட்டு இருக்கும்போது திடீர்னு தலைவியோட
முகம் பிரகாசமாகுது. இதைக் கவனித்த தோழி குறத்தியைப் பார்த்து “பாட்டைப் பாடு, அந்த
மலைப்பாட்டைப் பாடு, அவரோட அந்த மலைப்பாட்டைப் பாடு”னு சொல்லிகிட்டே இருக்கா. அதுக்கப்புறம்
என்ன நடக்கும்?
“அவரா? எவர்?” அப்படினு செவிலித்தாய் கேட்பாங்க.
அப்போ, “ஆமா நீங்க இந்த மாதிரி டாக்டர்கிட்ட போனாலும் சாமியைக் கும்பிட்டுப் படையலிட்டாலும்
குறிகேட்டாலும் ஒன்னும் ஆகப்போறது இல்ல. ஏன்னா, தலைவி இப்படி உடல்மெலிந்து நோய் வந்தவ
மாரி இருக்குறதுக்குக் காரணம் – ‘ஒருவன்’ அந்த மலையைச் சேர்ந்த ஒருவன் ;-) அப்படினு
தோழி சொல்லுவா. அதைச் செவிலித்தாய்(வளர்ப்பு அன்னை) நற்றாய் கிட்டச் சொல்லி நடக்கவேண்டியதைக்
கவனிப்பாங்க :-) இப்படிக் குறிப்பால் உணர்த்திக் காதலை வெளியிடும் ஒரு அழகான வழக்கம்
நம் ஊரில் இருந்திருக்கிறது! (இதுல எனக்கொரு சந்தேகம் : தலைவனுக்கும் தலைவிக்கும் ஒரே
ஊராக இருந்து, பொருள் தேடுவதற்காக அவன் அந்த மலைக்குப் போனானா? இல்ல, ஊருவிட்டு ஊருவந்து
தலைவியை லவ் பண்ணிட்டுப் போன அந்த மலையைச் சார்ந்தவனா? என்பது... தெரிந்தவர்கள் கூறவும்)
இன்னைக்குப் போதும். இன்னொரு நாள் புறநானூறு பார்க்கலாம் :-)
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
அருமையாக சொல்லி உள்ளீர்கள்... தொடர்கிறேன்... நன்றி...
அருமையான பதிவு.
வாழ்த்துகள்.
அருமையான பதிவு.
வாழ்த்துகள்.
சங்கத் தமிழை எளிதாகக் கற்றுக் கொடுப்பீர்கள் போல ....
வளரட்டும் தமிழ்ப் பணி....
மனதில் பதிந்த தடங்கள்.... பாராட்டுக்கள்.....
அருமையான பதிவு.
பாராட்டுக்கள்.....
வெற்றிவேல் அம்மைஅப்பன்
அம்மணி வெற்றிவேல்
Post a Comment