குட்டீஸ் எனப்படும் குட்டிப்பிசாசுகள் (பகுதி-1)
Jun 6, 2011
“எப்படி அக்கா இவளை வெச்சு சமாளிக்கிறீங்க” என வெறுப்பின் உச்சத்தில் நான் வாய்விட்டுக் கேட்டுவிட்ட அந்தக் கேள்வியில் “இவளா கேட்டாள்” எனச் சற்று ஆச்சர்யப் பட்டுத்தான் போனார்கள் பாப்பாத்தி அக்கா.
“என்ன பவித்ரா பண்றது? நீயும் பார்க்கத் தான் செய்ற. இதுக்கு மேல எப்படி கண்டிக்கிறது? நானும் அடிச்சுப் பார்த்துட்டேன். எல்லாம் செஞ்சு பார்த்துட்டேன். ஒன்னும் நடக்கமாட்டேங்குதே!” என வருத்தப்பட்டார்கள் அக்கா.
“இங்க தான் நீங்க தப்பு பண்றீங்க.. கண்டிக்கிறது தப்பில்லை. ஆனா, எந்த விஷயத்துக்காக, எந்த நேரத்துல, எப்படி கண்டிக்கிறீங்கங்குறது தான் முக்கியம். அடிக்க வேண்டிய நேரத்துல அடிச்சா தான் அடுத்து அதைச் செய்யும்போது பயம் வரும். சும்மா சும்மா அடிச்சிட்டே இருந்தா, அதோட சீரியஸ்னஸ் தெரியாம போயிரும். அடிவாங்கி அடிவாங்கி மழுங்கிரும். குட்டிப் பையன் கூட பரவாயில்ல. இவ இருக்காளே.. வாயாடி. காயத்ரி தான் பெரிய சேட்டை! சரி விடுங்க. வளர வளர சேட்டை குறைஞ்சிடும்” என்று நான்கு பிள்ளைகளைப் பெற்று வளர்த்த பெரிய மனுஷி மாதிரி பேசி ஆறுதல் கூறிவிட்டுத் திரும்பிப் பார்க்கையில் காயத்ரி சிரித்துக் கொண்டிருந்தாள்.
சிரிக்கும்போது நன்றாகத் தான் சிரிக்கின்றது; இதுவா அப்படிச் சேட்டை பண்ணுகிறது என்று எண்ணிக்கொண்டே பதிலுக்கு ஒரு புன்னகை சிந்திவிட்டு அவளைத் தூக்கி மடியில் அமர்த்திக் கொண்டேன். அதுவும் செல்லம் கொஞ்சிக் கொண்டு முழுதாக ஒரு ஒரு நிமிடம் என் மடியில் அமர்ந்திருந்தது. அதற்குமேல் முடியவில்லை. நிமிர்ந்து என் முகத்தைப் பார்த்தது. நானும் பார்த்துக் கொண்டிருக்க, அப்படியே மடியிலிருந்து சருக்கிக் கொண்டு நழுவி ஓடியது. நானும் அக்காவும் நொந்துபோய் ஒரு சிரிப்பு சிரித்துக் கொண்டோம்.
சூழ்நிலைகள் காரணமாக நான் சிறிது காலம் அக்காவின் வீட்டிலேயே தங்க நேர்ந்தது. இரத்த சம்பந்தம் இருந்தால் தான் சொந்தமா என்ன? எப்படியோ இருவருக்கும் ஒருவரையொருவர் மிகவும் பிடித்துப் போயிற்று. நான் காலையில் கிளம்பி அலுவலகம் சென்றுவிட்டால் சாயங்காலம் ஆறு மணிக்கு மேல் தான் வீட்டிற்கு வருவேன். எனக்காக அக்காவும் காயத்ரியும் கோபி குட்டியும் காத்துக்கொண்டிருப்பர். வீட்டுக் காம்பவுண்டுக்குள் நுழைந்து காலணிகளைக் கழற்றிக் கொண்டிருக்கும்போதே காயத்ரியும் கோபியும் வெளியே ஓடி வந்துவிடுவார்கள். சிறிது நேரத்திற்கு ஒரே கம்ப்ளெயிண்ட்ஸ் தான்!
“அத்தே.. தம்பீஈஈஈஈ.. சேட்ட பண்ணான். கீழ உழுந்துட்டான். ரத்தம் வந்துருச்சு” இதையே ஒரு நான்கு வாட்டி முகத்தில் ஏகப்பட்ட அபிநயங்கள் பிடித்து அவள் புகார் செய்துகொண்டிருக்கும் போதே, அவனும் ஆரம்பித்துவிடுவான். அவனுக்கு இரண்டரை வயதாகிறது. இப்பொழுது தான் நிறைய பேச ஆரம்பித்திருக்கிறான். அழுத்தமாகத் தெளிவாக வந்து விழும் வார்த்தைகள் நம்மை வாய்பிளக்க வைக்கும்.
“அக்கா.. இவனுக்கு எப்படி இந்த வார்த்தையெல்லாம் தெரியும்? யார் சொல்லிக் கொடுத்தாங்க?” என நினைத்து ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருக்கும்போதே தான் செய்த சேட்டைகளை மன்னித்து என்னை உங்களுடன் சேர்த்துக்கொள்ளுங்கள் என்னும் பாவனையில் அருகே வந்து கால்களை கட்டிக் கொள்வான்.
குழந்தைகள் என்றால் அப்போதைக்கு எனக்குப் பிடிக்கும்தான். ஆனால் சேட்டை பண்ணக் கூடாது. அமைதியாக அமர்ந்திருக்க வேண்டும். போ என்றால் போக வேண்டும். வா என்றால் வர வேண்டும். சிரிக்க வைக்கும் போது சிரிக்க வேண்டும். டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது சத்தம் போடக் கூடாது. அழுது ஆர்ப்பாட்டம் பண்ணக்கூடாது. மடியில் சமர்த்தாக உட்கார்ந்திருக்க வேண்டும். தோளில் போட்டுத் தட்டித் தட்டித் தூங்க வைத்தால் உடனே தூங்கிவிட வேண்டும். தானே தட்டில் போட்டுச் சிந்தாமல் சாப்பிட வேண்டும். ஐஸ்க்ரீமோ சாக்லேட்டோ சட்டையை அழுக்காக்காமல் சாப்பிட வேண்டும். தண்ணீரில் விளையாடக் கூடாது. ஆக மொத்தத்தில் சொன்ன பேச்செல்லாம் கேட்டுவிட்டு அமைதியாக இருந்தால் குழந்தைகளை எனக்கு ரொம்பப் பிடிக்கும்! (இதெல்லாம் நடக்குற காரியமானு கேக்குறீங்களா?) இந்தக் குழந்தைகள் இருக்கிறதே.. அவை சொல்பேச்சும் கேட்காது. பெரியவர்கள் முன்னால் அடிக்கவும் முடியாது. பல சமயங்களில் சபையில் நம்மை அவமானப் படுத்திவிடும். வரும் கோபத்தையெல்லாம் அடக்கிக் கொண்டு எதுவும் நடக்காதது போல் சிரிப்பாக முகத்தை வைத்துக் கொண்டு முத்தம் வேறு கொடுத்துவிட்டுச் செல்லவேண்டும்.
நானெல்லாம் சின்னக் குழந்தையாக இருந்தபோது எந்த சேட்டையும் செய்ய முடியாது. தம்பியும் நானும் தான் விளையாடிக் கொண்டிருப்போம். திடீரென்று சண்டை வந்துவிடும். வீட்டில் வைத்து என்றால் அம்மா முற்றம் பெருக்கும் துடைப்பத்திலுள்ள ஈக்குக் குச்சியை வைத்து அடிபின்னி விடுவார். உடம்பெல்லாம் கோடு கோடாக விழுந்துவிடும். ஒன்று அல்லது இரண்டு அடியிலேயே கப்சிப். இதுவே வெளியிடமாக இருந்தால் அடி விழவே விழாது. யாரும் அறியாமல் தொடையில் ஒரு இனுங்கு. வெளியே கத்தி அழவும் முடியாது. தொடர்ந்து சேட்டையும் பண்ணமுடியாது. அவ்வளவு தான். இப்படி வளர்ந்தவளுக்கு இந்தக் குழந்தைகள் இவ்வாறு குதூகலத்துடன் கும்மாளம் போடுவதைப் பார்க்கும்போது பொறாமை வந்ததோ என்னவோ??
(சேட்டை தொடரும்...)
*
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
குழந்தைகளின் குறும்பு ரசிக்கத்தக்கது...
நான் இப்ப ஒவ்வொரு நாளும் என் மகனின் குறும்பை மிக ரசித்துக்கொண்டு இருக்கேன்....
@சங்கவி
Great to hear.. Enjoy :)
இது குஜராத்ல இருந்தப்ப நடந்ததா சுபத்ரா. நீ சத்தமே இல்லாம ரெண்டு பதிவு போட்டது தெரியவே இல்லை. சான்ஸே இல்ல. எழுத்து நடை முன்னவிட சூப்பரா இருக்கு. தெளிவான வார்த்தை நடை. படிக்கவும் ஆர்வமாக இருக்கு. உனக்குள்ள ஒரு நேர்த்தியான எழுத்தாளரை வைச்சுகிட்டு எழுதாமயே இருக்கியே பாவி.
ரத்த சம்பந்தம் இருந்தால் தான் சொந்தமா என்ன? நல்ல வரிகள். நமக்கும் பொருந்தும்ல. நல்ல சிறுகதை மாதிரி இருக்கு.
@பொன்மலர்
பொறுமையா படிச்சிட்டு இவ்ளோ ரசிச்சு கமெண்ட் போட்டதுக்கு தேங்க்ஸ்டி.. :) தொடர்ந்து படி.. உன்னோட என்கரேஜ்மெண்ட்டும் என்னை நிறைய எழுதவைக்குது.
/*ரத்த சம்பந்தம் இருந்தால் தான் சொந்தமா என்ன? நல்ல வரிகள். நமக்கும் பொருந்தும்ல*/
நிச்சயமா !!! :)
Post a Comment