There should be no fear of death, for the death of the body is but a gentle passing to a much freer life – Helen Greaves

At his best, man is the noblest of all animals; separated from law and justice he is the worst – Aristotle

What's in a name? That which we call a rose by any other name would smell as sweet - Shakespeare

திருநெல்வேலி அல்வா

Jan 16, 2012

என் எழுத்தை எனக்கே அறிமுகம் செய்து வைத்த எனது அபிமான வலைப்பூஇட்லிவடையில் எனது மற்றுமொரு பதிவு ஒன்று வெளியாகியுள்ளது..

 “நீங்க எந்த ஊரு?” யாரோ.
திருநெல்வேலிஇது நான்.
... தின்னவேலியா? (நக்கலாக) சரி சரி
இல்ல, திருநெல்வேலிஎரிச்சலுடன் நான்.
நானும் அதைத் தான் சொன்னேன்.. தின்னேலினு தானே சொல்வீங்க?” இன்னும் சிரிப்புடன்.
தின்ன எலியுங் கிடையாது.. திங்காத எலியுங் கிடையாது...எங்க ஊரு பேரு திருநெல்வேலி!” (ஹ்ம்க்கும்)

ஒரு தடவ ரெண்டு தடவயில்ல.. நெறைய தடவ இது நடந்துருக்கு. அது ஏன்னே தெரியல. திருநெல்வேலின்னாவே எல்லாருக்கும் எங்கயிருந்து தான் வருதோ ஒரு நக்கல் தெரியல. ஊருக்குள்ளயே இருந்தவரைக்கும் ஒன்னுமே தெரியாது. டிவியில விவேக்கு பேசுனாலும் வடிவேலு பேசுனாலும் விஜய் பேசுனாலும் விக்ரம் பேசுனாலும் வேற யாரு பேசுனாலும் ஜோக்கோடு ஜோக்கா பார்த்துச் சிரிச்சிக்குவோம். ஆனா பன்னெண்டாப்பு முடிச்சிக் காலேஜில சேரனும்னு வெளியூருக்குப் போவும்போது தான் தெரியும்.. நம்மளும் நம்ம ஊரும் எப்படியெல்லாம் அல்லோல கல்லோலப் படுதோம்னு. ஏன் அப்படிப் பண்ணுதாங்கன்னு நமக்கே வெளங்காது. என்ன பேச்சிப் பேசுனாலும் சிரிப்பு தான். பெறவு வேற வழியில்லாம நாமஅல்வா’, ‘அருவான்னு செல்லமாப் பேசுனாத் தான் அமைதியாப் போவாங்க.

சென்னை, கோவை, மதுரைன்னா கூட பரவால்ல அவங்கவங்களுக்குத் தனித்தனியா பாசையிருக்கும். ஆனா இந்தத் திருச்சி, தஞ்சாவூர்க்காரங்க இருக்காங்களே.. அடடடடா.. உலகத்துலயே நாங்க ஒருத்தங்க தான் கலப்படமில்லாத தூயதமிழ் பேசுதோம்னு ஒரே பெரும பீத்திக்குவாங்க. சரி போனாப் போவுதுனு உட்டுக்குடுக்குறதுக்கு நமக்கு மனசு வராது. “என்னயிருந்தாலும் எங்க ஊரு தமிழ்தான் அழகாயிருக்கும் அம்சமாயிருக்கும்னு என்னத்தையாவது சொல்லிட்டு ஆஸ்டல் ரூமுக்குள்ள போயி அன்னைக்கே ஒரு முடிவு எடுப்போம். இனிமே நாமளும் இவங்க பேசுதத மாரியே பேசனும்னு. அங்கயே முடிஞ்சிபோவுது திருநெல்வேலி பாசையெல்லாம்! பெறவு லீவுக்கு ஊருக்கு வந்தாக் கூட அம்மாவோ ஆச்சியோ எப்பவும் போலப் பேசயிலஏன் இப்படிப் பேசுதாங்கனு வித்தியாசமா நெனைக்கும் இந்தக் கூறுகெட்ட மனசு. ஆனா நாலு வார்த்த பேசுறதுக்குள்ள நாமளும் ஒன்னுக்குள்ள ஒன்னா அயிக்கியமாயிருவோங்கது வேற கத.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஃப்ரெண்ட் கூடச் சேர்ந்துஒஸ்திபடத்துக்குப் போனேன். “... உங்க ஊரு பாஷை தான் டீனு அவ சாதாரணமாச் சொன்னாக்கூட நக்கலாத் தான் தெரிஞ்சிச்சி எனக்கு. ஒன்னுஞ் சொல்லாம படத்தப் பார்க்க ஆரம்பிச்சேன். காக்கிச் சட்டயில கதாநாயகன் பேசுதது கூடப் பரவால்ல. ஆனா சீரியஸான காட்சியில வில்லனும் திருநெல்வேலி பாசய பேசுதத மாரி காட்டும் போது தேட்டர் முழுசும் சிரிப்பாச் சிரிச்சிச்சே.. கடவுளே.. அதென்னமோ தெரியல.. டயலாக் ரைட்டருக்குக் கூட திருநெல்வெலின்னவொடனே காமெடி(மாரி) டயலாக் எழுதத்தான் கைவரும் போல. எப்பிடியும் போங்க..

சரி நமக்குத் தான் இந்தக்கதன்னா ஊருக்குள்ளப் போயி பார்ப்போம்னு பார்த்தா, பள்ளிக்கூடத்துல கூட பிள்ளைங்க எல்லாம் திருநெல்வேலி ஸ்லாங்குல பேச மாட்டேங்குதுங்க. “ஏல.. வால.. போலன்னு பேசிட்டிருந்தது எல்லாம்ஏடா.. வாடா.. போடான்னு ஆயிட்டு. “ஏபிள்ள வாபிள்ளன்னு பேசுனதுங்க எல்லாம்ஏடி.. வாடி.. போடின்னு தான் பேசுதாங்க.

பொங்கல் சமயத்துல காய்கறி வாங்கனும்னு வண்டிய உட்டுட்டு மினிபஸ் புடிச்சி மார்க்கெட்டுக்குப் போயி நிக்கும் போது அங்குன கூட்டம் நம்மள நவுலவுடாது. கரும்பு, காய், மஞ்சளுனு மூட்ட மூட்டையாத் தூக்கிட்டுப் போற கிராமத்து ஆளுங்க பேசுவாங்கப் பாருங்க.. “ஏல.. அங்குன சீட்டப் போடு.. இங்குன எடத்தப்புடி.. இத ஒருகையி தூக்கிவுடு.. .. அம்புட்டுத்தான்” “காருக்கு(பஸ் தான்) ருவா எடுத்துவையி..” “என்னது டிக்கெட்டு ஏழாருவாய்யா? என்னத்த தான் அலுவசமா பஸ்ஸு ஓட்டுதானோ தெரியல.. நாய்வெல பேய்வெல சொல்லுதான்.. காரவுட்டுட்டு நடந்துதான் போவனும்பொலுக்கனு நம்ம ஊரு மக்கள் பேசுற பேச்ச வீட்டுக்குத் திரும்பிவராம கூட கேட்டுகிட்டேயிருக்கலாம். ஆனா என்ன, வீட்டுக்கு வாறதுக்கு முன்னாடியே யாராதுஉங்க மவள மார்க்கெட்டுல பார்த்தேன். அந்தக் கரும்புச்சாறு கடைக்கு முன்னாடி நின்னுகிட்டு போற வாறவகுள எல்லாம் வாய்ப்பார்த்துகிட்டு நின்னான்னு போட்டுக்குடுத்துருப்பாங்க.

வீட்டுக்கு வந்து வலது கால உள்ளயெடுத்து வைக்கதுக்குள்ளஉனக்கெல்லாம் அறிவியே கெடையாது.. ஒரு கூறுவாடு கெடையாது.. எதுத்தவீட்டுப் பிள்ள (போட்டுக்குடுத்தவங்களோட மக) எப்படிக் கட்டும் செட்டுமாயிருக்கு?”ன்னு அம்மா ஏசும்போது நம்மளே கெஸ் பண்ணிகிடவேண்டியது தான். ஒடனே நாமளும்நான் டென்த்துல டிஸ்ட்ரிக்ட் ஃபோர்த் எடுத்தேன். அவ எடுத்தாளா? நான் காலேஜுல இத்தன கப் வாங்கிருக்கேன். அவ என்னத்த வாங்கிருக்கா?”ன்னு கேப்போம். “ஆமா.. ஒலகத்துல இல்லாத சாதன படச்சிருக்கா.. ஏட்டுச் சொரைக்கா கறிக்கு ஒதவாது.. வாழ்க்கைக்கி எது ஒதவுதுனு பாரு.. அந்தக் கப்பையெல்லாம் தூக்கிக் குப்பையில போடுனு ஒரு சொலவடையச் சேர்த்துச் சொல்லும்போதுச்ச்ச..” அப்படின்னு இருக்கும். அதெல்லாம் தனிக்கத...

சமீபத்துல ஃபேஸ்புக்குல திருநெல்வேலியோட புராதான போட்டோஸ் நெறைய ஷேர் பண்ணியிருந்தேன். ஒடனே ஒரு பிரபல எழுத்தாளர் வந்து, “திருநெல்வேலிக்கு இலக்கிய உலகத்துல முக்கிய பங்கு இருக்கு.. புபிஅப்படின்னு ஒரு காமெண்ட் போட்டிருந்தார். பெறவு தான் யோசிச்சுப் பார்த்தேன்.. புதுமைப்பித்தன்ல இருந்து சாகித்ய அகாதமி விருது வாங்குன தி..சிவசங்கரன், தொ.மு.சி ரகுநாதன், வல்லிக்கண்ணன்ரா.பி. சேதுப்பிள்ளை, சுகா, வண்ணநிலவன், வண்ணதாசன்னு எத்தன எழுத்தாளர்கள் பொறந்திருக்காங்க.. சாதனையாளர்கள் வாழ்ந்துருக்காங்க.. நம்ம பாளையங்கோட்டையஆக்ஸ்ஃபோர்ட் ஆஃப் சவுத் இண்டியானுலாச் சொல்லுதாங்க.. நம்ம பேரும் ஒருகாலத்துல இந்தமாரி லிஸ்ட்டுல எல்லாம் வரனூனு நெனைச்சு மனச ஆறுதல்படுத்திக்கிட வேண்டியதுதான்.

காணி நிலம் வேண்டும் பராசக்தினு பாடுன பாரதியார மாரி என்னையப் பாடவுட்டாங்கன்னா, ‘அந்தக் காணிநெலமும் திருநெல்வேலில ஒரு கிராமத்துல வேணும்..’ ‘சீக்கிரமா குஜராத்த உட்டுட்டுத் திருநெல்வேலிக்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கிகிட்டுப் போவனும்’ ‘எங்க அம்மா அப்பா திருநெல்வேலிலயே எனக்குவொருஒஸ்தியான பையனைப் பார்த்துக் கல்யாணம் பண்ணிவைக்கனும்னு வேண்டிக்கிடுவேன் ;-)

படிக்கிறவுக உங்க மனசுக்குள்ள இப்பம் என்ன விசயம் ஓடுதுன்னு எனக்குத் தெரிஞ்சிப் போச்சி.. நான் சொல்லுதேன் கேளுங்க.. இந்த இட்லிவடையைப் பாத்தா திருநெல்வேலிக்காரர் மாரிலாம் தெரியல.. வெறும் எலைய போட்டுப் பேருக்கு ரெண்டுமூனு இட்லியையும் வடையையும் மட்டும்தான் வச்சிருக்காரு.. நாங்க எங்க ஊருல சட்னியும் சாம்பாரும் தொட்டுக்கூடு சேத்துத் தான் சாப்புடுவோம் :-)

பின்குறிப்பு : என்னமோ இவ்வளவு நாளா குஜராத் குஜராத்துனு பேசுன இந்தப்பிள்ள இன்னைக்குத் திருநெல்வேலி திருநெல்வேலினு பேசுதே.. என்னலேன்னு யோசிக்காதீய. திருநெல்வேலி உட்பட இந்தியா ஃபுல்லா குஜராத் மாரியே ஆட்சி வரப்போவுதுன்னு இட்லிவடை சொன்னாரு.. அதான் ;-)

*

3 comments:

தக்குடு said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

'இந்தப்புள்ள என்னா பேச்சு பேசுது! திருனவேலில நீங்க எந்தூரு? நான் அம்பாசமுத்திரம் பக்கம் கல்ட்ரகுறுச்சி(கல்லிடைகுறிச்சி)' :)

ezhil said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

உண்மையிலேயே படிப்புக்காக நாங்கெல்லாம் மதிக்கற ஒரு இடம்னு பாத்தா தமிழகத்தின் தென்பகுதிதான்... எங்க காலத்திலேயே(25 வருடத்திற்கு முன்னால் ) பாளயங்கோட்டையிலிருந்து கேள்வித்தாள் வருது... அதனால ஒழுங்கா படிங்க புள்ளைகளான்னு தான் எங்க ஆசிரியர்கள் மிரட்டுவாங்க... இப்ப என் பையன் ப்ளஸ் டூ படிக்கறப்பவும் அந்த சைட்ல இருந்து வந்த ஆசிரியர்ங்கதாம்மா படிப்புக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கறாங்கன்னான்... பதிவைப் படித்ததும் இதுதான் என் மனசுல தோன்றியது....

cheena (சீனா) said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அன்பின் சுபத்ரா - வலைச்சரம் மூலமாக வந்தேன் - தேர்வில் வெற்றி பெற நல்வாழ்த்துகள் - வசிக்கும் சென்னையிலொ - சொந்த ஊரான நெல்லையிலோ மாவட்ட ஆட்சியராகப் பதவி ஏற்க நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா