இப்பொழுது தான் 12-01-2011 அன்று அபியின் 18-வது பிறந்தநாளுக்கு வாழ்த்தியது போல் இருக்கிறது. அதற்குள்ளே அவனுக்கு 19-வது பிறந்தநாளும் முடிந்துவிட்டது. பொங்கலும் வந்துவிட்டது! இந்த வருடம் பொங்கலுக்கு நான் ஊருக்குப் போகாதது வருத்தம் தான். யோசித்து பார்த்தால் நான் ஊரை மிஸ் பண்ணுவதை விட வீட்டில் அம்மாவும் அபியும் மிகவும் மிஸ் பண்ணுவார்கள் என நினைக்கிறேன். அப்படி என்ன தீபாவளிக்கு இல்லாதது பொங்கலுக்கு என்று கேட்கிறீர்களா? அது..
வருடத்துக்கு ஒரு முறை, பொங்கலுக்கு முதல்நாள் இராத்திரி தான் நான் கோலம் போடுவேன். அம்மா எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு வாசலைப் பெருக்கிக் கோலம் போடுவதற்கு ஏதுவாக ஏற்படுத்திக் கொடுத்த பின்னர், ஸ்கார்ஃப் எடுத்துத் தலையில் கட்டிவிட்டு கோலப்பொடிகளைத் தயார்நிலையில் வைத்து, அபியிடம் சொல்லி FM ரேடியோவை வாசலுக்கு அருகே மிகவும் சத்தமாக ஆன் செய்து வைத்துவிட்டுக் கோலம் போடுவதற்கு அமர்ந்தால் மணி 11 ஆகியிருக்கும். அதற்கு முன்னரே நான் என் கோலம் நோட்டை எடுத்து என்ன கோலம் போடவேண்டும் என முடிவு செய்து ஓரிரு முறை காகிதத்தில் வரைந்தும் பார்த்துப் பழகியிருப்பேன். அப்படியே 11 மணிக்குத் தொடங்கும் வேலை 1 மணிக்கும் மேல் கூட தொடரும்.. அவ்வப்போது பக்கத்துவீட்டு ஸ்ரீயின் அம்மா, ஷ்யாமளாவின் அத்தை, இந்துவின் அம்மா என அவரவர் கோலம் போட்டு முடித்தபின் ஒரு சுற்று யாராவது வந்து பார்த்துவிட்டுச் செல்வார்கள்.
|
Pongal - 2010 |
படம் வரைவதோ கதை எழுதுவதோ இசை பயில்வதோ சமைப்பதோ வீட்டு வேலைகள் செய்வதோ கோலம் போடுவதோ எந்த ஒரு கலைச்செயலுமே செய்ய தொடங்கியபின் அது ஒரு தியானம் மாதிரி தான். ஈடுபாட்டுடன் செயல்படும் போது தான் Magnum Opus படைப்புகளாக உருவாகிவிடுகின்றன. அலுப்பு தெரியாமல் இருப்பதற்காகப் பாட்டு கேட்டுக் கொண்டே கோலம் போட்டாலும் மனது முழுதும் அதிலேயே லயித்துவிடும். என்ன.. கோலம் வரைகையில் உடம்பைத் தான் வருத்தி எடுக்கும். தினமும் அதிகாலை சீக்கிரம் எழுந்து கோலம் போட்டால் இதெல்லாம் இயற்கையான உடற்பயிற்சியாக அமைந்திருக்கும். வருடத்துக்கு ஒருமுறை கோலம் போட்டால் இப்படித் தான் :-)
கரும்பு, மஞ்சள் கிழங்கு, சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், காய்கறிக்குழம்பு, பட்டுச்சேலை, செவ்வந்திப்பூ, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எனப் பலவற்றை நான் இழந்தாலும் என் நண்பர்கள், உறவினர்கள், சகோதர சகோதரிகள், வலைப்பதிவர்கள் என உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த
|
தை பிறந்தால் வழி பிறக்கும்! |
“தித்திக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்”
*
3 comments:
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சுபத்ரா... அடுத்தவருடம் அம்மா கூட பொங்கல் தினத்த கொண்டாடிடலாம் கவலைய விடுங்க தோழி....
பொங்கல் வாழ்த்துக்கள்
“தித்திக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்”
Post a Comment