தனிமையே..
உன் காதலர்கள் கபடதாரிகள்.
உன் மடியமர்ந்து அவர்கள் பருகும் தேநீர்
எச்சில் கலந்தது.
உன் தோள்சாய்ந்து அவர்கள் வாசித்துக்
கொண்டிருப்பது
வேறொருவனின் அந்தரங்கத்தை.
அவர்கள் முகர்வதெல்லாம்
முற்றியுதிர்ந்த காலவெளி
கடந்த முடிவிலி பிரியத்தின் மலர்களை.
அவர்கள் சிந்தனையெங்கும்
முன்னாள் காதலர்களிடம் அவர்கள்
கேட்கத் தயங்கிய
சில அபத்த ஐயங்களின் பட்டியல்கள்.
உன் நிலவொளியில் அவர்கள்
தூண்டிலிடுவதோ
அவர்கள் பரவசம் கொள்வதெல்லாம்
உறவுவட்டத்தின்
தொடுகோடுகள் எங்கோ கலக்கும் கலவிப் புள்ளிகளில்.
அவர்கள் தழுவிக்
கொண்டிருப்பது
உண்மையில் உன்னையல்ல.
குழந்தையின் பால்மணக்கும்
சிறுவாயில் சொறியும்
பெருமார்பைப் போல
நீ புகட்டும் திகட்டாத காக்டெய்ல்
நினைவுகளின் போதையில்
அவர்கள் திளைத்துக் கிடப்பதேன்?
தனிமையே..
இத்தனிமையில்..
அவ்வப்போது பெருவேதனை கொண்டு
உன் காதலர்கள் தேடித் திரிவது
உண்மையில் உன்னைத் தானோ?
தனிமையே..
உன் காதலர்கள் கருணைக்குரியவர்கள்.
5 comments:
Welcome Back. Feel good கவிதை.
அருமையான கவிதை...
வாழ்த்துக்கள்.
@பொன்.பாரதிராஜா
Thank you :)
@பரிவை சே.குமார்
Thank you
அழகான நடை!
Post a Comment