குட்டீஸ் எனப்படும் குட்டிப்பிசாசுகள் (பகுதி-2)
Jun 11, 2011
கட்டுப்பாடுடன் வளர்ந்தவளுக்கு இந்தக் குழந்தைகளைப் பார்க்கையில் ஏற்படும் எரிச்சலுணர்வு ஒருவித பொறாமையினாலோ என்று எண்ணிப்பார்த்தேன். விடை தெரியவில்லை.
காயத்ரியையும் கோபியையும் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். இருவரும் சுட்டித்தனத்தின் திருவுருவங்கள். வீட்டில் யாருடைய தொந்தரவுமின்றி தனிமையே கதியாக இருந்து பழகியவளுக்கு இந்தக் குழந்தைகளின் அருகாமை சிறிது தொந்தரவாகத் தான் இருந்தது. இருந்தாலும் இந்தத் தருணங்கள் மீண்டும் கிடைக்கப்பெறாதவை என்பதை அறிந்திருந்தமையால் அவற்றை ரசிக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளத் தொடங்கியிருந்தேன்.
எனது அறைதான் அவர்களுக்குத் “திறந்திடு சீசேம்” மந்திரம் சொல்லிக்கொண்டு உள்ளே குதித்து ஓடி கொண்டாட்டம் போடும் 'அலிபாபா குகை'. அதில் அவர்களுக்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் இருக்கும். சில பொருட்கள் என்னவென்றே புரியாதவை. ஆனாலும் அவற்றையும் எடுத்து ஆராய்ந்து பார்த்து யாரும் அறியாமல் இருந்தவாறே வைத்துவிட்டுச் செல்வது. இந்த ‘இருந்தவாறே வைத்துவிட்டுச் செல்வது’ எல்லா வஸ்துகளுக்கும் பொருந்தாது. சில சமயங்களில் டிவிக்கு மேலே எனது பேனா இருக்கும். ‘இது என்னதாச்சே!’ எனச் சந்தேகத்துடன் எண்ணிக்கொண்டிருக்கும் வேளையிலேயே காயத்ரி வந்துவிடுவாள்.
“அத்தே.. தம்பிதான் பேனா எடுத்தான். நான் எடுக்கவேயில்ல”
“பொய் சொல்லாதடி.. அவனுக்கு பேக் எல்லாம் தொறக்கவே தெரியாது. நீ தான் எடுத்துக் கொடுத்திருப்ப”
‘கண்டுபிடித்துவிட்டாளே!’ என்னும் ரீதியில் திருதிருவென விழித்து ஒரு ரவுடிச் சிரிப்பு சிரிப்பாள். சிரிக்கையில் ஒருபக்கம் மட்டும் குழிவிழும் அந்த வலது கன்னத்தைப் பிடித்து நன்றாகக் கிள்ளிவிட்டுவிட்டுக் கோபமாக இருப்பதாகக் காட்டிக் கொள்வேன். அப்படியே எழுந்து எனது அறைக்குள் சென்று கணினியின் முன்பு அமர்ந்துவிட்டுப் பார்த்தால் காயத்ரி சத்தமின்றி எனக்கு முன்பாகவே வந்து பக்கத்தில் நின்று சிரித்துக் கொண்டிருப்பாள். பின்னாலேயே அவனும் வந்து மேஜையின் இந்தப் பக்கமாக நின்று கொள்வான். ‘எப்படா கம்ப்யூட்டரை ஆன் செய்வாள்... சப்பி சீக்ஸ் (chubby cheeks) டான்ஸ் ஆடும் பொம்மையைக் காட்டுவாள்’ எனக் காத்துக் கொண்டிருந்தவள் போல ’அதை வைங்க இதை வைங்க’ என நொய் நொய்யென்று மொய்த்து விடுவாள். சரியென நானும் (வளர்ந்துவிட்டோம் என்னும்) “மெய்”மறந்து அந்தக் கார்ட்டூன் வீடியோவைப் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பேன்!
இப்படியே ஒருவாறு குழந்தைகளின் சுட்டித்தனத்தை ரசிக்கத் தொடங்கியிருந்த வேளை அது. என்னைச் சோதிக்கவென்றே ஒரு சம்பவம் நடந்தது. ஒரு நாள் வேலை முடித்து வீட்டுக்கு வந்து லேப்டாப்பைக் கட்டிலில் வைத்துக் கொண்டு இட்லிவடை ப்ளாக் படித்துக் கொண்டிருந்தேன். இடையில் அலைபேசியில் 'முக்கிய'மான அழைப்பு ஒன்று வரவே அறைக்குள் சரியாக சிக்னல் கிடக்காது என நினைத்து எல்லாவற்றையும் அப்படியே வைத்துவிட்டு அறைவிளக்கையும் அணைத்துவிட்டு இரண்டு குட்டீஸையும் வெளியே இழுத்துக் கொண்டு வந்துவிட்டேன்.
சுவாரஸ்யமாகப் பேசி முடித்துவிட்டு அறைக்குள் வந்து பார்த்தால் லேப்டாப் மூடியிருந்தது. திறந்து பார்த்தவளுக்கு அப்படியே அலறவேண்டும் போல் இருந்தது! லேப்டாப்பின் எல்.சி.டி. ஸ்க்ரீன் கல்லெறிபட்டது போல் கருப்பாக உடைந்திருந்து பயமுறுத்திக்கொண்டிருந்தது!! கீபோர்டின் மேலே எனது அலைபேசியின் இயர்ஃபோன் இருந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு ‘ஐடில்’ மோடிற்குச் சென்றிருந்த லேப்டாப்பை ‘என்னடா படத்தைக் காணோம்’ என எண்ணி மூடிவைக்கிறேன் பேர்வழி என்று அப்படியே மூடியிருக்கிறாள். உள்ளே இயர்போன் இருந்ததால் அது சரியாக மூடாமல் போகவே வைத்து அமுக்கியிருக்கிறாள் இந்த அறிவுக் கொழுந்து காயத்ரி!
“அக்கா......!” என அமைதியாக அழைத்துவிட்டு அருகில் குறுகுறு பார்வையுடன் நின்றிருந்த காயத்ரியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
(சேட்டை தொடரும்)
*
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment