தனிமையே..
உன் காதலர்கள் கபடதாரிகள்.
உன் மடியமர்ந்து அவர்கள் பருகும் தேநீர்
எச்சில் கலந்தது.
உன் தோள்சாய்ந்து அவர்கள் வாசித்துக்
கொண்டிருப்பது
வேறொருவனின் அந்தரங்கத்தை.
அவர்கள் முகர்வதெல்லாம்
முற்றியுதிர்ந்த காலவெளி
கடந்த முடிவிலி பிரியத்தின் மலர்களை.
அவர்கள் சிந்தனையெங்கும்
முன்னாள் காதலர்களிடம் அவர்கள்
கேட்கத் தயங்கிய
சில அபத்த ஐயங்களின் பட்டியல்கள்.
உன் நிலவொளியில் அவர்கள்
தூண்டிலிடுவதோ
பல்லாயிரம் விண்மீன்களை.