முகமற்றவளின் முகமன்
Sep 4, 2012
என்னை உனக்கு
அடையாளம் தெரியாமல்
இருக்கலாம்
நெடுஞ்சாலை ஓரத்தில்
வினோத உடை உடுத்தியவளாக
நான் நடந்திருக்கலாம்
போகிற போக்கில் உரசிவிட்டு
மன்னிப்பு கோர எத்தனிக்கையில்
நான் மறைந்து போயிருக்கலாம்
உன் விழிகள் எனதை
முழுதாக விழுங்கிவிட்ட
விபத்து நேர்ந்திருக்கலாம்
நெரிசலான பேருந்து ஒன்றில்
ஒலிக்கப்பட்ட பாடலின் சோகத்தை
என் முகம் பிரதிபலித்திருக்கலாம்
ஓடிவந்த குழந்தையை வாரியணைத்து
நான் முத்தமிட்டிருக்கலாம்
கடற்கரையில் நான்
கால் நனைக்காமல் சென்றதை
நீ கவனித்திருக்கலாம்
பின்னொரு நாளின் ஓய்ந்த பொழுதில்
நீ வெறித்துக் கொண்டிருந்த
பின்நவீனத்துவ ஓவியமொன்றில்
என் சாயல் வந்துபோயிருக்கலாம்
என்னை உனக்கு
அடையாளம் தெரியாமல்
இருக்கலாம்
Subscribe to:
Post Comments (Atom)
20 comments:
அருமை மகளே.
வாழ்த்துகள்.
நல்ல சிந்தனை வரிகள்....
நல்லா இருக்குங்க... வாழ்த்துக்கள்...
தலைப்பும் அதற்கான அருமையான விளக்கமாக
அமைந்த கவிதையும் மிக மிக அருமை
மனம் தொட்ட படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
பின்னறீங்க! :-)
நான் உங்க பதிவுக்கு வர்றது எப்படி தான் உங்களுக்கு தெரியுமோ எவ்வளோ நாள் கழிச்சி வந்தாலும் நான் வரும் போது மட்டும் கவிதைய போட்டுவிட்டுடுறீங்க....
ஆனா இந்த தடவை என்னமோங்க ... கவிதைன்னு ஒத்துகிறாப்லே இருக்கு... இது மாதிரி எழுதுங்க.... மடக்கி மட்டும் நம்மளுக்கு வேனாம்.
கவிதை கூடதென்பவனல்ல... ”மடக்கி” கள் இந்த மன்னில் பெருகிவிடக் கூடாது என்பதே என் தரப்பு வாதம் யுவர் ஆனர்.
@ Rathnavel Natarajan
நன்றி பா!
@ திண்டுக்கல் தனபாலன்
சிந்தனை வரிகளா? இது கவிதைங்க ;)
@ Ramani
நன்றி!
@ சேட்டைக்காரன்
நன்றி சேட்டை :)
@ அனானி
தைரியமா உங்க ஒரிஜினல் ப்ரொபைலில் இருந்து கமெண்ட் பண்ணுங்க..இல்லன்னா இங்க வராதீங்க _/\_
யாரென்றறிவிக்க முடியாதவளின்
எழுதுகோலின் தேம்பலிலிருந்து
வழிந்தோடும் வரிகள்
கரிக்கத்தான் செய்கின்றன...!
இல்லாத ஒன்றை சித்தரித்துப் பார்க்கையில் அது இல்லாதது அல்ல.. இருப்பது என்று அறியமுடியும்...கடவுள் தேடலிலும்...வாழ்க்கைத் தேடலிலும்...!
@ தேவா
கமெண்ட் பயங்கரம் :-)
உங்கள் வலைப்பதிவுக்கு வருவது இதுவே முதல் முறை! கவிதை அருமை! மற்ற பதிவுகளையும் படிக்கத்துவங்குகிறேன். வாழ்த்துக்கள்!
@ கவிப்ரியன்
நன்றி.. :-)
அப்ஜக்சன் யுவர் ஆனர்!!
அச்சு ஊடகத்தில் ஒரு படைப்பு எப்போ வரும்னே தெரியாது,அப்படியே வந்தாலும் நம்ம படைப்பை குறிப்பிட்டு யாராவது சொல்வாங்களான்னு உத்திரவாதமே இல்லை, ஆனால் இணையத்தில் நாம எழுதி உடனே வெளியிடலாம், அதற்கு உடனே ,ஒரு ரியாக்ஷனும் பார்க்கலாம், அப்படி ஒரு வசதி இணைய ஊடகத்தில் மட்டுமே இருக்கு.
அதில் விரிவா கருத்து சொல்லுறவங்க எத்தனை பேரு இருப்பாங்க, எல்லாம் நல்ல பகிர்வு த.ம.9 வகையறாக்கள் தான் ...ஏதோ நான் பதிவை முழுசா படிச்சிட்டு உண்மையா விமர்சிக்கிறேன் நல்லா இருந்தா நல்லா இல்லைன்னா கண்ணறாவி என்று சொல்கிறேன், அதற்கு அழுத்துக் கொள்கிறீர்கள் வெற்றுப் புகழ்ச்சி படைப்பாளியை உயர்த்தாது விரைவில் பொலிவிழந்து காணாமல் போகவே செய்யும்.
"தெய்வமே நீங்க எங்கேயோ போயிட்டிங்கன்னு" சொல்லியே கவுத்துடுவாங்க :-))
புகழ்ச்சி அந்நேரம் இனிமையாக இருக்கும் ஆனால் அழித்துவிடும்,இகழ்ச்சியோ ,விமர்சனமோ தான் மேலும் உத்வேகம் அளிக்கும். நான் இதுவரை உங்கள் படைப்புகளித்தான் விமர்சித்து வருகிறேன் , உங்களை அல்ல !
புகழ்ச்சியை விட கொடிய விஷம் இன்னும் கண்டுப்பிடிக்கப்படவில்லை :-))
பொதுவில் படைப்பை வைத்தால் எதிர் கருத்தை பார்க்கத் துணிவு வேண்டும். ஏற்பது ஏற்காததும் உங்கள் கையில். என் பார்வையில் மட்டமான கவிதை கற்றறிந்த அறிஞ்ருக்கு நல்ல கவிதையாகலாம். அதானால் என் கருத்தை கருத்தாக மட்டும் பாருங்கள் ப்ளீஸ்
குப்பன் குரங்கு வியாபாரம் குற்றாலம் என்ற விவரங்களுடன் ஒரு கூகிள் கணக்கு திறந்து வைத்துக் கொண்டால் அது ஒரிஜனல் புரபைல் ஆகுமா. ஆனால் அப்படி ஒரு சொந்த ஐடி வாங்குமளவிற்க்கு நான் பெரும் பணக்காரான் அல்ல என்பதால் அனானி வாயிலை அடைத்து விடுங்கள் ப்ளீஸ்.....(இதற்கும் நீ யார் இதைச் சொல்ல எண நினைக்கவேணாடாம் ஒரு ஆப்சன் தான்)
அனானி அப்சனி இல்லாவிட்டால் மடக்கி படிக்க நேர்ந்தால் மன்டையில் தட்டிக் கொண்டு நடந்து சென்று விடுவேன்.கட்டுரைகளைல் குறையேதுமில்லை.
@ அனானி
தங்களின் அறிவார்ந்த இக்கருத்துகளைத் தஞ்சாவூர் கோவில் கல்வெட்டில் பதித்து வையுங்கள். வரும் சந்ததியினர் படித்துப் பயன்பெறட்டும்.
என் அறிவார்ந்த கருத்தா ? என்னாங்க இது அறிவிருந்திருந்தா உங்க கவிதைகளை பார்த்து ஆஹா அருமை என்று சொல்லியிருப்பேனே.
என்னுடைய கருத்தைபக் கல்வெட்டில் போட்டிருந்தால் யாரோ மண்டைக்கனம் பிடித்தவன் இப்படி கருத்து சொல்லிட்டு திரிந்திருக்கிரான் என்று வேண்டுமானால் நினைப்பார்கள்
ஆனால் கீழ் கண்ட கவிதைகளை செதுக்கி வைத்தால் வரும் சந்ததியருக்கு 21ம் நூற்றாண்டு இனையக் கவித்திறனை காண்பிக்க ஏதுவா இருக்கும்.
காதல்
உன்னைக் கவிஞனாக்குகிறது..
என்னை?
கவிதை ஆக்குகிறது!
உன் கவிதைகளில்
பவனி வரும்
“நீ”, “உனக்கு”, “உன்னை”
போன்ற வார்த்தைகளெல்லாம்
என்னை மட்டுமே
குறிப்பதாகக்
கொஞ்சம்
அறிவித்துவிடுகிறாயா?
அவர்கள் கல்வெட்டில் நகைச்சுவை என்று கொண்டாடுவார்கள்.
(இது வெளியிடுவதற்கல்ல) நீங்க சொன்னா மாறி இனி உங்க தளத்திற்கு இந்த குப்பன் வரமாட்டேன்.அனானி ஆப்சனி திறந்திருந்தாலும் கூட ..........
குப்பன்
தீர்த்தபதி(கேம்ப்)
கடைசியா உங்கள் பானிக் கவிதை பரிசாக
ஏ
ஏப்ரல் ஒன்றே
நீ வரும் வரை
காத்திருக்க்மாட்டோம்
இன்றே ஆவோம்
முட்டாளாக
@ அனானி
கவிதை உங்களுக்கு மிகவும் பொருந்துகிறது.. வாழ்த்துகள் :))))))
வணக்கம் சகோ.!
தங்களுடைய இக்கவியும், அதனோடு தொடர்ந்த கருத்துரைகளும் நான் வலைச்சரத்தில் ஆசிரியராக பொறுப்பேற்கும் காலத்தில் எடுத்துக்காட்டிட தேவைப்படுகின்றது. தாங்கள் இசைந்தால் மட்டுமே இப்பதிவு அங்கே எடுத்துக் காட்டப்படும் என்பதனைத் தெரிவித்து தங்களின் மேலான மறுமொழியினை இங்கேயே தெரிவித்திட வேண்டுகின்றேன்.
நன்றி
@ சிவஹரி
வணக்கம்! வலைச்சரத்தில் இப்பதிவு இடம்பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி :)
த.ம. 1
கருத்து தொடர்கிறேன்பா சுபத்ரா...
அன்பின் சுபத்ரா,
என் அன்புத்தம்பி பிரத்யேகமாக குறிப்பிட்டிருக்கானே என்று இந்த தளம் வந்தேன்பா....
இந்த காலத்துக்குழந்தைகள் தன் வாழ்க்கையை தன் எதிர்க்காலத்தை அழகாய் திட்டமிட்டுக்கொள்கின்றது..
நல்லது எது தீயது எது என்று இனம் பிரித்து தனக்கு வேண்டியது எது என்று சமயோஜிதமாய் தேர்ந்தெடுத்துக்கொள்கிறது..
இனி கவிதை வரிகளுக்கு வருவோம்…
சிந்தனை வரிகளின் துளி கொஞ்சம் கொஞ்சமாக பெருகி பிரவாகம் எடுத்தது போல் உணர்ந்தேன். கடைசி பத்தி நச்…
இயந்திர கதியில் இயங்கும் மனிதர்களை ஒருமுறை நிற்கவைத்து உலுக்கவைத்த வரிகள்….
தினம் தினம் நாம் பார்க்கும் காட்சிகள், நிகழ்வுகள், எல்லாம் பார்த்துக்கொண்டு நகர்ந்துக்கொண்டே தான் இருக்கிறோம்…
ஆனால் அப்படி ஒரு க்ஷணத்தில் எங்கோ மனநிலை பிறழ்ந்து உடை கிழிந்து காமக்கழுகுகளின் பார்வைகள் துரத்த உணவுக்கு கையேந்தும் பெண்ணின் பரிதாப முகம், நம்மால் ஒன்றும் செய்ய முடியாத இயலாமை, இதெல்லாம் சேர்ந்து ஆழ்மனதில் எங்கோ நம் அனுமதி இல்லாமலேயே அந்த பெண்ணின் முகம் கலங்கலாய் பதிந்துவிட….
அறியாமல் இடித்துவிட்டாலும் மன்னிப்புக்கோரும் நல்லமனம் அத்தனை வேகமான உலகில் எத்தனைப்பேருக்கு உண்டு?
வாய்ப்பு கிடைத்தால் சட்டென உரசி தன் அற்பசுகத்தை தீர்த்துக்கொள்ளும் வக்கிர குணமுடைய மனிதர்களுக்கிடையில் ஐயோ இடித்துவிட்டோமே சாரி சொல்லிரலாம்னு திரும்பினால் காணோம்…. அந்தப்பிள்ளைக்கும் அவசரம் நகர்ந்து மறைந்துவிட்டாள்….
இப்படி தினம் தினம் பார்க்கும் ஏதோ ஒரு பெண்ணின் அத்தனை மன உணர்வுகளையும் வெளிப்படுத்தும் முகத்தை மனம் தன் பாட்டுக்கு சேமித்துவைத்துக்கொள்ள….
பின் என்றோ ஒரு நாள் நவீன ஓவியத்தில் அந்த பெண்ணின் முகம் வேண்டுமானால் அதில் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் அந்த சோகமோ, அல்லது கண்ணீரோ, சந்தோஷமோ, வலியோ ஏதோ ஒன்றைப்பார்க்கும்போது மனதில் இருந்த கலங்கலான நினைவுகள் மேலெழும்பி ஓவியத்தோடு பொருத்தப்பார்க்கும்போது முகத்தின் வடிவம் கிடைக்காமல் தடுமாறி அடையாளம் காணமுடியாமல் தவிப்பதை மிக தத்ரூபமாக வரிகளில் அமைத்து வடித்த கவிதை சிறப்பு சுபத்ரா…
மனம் தொட்ட பகிர்வு சுபத்ரா….
அருமையான கவிதைப்பகிர்வு.... அதற்கு என் மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்பா....
கவிதைக்கான கருத்துகளும் படித்தேன்பா...
உங்க மனத்திண்மை ரொம்ப பிடித்தது...
அதற்கும் மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்பா...
வலைச்சரத்தில் இப்பதிவை இடம்பெறச் செய்த திரு.சிவஹரி அவர்களுக்கு நன்றி!
@ மஞ்சுபாஷினி (அழகான பெயர்)
தங்களது வருகைக்கும் ஆழமான வாசிப்பிற்கும் புரிதலுக்கான விளக்கத்திற்கும் மிக்க நன்றி அக்கா :)
அன்புடன்
சுபத்ரா
Post a Comment