டைட்டில் வேற வைக்கனுமா?
Feb 14, 2013
அவள் அப்போது நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். படிப்பில் அவள் எப்பவுமே செகண்ட். இன்னொரு பையன் எப்பவுமே ஃபர்ஸ்ட். இருவரும் அருகருகே தான் உட்கார்ந்திருப்பார்கள். அடிக்கடி சேர்ந்து படிப்பார்கள். ஒரு நாள் கணக்கு நோட்டை ஆசிரியரிடம் காண்பித்து ‘டிக்’ வாங்கிவிட்டு இருக்கைக்கு வந்தவளுக்கு அதிர்ச்சி. தன்னுடைய புத்தம்புது ஜாமெட்ரி பாக்ஸில் யாரோ கிறுக்கியிருந்தார்கள். அவளுக்குப் புரிந்துவிட்டது..
“இது இவன் வேலையாத் தான் இருக்கும். எப்பம் பாத்தாலும் இவன் தான் காம்பஸ் வெச்சு பாக்ஸ்ல கிறுக்கிக்கிட்டே இருப்பான்! இரு குடுக்கேன் ஒரு கொடை”
“எல.. இந்த ஜாமெட்ரி பாக்ஸ் ஏன்கொள்ளது தான? இதுல ஏன் காம்பஸ் வச்சி கிறுக்கி வெச்ச?” என அவள் சண்டைக்குப் போக அவனோ நிதானமாகப் பேசினான்.
“அட கிறுக்கி.. அது கிறுக்கல் இல்ல. அதுல என்ன எழுதிருக்கு?”
“1 4 3”
“அப்படினா என்ன அர்த்தம் தெரியுமா?” என்று கேட்டான். இவளும் பேந்த பேந்த முழித்துவிட்டு என்னவெல்லாமோ கெஸ் பண்ணிப் பார்த்துவிட்டு இறுதியில் ஈகோவை விட்டுட்டு அவனிடமே கேட்டாள்..
“என்னல அர்த்தம்?”
“1 = I, 4 = LOVE, 3 = YOU; “I
LOVE YOU” னு அர்த்தம்”
“சரி அப்பம் “I
HATE YOU” க்கும் அதே தானல வரும்? எதுக்கு முழுசாச் சொல்லாம நம்பர்ல சொல்லுதாங்க?” என்னும் அறிவுப் பூர்வமான கேள்வி ஒன்றைக் கேட்டு அவனை மடக்கினாள். “இது சரிபட்டு வராது” என அவன் விட்டுச்சென்ற பின்பு தான் அவள் யோசிக்க ஆரம்பித்தாள்.
“இவன் ஏன் நம்ம பாக்ஸ்ல இப்படி எழுத வெச்சான்? அப்படின்னா...!!!”
அதன்பிறகு வந்த சில தினங்களில் அவன் பார்க்காவிட்டாலும் அவள் அவனது முகத்தைப் பார்க்கவே அவ்வளவு வெட்கப்பட்டாள். என்னவென்றே தெரியாத உணர்வு..
“இது தான் காதலா?”
அவள் இப்போது பன்னிரெண்டாம் வகுப்பில். டியூஷன் முடித்து வீட்டுக்குத் திரும்பும் பாதையில் ஸ்கூட்டி நின்று விட்டது. மழை வேறு கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. அந்தப் பாதையில் பேருந்துக்கும் வழியில்லை. என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்த போதே தூரத்தில் தன்னோடு டியூஷன் படிக்கும் யாரோ ஒருவன் வருவது தெரிந்தது. தனியாகத் தவிக்கும் இவளைப் பார்த்து வண்டியை நிறுத்தினான்.
“நீ கோயில்மணி சார் டியூஷன் தான? என்னாச்சு?”
“தண்ணிக்குள்ள விட்டுட்டேன். ஸ்டார்ட் ஆக மாட்டேங்கு”
“ரோடு இந்தப் பக்கம்லா இருக்கு? நீ எதுக்கு அங்கன போய் வண்டிய உட்ட?!”
“மானத்தை வாங்குறானே.. சரியா வண்டி ஓட்ட தெரியாதுனா சொல்ல?!”
“வண்டி ஓட்டத் தெரியாதா?”
“...”
அவனும் சேர்ந்து எவ்வளவு முயன்றும் ஒன்றும் செய்ய முடியவில்லை. கொஞ்ச தூரம் உருட்டிச் சென்று பக்கத்துக் கடையில் நிறுத்தி லாக் செய்துவிட்டு அவனது பைக்கிலேயே வீட்டுக்குச் சென்றாள். அம்மாவுக்குத் தான் சிறிது பதற்றம்..
“ரொம்ப தேங்க்ஸ் தம்பி.. உங்க வீடு எங்கயிருக்கு?
“பக்கத்துல தாம்மா. பிள்ளையார் கோயில் தெரு”
போகும் போது கண்ணாலே பேசி நன்றி கூறிய அவளைப் பார்த்து வசீகரமாகப் புன்னகைத்துச் சென்றான். அதற்கு அடுத்து வந்த நாட்கள் அவள் காதல் வாழ்க்கையின் பொன்னேடுகளில் முத்த எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை!
“இது தான் காதலா...?!”
அவள் அப்போது ஒரு கலைக் கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தாள்.
“உனக்குலாம் மனசுனு ஒன்னு இருக்கா?”
“...”
“காதல்னா என்னனு உனக்குத் தெரியுமா?”
“...”
“காலேஜ்ல உன்னைப் பார்த்த முதல் நாள்ல இருந்து மூனு வருஷமா உன் பின்னாடி சுத்துதேன். கொஞ்சங் கூட என்னை மதிக்க மாட்டேங்க?”
“எனக்காக நீ என்ன செய்வ?”
“என்ன செய்யனும்?”
“என்ன பாத்துகிட்டே இருக்கது.. பின்னாடி சுத்துறது.. எல்லாத்தையும் நிறுத்தனும்..”
அதற்குப் பின் அவன் அவளைக் கண்டுகொள்வதே இல்லை. அவன் பார்க்கிறானா இல்லையா எனப் பார்த்துப் பார்த்தே இவளுக்கு அவன்மேல் ஒரு ‘இது’ உருவாகிவிட்டது..
“நில்லு.. என்னை ஏன் இப்பமெல்லாம் பாக்கவே மாட்டேங்க?”
“என்ன பிள்ள.. வெளையாடுதியா? நீ தான பாக்காதனு சொன்ன?”
“அதுக்குனு உட்ருவியா? இதுக்குப் பேரு தான் லவ்வா?”
அவனிடம் அவள் பேசியதை அவளாலே நம்ப முடியவில்லை.. “இது தான் காதலா?!!”
அவள் இப்போது தன் மகளின் வருகைக்காகக் காத்திருந்தாள். பெற்றோர் பார்த்துச் செய்துவைத்த திருமணம் முடிந்து பத்து வருடங்கள் பறந்தோடிவிட்டன. பள்ளிக்கூடம் சென்றவள் வீடு திரும்பும் நேரம் தான் இது.
“அம்மா...!”
குரல் கேட்டுத் திரும்பினாள். மகள் வருவது தெரிந்தது..
“என் ஜாமெட்ரி பாக்ஸ்ல அருண் கிறுக்கி வெச்சிட்டான் ம்மா.. இங்க பாரேன்!”
அவள் அதில் ஆர்வமுடன்
எதையோ தேடிக் கொண்டிருந்தாள்..
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
Unmaiyaana karpanai:-)
பாவம் தான் அந்த காதல் காதலர்கள சேத்து வைப்பீங்கனு நெனெச்சேன் இப்படி கவுத்துடீங்க....சரி போனா போகுது பொண்ணோட காதலாவது கைகூடட்டும்
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க....
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
தகவல்கள் அருமை தோழி எம் தளத்திற்க்கு தங்களை வரவேற்கிறேன்
டைட்டிலே ரொம்ப நல்லா இருக்கு.
கதையும் அருமை.
வாழ்த்துக்கள்.
தலைப்பும் கதையும் அருமை...
வாழ்த்துக்கள் அக்கா.
@Anonymous
Its an oxymoron :-)
@vimal
அம்புட்டு நல்லவரா நீங்க :-)
@Easy (EZ) Editorial Calendar
நன்றி. தப்பும் தவறுமாக இப்படி ஒரு விளம்பரத்தைப் போற இடத்துல எல்லாம் தெளிச்சிட்டுப் போகலைன்னா தான் என்ன?
@kartiq roshan
நன்றி. நேரம் கிடைக்கும் போது வருகிறேன்..
@அருணா செல்வம்
மிக்க நன்றி :-)
@சே. குமார்
கருத்துக்கு நன்றி.. ஆனால் நான் உங்களுக்கு அக்கா இல்லை. வேண்டுமானால் தங்கை என்று வைத்துக்கொள்ளலாம்
Post a Comment