சொர்க்கமே என்றாலும்

Jun 25, 2012


வலைப்பூ பக்கம் வந்தே பல நாட்கள் ஆகின்றன. அவ்வப்போது எழுதுவதற்கு அருமையான விஷயங்கள் தோன்றிக்கொண்டே இருந்தாலும் எழுதவேண்டும் என்று அமரும்போது மனது tabula rasa ஆகிவிடுகிறது :-)  

ஊருக்கு வந்து இரண்டு வாரம் ஆச்சு. வந்ததுல இருந்து பயங்கர சந்தோஷம்! பல பழைய நண்பர்களையும், சில புது நண்பர்களையும், சில பழைய முகங்களைப் புதிதாகவும் பார்த்த மகிழ்ச்சி! நண்பர்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் அது போய்க் கொண்டே இருக்கும். ஒவ்வொரு நண்பனும் ஒரு புத்தகம்...இல்ல இல்ல ஒரு நூலகம் மாதிரி. வாழ்க்கை முழுவதும் கற்றுக் கொள்வதற்கு ஏராளாமான செய்திகளை வழங்கிக்கொண்டே இருக்கின்றனர்.

என்னோட நெருங்கிய நண்பன் ஒருவன், “books and friends should be few and good” என்று சொல்லிக் கொண்டேயிருப்பான். ஆனால் கடந்து வரும் இடங்களும் சூழ்நிலைகளும் பலவிதமான நல்ல நண்பர்களை அள்ளித்தருகின்றன! தவிர்க்க முடியவில்லை. நம்மை மதித்து வந்து சிரிக்கச் சிரிக்கப் பேசுபவர்களிடம் செயற்கையாகச் சிரித்து வைக்கவோ, முகத்தைத் திருப்பிக்கொண்டு போகவோ பிடிக்கவில்லை. இந்நேரம் நண்பர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன்.. ‘நீங்க phone பண்ணி நான் attend பண்ணலன்னா, உங்க கிட்ட free ஆகப் பேசுற சூழல்ல நான் இல்லன்னு அர்த்தம். Pls understand and excuse me’.

ஊருக்கு வந்து அம்மாவின் அரவணைப்பில் இருப்பது மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. சின்ன வயதிலிருந்தே வீட்டில் ஒரு வேலை கூட செய்ய அம்மா என்னை அனுமதித்ததில்லை. ‘பொண்ணு படிக்கட்டும்என்று அப்படியே வளர்த்துவிட்டார்கள் :-) (ஆனால் அம்மா இல்லாத சமயங்களில் வீட்டில் எல்லா வேலைகளையும் ஒழுங்காகச் செய்து வைக்காவிட்டால் வந்து அர்ச்சனை தான்)

வேலை செய்வதில் பெரிதாகச் சிரமம் இல்லை. எந்த வேலை செய்தாலும், உதாரணத்துக்குப் பாத்திரம் கழுவினால், ‘ஒழுங்காத் தேய்துணி துவைத்தால், ‘ஒழுங்காத் துவவீடு பெருக்கினால்ஒழுங்காத் தூருஎன்று ஆரம்பித்துஒழுங்கா நில்லு, ஒழுங்கா உக்காரு, ஒழுங்கா சாப்பிடு, என்று பலஒழுங்காச் செய்கள். அதைக் கேட்டுக் கேட்டேநீங்களே செஞ்சிக்கோங்கனு சொல்லிட்டு ஓடிவிடுவேன் :-)

இந்தப் பொண்ணுங்களைப் பெத்த அம்மாக்கள் அனைவருக்கும் ஒரே ஒரு கேள்வி:
 உலகத்துல உங்களைத் தவிர வேற யாருமேஒழுங்காவேலை பார்க்குறது இல்லையா?’ :-)

இவ்வாறுநொய் நொய்என்று நம்மை(மகளை) ஏதாவது குறை சொல்லிக்கொண்டே இருக்கும் அம்மா, அவர் போக்கிலே சாதாரணமாகச் செய்யும் சில பாசமான செயல்கள் நம்மை எந்த அளவு பாதித்து விடுகின்றன!!

எனக்குப் பிடித்ததை எல்லாம் கேட்காமலே சமைத்துத் தருவது. சாப்பிட வைப்பது. சாப்பிடும் போது பக்கத்திலே உட்கார்ந்து அம்மாவும் ஒரு தட்டில் சாப்பாட்டை வைத்துக் கொண்டு அதிலிருந்து எனக்குப் பிடித்தவற்றையெல்லாம் என் தட்டில் வைத்துச் சாப்பிடச் சொல்வது. சின்ன வெங்காயம் உரித்துத் தந்து சாப்பாட்டோடு சேர்த்துச் சாப்பிடச் சொல்வது. இஞ்சி, வேப்பிலை(!), கேரட் ஜூஸ் என எதையாவது செய்து வைத்துக் கொண்டு காலையில் என்னைத் தூக்கத்தில் இருந்து எழுப்புவது...எனப்பல விஷயங்கள் தனியாக இருக்கையில் நான் மிகவும் ‘miss’ செய்தவை. வாராவாரம் எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் சொல்வது. தலைக்குக் குளித்துவிட்டு முடியைக் காயவைத்துக் கொண்டு இருக்கையில் சாம்பிராணிப் புகையைக் கொண்டுவந்து காட்டுவது எல்லாம் யாருமறியாமல் என்னை அழவைத்த அழகான தருணங்கள்.

தினமும் எனக்குப் பூ வாங்கி வைப்பது, ஒரு முறையாவது புடவை கட்டவைப்பது, என்னை மேலும் படிக்கச் சொல்லி தன்னம்பிக்கையூட்டுவது, எவ்வளவு தான் என்னைத் திட்டினாலும் பிறரிடம் என்னை விட்டுக் கொடுக்காமல் பேசுவது...என இந்த அம்மா தான் எத்தனை அழகானவள் :-)


தாயும் தாய்நாடும் தாய்மண்ணும் தாய்வீடும்(திருமணமான பெண்களுக்கு) என்றுமே சொர்க்கம் தான்.

Read More...

ஊருக்கு வெளியே

Jun 6, 2012



ஒரு மந்தமான மதிய வேளை. உண்ட களைப்பில் வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். அது என்னவோ தெரியவில்லை எல்லோரும் விழித்திருக்கும் நேரங்களில் உறங்குவதற்கும் உறங்கும் நேரங்களில் விழித்திருந்து வித்தியாசப்படுவதற்கும் மிகவும் பிடித்திருந்தது. ஒரு வழியாக முழுவாண்டுத் தேர்வு முடிந்து விடுமுறையும் தொடங்கியிருந்தது. அடுத்தவருடம் நான்காம் வகுப்பு! உமா டீச்சரின் வகுப்புக்குப் போக வேண்டும்.
Read More...