பறக்கவே என்னை அழைக்கிறாய்!
Aug 19, 2012
எனக்கு என் அம்மாவை ரொம்பப் பிடிக்கும். அவங்களைப்
பிடிக்க ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே எங்க ஆச்சியை எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.
எங்க பாட்டிக்கு எங்க அம்மா ஒரே பொண்ணு. எங்க அம்மாவுக்கு நான் ஒரே பொண்ணு :-) அதனால
என் மேல பயங்கர பாசம் எங்க பாட்டிக்கு. நான் ஏதாவது சேட்டை பண்ணிட்டு அம்மாகிட்ட அடிவாங்கி
அழுதபோதெல்லாம் எங்க பாட்டி என் அம்மா மேல கோபப்பட்டு ‘உண்ணாவிரதம்’ இருப்பாங்கன்னா
பார்த்துக்கோங்க! அதனாலயே நான் எப்பவும் அவங்க கூடவே அலைவேன். அவங்க எனக்கு இன்ட்ரோ
கொடுத்து வெச்சதுதான் “அக்கக்கோ குருவி”. பெரிய ஆலமரத்துல எங்கேயோ ஒரு கிளையில உக்கார்ந்து
“அக்கோ... அக்கோ”னு கூவிக்கிட்டே இருக்கும். என் தம்பி வேற என்னை அக்கானு தான் கூப்பிடுவானா..
ஸோ அது என்னைத் தான் கூப்பிடுதோனு எனக்குப் பயங்கர ஆவல். தினமும் அதுக்காகக் காத்திருந்து
காத்திருந்து, எங்க அம்மாகிட்டேயும் ஆச்சிகிட்டேயும் கூட கேட்க ஆரம்பிச்சேன் அக்கக்கோ
குருவி எங்கேனு. சமீபத்துல ஒருநாள் அதே குரலை இங்கே வீட்டருகில் கேட்டதும் ஒரு கணம் டைம் மெஷினில்
ஏறி இறங்கிவிட்டேன்.
விடுமுறை விட்டதும் ஒவ்வொரு வருடக் கோவில் கொடைக்கும்
அப்பாவின் ஊரான மணியாச்சிக்கு ரயிலில் செல்வது வழக்கம். அவ்வாறு சின்ன வயதிலேயே ரயில்
எனக்கு அறிமுகமாகியிருந்தது. ரயிலில் பயணிப்பதைவிடவும் மிகவும் சுவாரசியமான விஷயம்
என்ன தெரியுமா? வழியில் தென்படும் மயில்கள். நான் எப்போதும் அதைப் பற்றியே கேட்டுக்கொண்டிருந்ததால் தொல்லை பண்ணாமல் இருப்பதற்காக ஜன்னல் ஓரத்தில் உட்காரவைத்துவிட்டு ‘மயில் தெரியுதா
பார்’ எனச் சொல்லிவிடுவார்கள்.
நான் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த
நேரம். முழுவாண்டு பப்ளிக் தேர்வு. கணக்குப் பரிட்சைக்காக அதிகாலையில் எழுந்து படித்துக்
கொண்டிருந்தேன். அது எனக்கு மிகவும் பிடித்த அறை. பெரிய ஜன்னலை ஒட்டிப் போடப்பட்ட மேஜையும்
வயர் நாற்காலியும். ஜன்னலுக்கு வெளியே காம்பவுண்டு சுவருக்கு மிக அருகில் இளமையான ஒரு
வேப்பமரம். நன்றாகப் படர்ந்து குளுகுளுவென காற்றை வீசிக்கொண்டிருக்கும். பலமுறை பலவிதமான
பறவைகள் அந்த மரத்தில் வந்து அமர்வதைக் கண்டிருக்கிறேன். சில நாட்களில் ஒரு சிட்டுக்குருவி
ஜோடியொன்று அந்த அறையில் வைக்கப்படிருந்த பீரோவிற்கும் லாஃப்ட்டிற்கும் இடையே கூடு
கட்டத் தொடங்கியது. எவ்வளவு துரத்திவிட்டாலும் பலனில்லை. அதற்குமேல் ஒன்றும் செய்ய
மனமில்லாமல் விட்டுவிட்டோம். இன்னும் சில நாட்களில் அது முட்டையிட்டுக் குஞ்சும் பொரித்துவிட்டது.
கீச் கீச் என வீடு முழுதும் குட்டீஸ் சத்தம். என் தம்பியின் உதவியுடன் அவ்வப்போது அவற்றில்
அகப்பட்டதைக் கையில் எடுத்துப் படபடவென அடிக்கும் அதன் இதயத்துடிப்பை ரசிக்கையில் அதைவிட
வேகமாக நம் இதயம் துடிக்கத் தொடங்கும். கையிலேயே உச்சா போய்விடுமோ எனப் பயந்து அதை
மறுபடியும் கூட்டிற்குள் வைத்துவிடுவோம் ;-) ஆ! அந்தக் கூடு தான் எத்தனை அழகு!! எங்கிருந்து
தான் அந்தக் குப்பைகளை அள்ளிக்கொண்டு வந்து அவற்றையும் அவ்வளவு அழகாகப் பயன்படுத்திக்
கூடு கட்டுமோ என மிகவும் ஆச்சர்யமாக இருக்கும்! அம்மா-அப்பா குருவிகள் வெளியே பறந்ததுமே
எங்கள் வேலை மேலேயிருக்கும் குஞ்சுகளைப் பார்ப்பதும் என்னென்ன குப்பைகள் எங்கிருந்து
எடுக்கப்பட்டன என்ற கணக்கெடுப்பை நடத்துவதும்தான். சும்மா சும்மா “ஆ ஆ” என்று பசியில்
வாயைத் திறந்து திறந்து மூடியவாறே இருக்கும் அந்தக் குஞ்சுகளுக்கு உடலில் முடியே முளைத்திருக்காது!
இந்நிலையில் அந்த அறையில் காற்றாடி போடுவது மிகவும்
சிரமமாகிவிட்டது. ஒரு அதிகாலை வேளையில் என்னைத் தவிர வேறு யாரும் கண்விழித்திருக்க
மாட்டார்கள் என்னும் சோகத்துடன் படித்துக் கொண்டிருந்தவளின் கண்முன் திடீரென எங்கிருந்தோ
பறந்து வந்து ஜன்னல் கம்பியில் நின்றது அந்தத் தாய்க்குருவி. எனக்கு முன்னரே எழுந்து இரைதேட பறந்துவிட்டது
போல. ஜன்னல் வழியே பறந்து ட்யூப்லைட்டில் வந்து அமர்ந்துகொண்டது. அப்போதுதான் திடீரென
எனக்குக் காற்றாடியின் நினைவு வந்தது! ஆனால் அசைய முடியாத நிலை. ஸ்விட்சை அணைப்பதற்காக
எழுந்தால் அது பயந்து பறந்து காற்றாடியில் அடிபட்டுவிடும். ஆனாலும் என் அசைவைக் கண்ட
அது அறையில் எங்கெங்கோ பறக்க, வழியறியாமல் பயத்தில் கண்களை மூடிக்கொண்ட நான் “சொத்” என்ற சத்தம் கேட்டு விழித்துப்
பார்த்தேன். என் கண்முன்னே ஒரு அடி தூரத்தில் மேஜையின் மேல் அந்தக் குருவி துடிதுடித்து இறந்து போனது
:’( இன்று நினைத்தாலும் அதைத் தடுத்திருக்காத எனது இயலாமையை எண்ணி மிகவும் மனம் வருந்துகிறேன்...
அடுத்ததாக இங்கே எனது அப்பார்ட்மெண்ட்டில் தினமும்
காலையில் என்னை உறக்கத்திலிருந்து எழுப்பி விடும் புறாக்கள் :-) ஜன்னலைத் திறந்துவைத்துக்
கொண்டு தூங்கிக்கொண்டிருக்கும் நான் அதிகாலையின் அரைத்தூக்கத்தில் எழுந்து சென்று காற்றாடியை
அணைத்துவிடுவேன். அப்புறம் எங்கே தூங்குவது? அவ்வளவுதான். ஃப்ரெஷ் பண்ணிவிட்டு மறுபடியும்
வந்து பார்த்தால் ஒரு ஜோடிப் புறாக்கள் உள்ளே விளையாடிக் கொண்டிருக்கும். செல்லமாக
வெளியே துரத்தி(?) ஜன்னலை மூடிவிட்டுத் தேனீர் போடுவதற்காக சமையலறைக்குள் வந்தால்,
அங்கேயும் அந்தப் புறாக்கள் பால்கனியில் அமர்ந்து விளையாட்டைத் தொடர்ந்து கொண்டிருக்கும்.
பல நாட்கள் வீட்டுக்கு உள்ளே வந்து எல்லா அறைகளையும் சுற்றிச் சுற்றிப் பார்க்கும்.
எனது புத்தகங்களைப் புரட்டிப் போட்டுவிடும். உடைகள் மேல் அசுத்தம் செய்துவிடும். சமயத்தில்
பீங்கான் பாத்திரங்களை கீழே தள்ளி உடைத்தும் விடும் :-)
ஒரு நாள் நள்ளிரவு நான் தனியே உறங்கிக்கொண்டிருந்த
நேரம். பயங்கரமான அலறல் சத்தங்கள் பல திசைகளிலிருந்து. ஜன்னல்கள் எல்லாம் வேறு திறந்திருந்தன.
ஏதோ ஒரு பறவை என்று யூகித்திருந்தும் எதுவென்று சரியாகக் கணிக்க முடியவில்லை. ஆந்தைகளாக
இருக்குமோ என நினைத்தேன். அடுத்த சில தினங்களில் ஒரு மழைநாளில் அலுவலகத்தில் இருந்தபோது
அதே சத்தம். உடனே பக்கத்தில் இருந்தவர்களிடம் கேட்க அவர்கள் “மோர்” என்றார்கள். அப்படியென்றால்
என்னவென்று அவசரமாகக் கேட்டேன். “Peacock” என்று சொன்னார்கள். அத்தனை அழகு மயில்களா
இப்படிக் கத்துகின்றன என ஒரு கணம் அதிசயப்பட்டுப் போனேன்.
இரு தினங்களுக்கு முன் மாலை 7 மணி அளவில் அலுவலத்தை
விட்டு வெளியே வந்து கொண்டிருந்தேன். மழை அப்போதுதான் வெறித்திருந்தது. அந்தச் சூழலை
அனுபவித்தவாறே வெளியே வந்தவள், திடீரென வானத்தில் ஒரு பெரிய கரிய உருவம் நீண்ட வால்
போன்ற ஒன்றுடன் ‘ஸ்வைங்ங்’ எனப் பறந்து அலுவலகத்தின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த அந்தப்
பல அடி உயர விளம்பர பேனரின் உச்சியில் போய் அமர்ந்தது. பயந்துவிட்டிருந்த நான் கண்ணைக்
கசக்கிவிட்டு மீண்டும் மேலே பார்த்தேன். மூன்று மயில்கள் ஏற்கனவே மேலே அமர்ந்துகொண்டு
மிகவும் சத்தமாக அகவிக்கொண்டிருந்தன! 24 மணிநேரமும் போக்குவரத்து நெரிலாகவே இருக்கும்
அந்தச் சாலையோரத்தில் எவ்வளவு சாதாரணமாகப் புலங்குகின்றன பாருங்கள் இந்த மயில்கள்!
மொட்டை மாடியில் காயப்போட்ட அம்மாவின் சேலையில்
ஒட்டிக்கொண்டிருந்த வவ்வால், ஆலமரத்துக் கிளையில் அசையாமல் அமர்ந்திருந்த ஆந்தை, எங்கிருந்தோ
பறந்துவந்து வீட்டில் தஞ்சம் அடைந்த பார்வையற்ற மைனா, பண்டிகை தினங்களில் வந்து உணவு
உண்டுபோகும் காகங்கள், வீடுகளில் வளரும் கோழிக்குஞ்சுகள், நம்மைப் போலவே பேசும் திறன்கொண்ட
கிளிகள், ஒற்றைக்காலில் மீன்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் நாரைகள், கூட்டமாக
வானில் பறந்து விரல் நகங்களில் வெள்ளை போட்டுச்செல்லும் கொக்குகள், தர்கா முற்றத்தில்
நிறைந்திருக்கும் சாம்பல்-வெள்ளைப் புறாக்கள், வியாழக்கிழமைகளில் வானில் தென்படும்
கருடன்............ என எங்கும் எப்போதும் பறவைகளைப் பார்த்துக்கொண்டிருக்கும் நான்
ஓரிரவின் ஆழ் உறக்கத்தில் கடலின் மேற்பரப்பில் இறக்கை விரித்துப் பறக்கக் கற்றுக்கொண்டதில்
இருந்துதான் இன்னும் அதிகமான ஆச்சர்யத்துடன் அவற்றைப் பார்க்கத் தொடங்கியிருக்கிறேன்...
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
கால எந்திரத்தில் ஏறி தாங்கள் பற்ந்தது
எம்மை மிகவும் கவர்ந்தது
சொல்லிச் சென்ற விதம் மிக மிக அருமை
குறிப்பாக இறுதிப் பத்தி
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
இனிய அனுபவத்தை, ரசித்ததை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்...
ஓஓஓஓஓஓஓ நீங்க பன்னிரெண்டாம் வகுப்பு எல்லாம் படித்து இருக்கிறீர்களா?
பறக்கவே என்னை அழைக்கிறாய்! என்று எல்லோரையும் அழைத்து அழகாக பறக்க செய்து இருக்கிறிர்கள்..
எங்கும் எப்போதும் பறவைகளைப் பார்த்துக்கொண்டிருக்கும் பறவைகளோடு புழங்கி பறக்கவும் கற்ற அருமையான பகிர்வுகள் !
On my God!!! It is really great that you got up at 3.00 A.M. that too on Sunday. Very nice Post. I think you must be having some connections with the birds which is following you wherever you are on earth. Nice post and more than than nice photos.
Oh my God!!! You are really great that you got up at 3.00 A.M. that too on sunday. Very nice post. I think you must be having some connections with the birs which are following you wherever you are on earth. Nice post and more than that nice photos. Keep it up. I know pretty well that you are compelled to travel in time machine which is due to your loneliness as well as being far away from your notice. Must be suffering from some nostalgic feeling which I also experienced before two decades.
மிக மிக அருமைமனம் கவர்ந்த பதிவு
It is really great that you got up at 3.00 A.M. that too on Sunday. I think you must have some connections with the birds as they are following you wherever you are on earth. It is also evident from your post that you are suffering from nostalgic feeling which I too had before 2 decades.
Nenda pathivil paranthen makilvil
@ Ramani
நன்றி!
@ திண்டுக்கல் தனபாலன்
நன்றி! ஒரு விஷயம்.. தங்களது காலடி படாத தமிழ் ப்ளாகே இல்லை போல? :)
@ Avargal Unmaigal
அதுசரி.. நன்றி!
@ இராஜராஜேஸ்வரி
நன்றி!
@ மாலதி
மிக்க நன்றி! :)
@ கவி அழகன்
குட் :)
@ மோகன், பரோடா
நலமா? :)
Mikka Nalam.
பறவைகள் எவ்வளவு தடவை உங்கள் கண்களில் படுகிறதோ, அவ்வளவு முறை நீங்கள் இயற்கையோடு ஒன்றி இருக்கிறீர்கள் என்று அர்த்தம். உங்கள் கட்டுரையும் அழகு. புகைப்படங்களும் அழகு. சுந்தரவேல்.
@ Sundar
Thank U!
எங்கள் வீட்டில் பல மாதங்களுக்கு முன்னர் ஒரு அணில் புகுந்தது. அதைத் துரத்தினோம். அதன்பின்னர் ஃப்ரிட்ஜின் கீழே - அதன் ஒயரிங்குக்கு மத்தியில் அட்டகாசமாக ஒரு கூடு கட்டி அதில் குஞ்சுகளை அந்த அணில் வைத்திருந்ததை மிக லேட்டாகத்தான் அறிந்துகொண்டோம். மின்சாரம் தாக்கி இறந்துவிடப்போகிறதே என்று எண்ணிக்கொண்டிருக்கையில், மறுநாள் தானாகவே அந்தக் குஞ்சுகளை அது எங்கோ இடம் மாற்றிவிட்டது. ஆனால், அந்த அணிலை முதன்முறை துரத்தும்போது அது செய்த களேபரம் அப்படியே டாம் & ஜெர்ரி எலியைப் போலவே இருந்தது :-).
இப்போது, ஒரு வௌவால் இரவில் எங்கள் பால்கனியில் வந்து அதன் இரவுக்கடன்களை முடித்துவிட்டு அப்ஸ்காண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. அது மட்டும் என் கையில் கிடைத்தது - வௌவால் கறிதான் :-)....juz kidding
@ Rajesh
Tom & Jerry க்கு உங்களையும் அணிலையும் வைத்து உருவகப்படுத்திப் பார்த்தேன் :)))
என் அலுவலக அறையில் ஜன்னலைத் திறந்து வைத்திருக்கும் நேரங்களில் எல்லாம் ஒரு அணில் உள்ளே புகுந்து நாற்காலி மேஜைகளுக்கு அடியே ஓடி அதேபோல் களேபரம் பண்ணிக்கொண்டிருக்கிறது.. டாம் தான் இல்லை.
சொல்லாடல் ,சொன்னவிதம் இரண்டுமே அழகு.சிறப்பான பதிவிற்கு மகுடமாய் படங்கள்.வாழ்த்துக்கள் சொந்தமே!பல நாட்கள தங்கள் பதிவு பார்க்வென காத்திருந்து இன்று முடிந்ததது மகிழ்ச்சியே!சந்திப்போம் சொந்தமே!
ஒரு தேநீரும் அவன் நினைவுகளும்.!!!!! !
வண்னமயமான கட்டுரை சகோ.! ஐந்தறிவு ஜீவராசிகளில் பறவையினத்தின் மீது தாங்கள் கொண்டிருக்கும் அன்பு மகத்தானது.
வாழ்த்துகள்.!
Post a Comment