நில்! கவனி! கடந்துசெல்!

Feb 8, 2012


உருட்டி ஊட்டிய பின்பு
வயிறு நிறைத்த
வழித்துப் பிசைந்த
கடைசிக் கையுருண்டை

கோர்த்த சரம் போக
எஞ்சிச் சிதறிப்போன
பிஞ்சு பிச்சி மொட்டுகள்

கடைசிப் பொருளைப்
பொறுக்காமல் விட்டுவந்த
வாடகை வீடு

மருண்டு விழித்த பின்னிரவு
உறக்கத்தினூடே
புதைந்த கனவுவொன்றின் எச்சம்

சாயம் வெளுத்த ரவிக்கையின்
ஆயுளை நீட்டிக்கொண்டே சென்ற
காலண்டர் ஊசி

மைத்தடவல்களை மறந்து
ஸ்டிக்கர்ப் பொட்டுகளுக்கு மாறிவிட்ட
கண்ணாடிச் சட்டம்

மொழுகிய மேடையின் ஈரத்தில்
கரைந்து மணந்த
வெள்ளைக் கோலங்கள்

காக்காமுள் குத்திய காற்றாடியுடன்
ஓலைக்கூரையில்
காய்ந்து போன வேப்பங்குச்சி

அடிவாங்கிய ஒலிச்சுருளின் பாடலைப்போல
அவ்வப்போது நிறுத்தி
நிதானிக்கச் செய்யும் இவைகளால்
நகர்ந்து கொண்டிருக்கும் என் உலகம்.

Read More...