க. சுதாகர் என்பவரால் எழுதப்பட்டு வம்சி பதிப்பகத்தில் வெளிவந்திருக்கும் ‘6174’
நாவலைப் படிக்க நேர்ந்தது. தமிழர்களின் பழம்பெரும் வரலாற்றை அறிந்துகொள்வதில் எப்போதும் ஒரு தேடல் என்னுள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையிலும் லெமூரியா என்ற வார்த்தையைத் தவிர அதைப்பற்றி அறிந்துகொள்வதற்கு வேறு மூலங்களே இல்லாத நிலையிலும் குவாண்டம் பிசிக்ஸின் தத்துவங்களுக்கு வாயைப்பிளக்கும் ஒரு கணிதப் பட்டதாரியான எனக்கு லெமூரியா+கணிதம்+இயற்பியல்+பண்பாட்டய்வு எனக் கலந்துகட்டி எழுதப்பட்டிருக்கும் ஒரு நாவலைப் படிப்பதில் ஆர்வம் ஏற்பட்டதில் அதிசயம் ஒன்றுமில்லை. போதாததற்கு தம்பியின் கல்லூரி இறுதியாண்டு
project வேறு Fibre
Optic Crystals பற்றியது. கேட்கவா வேண்டும்?
இந்நாவலை ஒரே மூச்சில் படித்து முடித்துவிடலாம் என்றாலும் நான் மூன்று நாட்களாக வைத்து வைத்துப் படித்தேன். முதல் காரணம் சில பக்கங்களிலேயே என் எதிர்பார்ப்பு தளர்ந்து போனது. இரண்டாவது காரணம், இதை வாசிக்கத் தொடங்குவதற்குச் சற்றுமுன்புதான் சுஜாதாவின் ‘பேசும் பொம்மைகள்’ நாவலை நான் முடித்திருந்தது.
6174 ஆசிரியரின் முதல் நாவல். இதை எழுதுவதற்காக அவர் மிகவும் பிரயத்தனப்பட்டிருப்பது தெரிகிறது. தமிழில் அறிவியல் புனைவு genred
கதைகள் எழுதும் ஒரு புது நாவலாசிரியர் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. அதுவும் அவர் எங்கள் ஊர்க்காரர் :) நாவலில் நிறைய
technical விஷயங்கள் இருக்கின்றன. கொஞ்சமாக Shiva
Trilogy-யை நினைவூட்டியது. படித்து முடித்தவுடன் மனித இனம் முதலில் உருவான இடமாக யூகிக்கப்படும் கடற்கோளில் மூழ்கிய லெமூரியா கண்டம் பற்றிய நமது தேடலைத் தூண்டிவிட்டு விடுகிறது. 6174 என்னும்
kaprekar constant கதையின் போக்கிற்குக் கொண்டுபோய் எழுதப்பட்டு அதுவே புத்தகத்தின் தலைப்பாகவும் வைக்கப்பட்டிருக்கிறது.
நாவலைப் படித்தபோது எனக்குத் தோன்றிய சில விஷயங்களை இங்கே சொல்கிறேன்.
Nonlinear வகையில் எழுதப்பட்டிருக்கும் இந்நாவலில் காட்சிகள்
(ascending) chronological-ஆகவோ descending ஆகவோ இல்லாமல் காட்சிக்குக் காட்சி சம்பந்தமில்லாத நேரம்/இடங்களில் அமைந்திருப்பதைக் கவனமுடன் தொடர்ந்துகொண்டே வந்தாலும் ஒரு கட்டத்தில் அது நம்மை tired ஆக்கி என்னதான் நடக்கப்போகிறது பார்க்கலாம் என்ற சலிப்புடனே விறுவிறுவென்று மேலே வாசிக்க வைக்கிறது.
‘லெமூரியர்கள் கூர்மையான அறிவு அதிகம் படைத்த இனமில்லை. எல்லாம் மெதுவாகத்தான் புரியும்’ என்ற வரியைப் படித்ததிலிருந்து தொடங்கியது நாவலுடனான எனது முரண்பாடு. அனந்தையும் ஜானகியையும் மெத்தப் படித்தவர்களாகக் காட்டியிருக்கும் ஆசிரியர் அவர்களுடைய உரையாடல்களை நிறைய இடங்களில் மிகவும் silly-யாக அமைத்திருக்கிறார். உதாரணத்திற்கு, ஜானகியும் அனந்தும் வெவ்வேறு நாடுகளிலிருந்து தேவராஜால் இந்தியா வரவழைக்கப்படுகின்றனர். என்ன காரணத்துக்காக என்று அவர்களுக்கே தெரியாமல் நாடு விட்டு நாடு வரவழைக்கப்பட்டுக் குழம்பிக்கொண்டிருக்கும் வேளையில் அம்மூன்று பேருக்கும் புதிர் ஒன்றின் வரிகள் குறுஞ்செய்திகளாகப் பிரித்து அனுப்பப்படுகின்றன. அந்தப் புதிரின் வரிகளைச் சேர்த்துப் பார்த்தவுடன் விடையைக் கண்டுபிடித்துவிடும் ஜானகி உடனே மற்றவர்களுக்கு அது என்னவென்று சொல்லி அடுத்த நிலைக்கு நகராமல் “ஒரேயொரு க்ளூ தர்றேன். ஹர்ஷத் நம்பர்ஸ்” என்று அவர்களுக்கே புதிர் போடுவது போலக் காட்டியிருப்பது
context-க்கு பொருந்தவில்லை. அதே போல் “மலர்களிலே மல்லிகையென்றோர் நகரங்களிலே” என்ற புதிருக்கு “கிட்டத்தட்ட கண்டுபிடிச்சிட்டோம்” என்று அனந்த் சொல்ல அது என்னவென்று கூட கேட்காமல் “லெட் மி திங்க்” என தேவராஜ் சொல்லுவதும் இதுபோன்ற புதிரை அவிழ்க்கும் மற்ற காட்சிகளும் வாசகர்களுக்கு ஏதோ விளையாட்டு காட்டுவது போல் இருக்கிறது. அதுபோக ஒவ்வொரு முறை விடைகளைக் கண்டுபிடித்தவுடனும் ஒருவருக்கொருவர் கொடுத்துக்கொள்ளும் விளக்கங்கள் புதிய பறவை படத்தின் climax
காட்சியை நினைவுபடுத்துகின்றன :) அதுவும் அப்புதிர்கள் கடினமானவையாக இருந்தாலாவது பரவாயில்லை. ஒரு பேச்சுக்கு வெண்முரசை ஒப்பிட்டுப் பார்த்தால்கூட அதைவிட நூறு மடங்கு எளிதானவை அவை
:)
பொதுவாகப் பேய்ப் படங்களில் கவனித்திருப்பீர்கள், யார் பேய் என்ற ஒன்று இருப்பதை நம்பாமல் மறுத்துப் பேசிக் கிண்டல் பண்ணிக்கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கே பேய்பிடிப்பது போலக் காட்டுவார்கள். அல்லது அவர்களே கடைசியில் பேயை ஓட்டுவது போலக் காட்டுவார்கள். அதைப் போலவே இக்கதையில் வரும் ஜானகி மற்றும் அனந்த் கதாப்பாத்திரங்களை லெமூரியா
concept பற்றி முதலில் நம்பாமல் இருப்பவர்களாகவும் பின்னர் நம்பிக்கை பெற்று அவர்களே கதையின் முடிச்சை அவிழ்ப்பவர்களாகவும் காட்ட முயன்றிருக்கும் ஆசிரியர், தேவராஜ் சொல்லும் சின்ன விஷயங்களைக் கூட நம்பாமல் “இந்தக் கிழம் என்னதான் சொல்ல வருகிறது?”, “என்னது இது? சுத்த லூசு கேசா இருக்கு?”, “அங்க எத்தனை கிழடு கட்டைகள் இப்படி கேணத்தனமா ஆடப் போகுதோ?” போன்ற வசனங்களை ஜானகி பேசுவதாகக் காட்டியிருப்பது கதாப்பாத்திரத்துக்கு மீண்டும் பொருந்தவேயில்லை.
இதைப் போலவே அமைக்கப்பட்ட நிறைய காட்சிகளும் ‘ஓ மை காட்’, ‘இம்பாசிபிள்’, ‘இன்க்ரெடிபிள்’, ‘அமேசிங்’ போன்ற
repeated வார்த்தைகளும் சலிப்படைய வைக்கின்றன. எழுத்தின் மூலமாக ஆசிரியரின்
attitude-ஐ வாசகன் (எழுத விரும்பாத தமிழ் வாசகன் கூட!) அறிந்து கொள்ள முயல்வது இயற்கையல்லவா?
நாவலில் தெளிவான பத்தி பிரித்தல் இல்லாததால்
clarity இல்லை. ஒரு இடத்தில் ஃபிபோனாச்சி தொடரைக் கோலத்தில் காட்டமுயலும்போது “மூணு புள்ளி நீளம், நாலு புள்ளி அகலம்-னு வைங்க” என்று சொல்லிவிட்டுக் கோலத்தின் நடுவேயிருக்கும் ஒற்றைப்புள்ளி என்று எழுதியிருப்பது பிழையா எனத் தெரியவில்லை. கோலங்களுக்குள் ஃபிபோனாச்சி எண்கள் இருப்பதை ஜானகி சொல்வது கதையில்
build-up கொடுத்த அளவுக்கு வியப்பானதாக இல்லை அல்லது எனக்கு வியக்கத் தெரியவில்லை.
ஆரம்பத்தில் லெமூரியர்களின் சக்தி பீடமாகிய பிரமிடை அவர்களே இரு துண்டுகளாக்கி இரண்டையும் வெவ்வேறு இடங்களுக்கு அனுப்புகின்றனர். அது மனிதர்களின் கைகளில் கிடைக்கக்கூடாது என்பதற்காகவே அவ்வாறு செய்யப்படுகின்றது. அப்படியிருக்கையில் அவ்விரு பிரமிடு துண்டங்களின் இருப்பிடங்களைக் காட்டிக்கொடுப்பதற்காகப் புதிர்களாக அங்கங்கே எழுதிவைத்தவர்கள் யார் என்பது புரியவில்லை. பிரமிட் இருக்கும் இடமே தெரியாமல் அதன் ஒளிப்பாதையை எப்படிக் கணிக்க முடியும், கணித்துச் சரியாக இரண்டு விண்கற்களை வானில் உலவவிட முடியும் என்றும் தெரியவில்லை.
லெமூரியர்களைப் பற்றித் தெரிந்துகொண்ட ரவி, தன்னை லெமூரியனாகவே எண்ணிக்கொள்கிறான் என்று கதையின் இறுதியில் வருகிறது (சந்திரமுகியோட கதையைக் கேட்டுக் கேட்டு கங்கா சந்திரமுகியாகவே மாறியதைப் போல). அதைப் போலவே claim பண்ணும் தேவராஜைப் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. அவரும் ரவி மாதிரி தானா? இருந்தாலும் அவர்கள் இருவருக்கும் காதுகள் நீளமாக இருப்பதுபோல் காட்டியிருப்பது கதைக்கு
illogical but interesting and deceptive.
‘தமிழில் அறிவியலைக் கருவாகக் கொண்டு சிறுகதைகள் எழுதப்பட்டிருந்தாலும் நாவல்கள் எழுதப்பட்டதில்லை. மர்ம நாவல்களில் அறிவியல் கையாளப்பட்டிருப்பதை இலக்கிய வகைக்குள் சேர்க்க முடியாது. இது தமிழின் முதல் அறிவியல் புனைவு நாவல்’ (-ஜெயமோகன்?) என்று குங்குமம் பத்திரிகையில் விளம்பரம் வந்திருக்கிறது. ஆனால் புத்தகத்திற்கு
forewords எழுதியிருக்கும் பி.ஏ. கிருஷ்ணன் அவர்களோ இரா. முருகனோ அவ்வாறு சொல்லவில்லை. சொல்வனம் (‘காலச்சுவடு’ என்று தவறுதலாக எழுதியதைத் திருத்திவிட்டேன்) விமர்சனத்தில்
இது அறிவியல் புனைவு வகையிலேயே சேராது என்று ஒரு சிறிய ஆராய்ச்சியே நடத்தியிருக்கிறார்கள்.
தமிழில்
சுஜாதாவோ பிறரோ இதுவரை ஒரு அறிவியல் புனைவு நாவலைக் கூட எழுதியிருக்கவில்லையா என்பது தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லவும்.
இறுதியில் நாவலின்
sequel-க்கான தளத்தையும் ஆசிரியர் அறிமுகப்படுத்தியுள்ளார். விரைவில் வரும் என நம்புவோம். என்னைக் கேட்டால், நாவலை வாசிப்பதற்கு முன்னர் லெமூரியா கண்டத்தைப் பற்றிய எதிர்பார்ப்புகளோ
(fiction), 6174 பற்றிய ஆராய்ச்சியோ இல்லாமல், இந்நாவல் பற்றிய விமர்சனங்களையோ, அடுத்த சுஜாதா, தமிழின் டான் பிரவுன் போன்ற விளம்பரங்களையோ படிக்காமல் நாவலை வாசிக்க நேர்பவர்களுக்கு இந்நாவல் better
ஆக இருக்கலாம்.
My verdict:
Expectations not met. Could have been better.
9 comments:
நன்றி. இதில் சில திருத்தங்கள் வேண்டியுள்ளன. ஜெயமோகன் எழுதியது விளம்பரமல்ல. அவரது 10 புத்தகங்களின் பட்டியலில் 5ம் இடத்தைக் கொடுத்திருக்கிறார். அறிவியல் சார்ந்த புதினம் என்று பி.ஏ.கிருஷ்ணன் எழுதியிருக்கிறார். இரா.முருகன் எழுதியது , ரிவ்யூ அல்ல. ஒரு blurb என்ற அளவில் கொள்ளவேண்டும். இதில் எதையும் விளம்பரமாக நானோ, வம்சியோ செய்யவில்லை.
காலச்சுவடில் எவரும் இந்த புத்தகத்தை விமர்சனம் செய்ததாக எனக்குத் தெரியவில்லை. அது சொல்வனம்.காம் -ல் ராஜ் சந்திரா எழுதியது. அவரது ஒப்பீடு அவரது வாசிப்பினை ஒட்டியது. எது அறிவியல் புதினம் , அறிவியல் சார்ந்த புதினம் என்பதை வாசகர்தான் தீர்மானிக்க முடியும். ஜெயமோகன் அறிவியல் புதினத்திற்குக் கொடுத்திருக்கும் விளக்கத்தை அவரது பதிவில் காணலாம். அதுதான் இக்கதையின் உந்தம் -இதனை பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறேன். இது அறிவியல் புதினமா/ அறிவியல் சார்ந்த புதினமா என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். ஒரு வாசகர் , ஒரு கதையை வாசிக்கிறார் -அவ்வளவே. Genreகளில் புகுத்துவது தேவையற்றது என்பது என் எண்ணம்.
6174 எவ்வாறு கதைக்குப் பொருத்தமாக இருக்கிறது என்பதிலேயே சந்தேகம் இருந்தால் , கதை சரியாக இல்லை என்று என்னால் வருந்த மட்டுமே முடியும். எவ்வாறு ஜானகி கண்டுபிடிக்கிறாள் என்பதை , கதையிலும், இந்த பேஸ்புக் பக்கத்திலும் விளக்கியிருகிறேன். கதையின் பாத்திரங்கள் அறிவியல் அறிஞர்கள் மட்டுமல்ல, மனிதர்கள் கூட. பல அறிவியல் வல்லுநர்கள் பேசும் பேச்சைத்தான் இங்கு அவர்கள் பேசுகிறார்கள். (இதை விட மோசமாகப் பேசுவதைக் கேட்டிருக்கிறேன்!) எப்போதும் படு டீஸண்ட்டாக பேசுபவர்களாக பாத்திரங்கள் இருந்தால் அது செயற்கையாக இருக்கும். அமேஸிங், அபாரம் என்று ஒரு கதாபாத்திரம் வியந்தால் , அது கதா பாத்திரத்தின் வியப்பே தவிர, ஆசிரியர் படிப்பவரை உந்தச் செய்வதற்காக அல்ல. எவ்வளவு superlative ஆக ஒரு செய்தியாக எழுதினாலும், வாசகர் மனம் லயிக்காவிட்டால், ஒரு செய்தியை அவரால் உள்வாங்க முடியாது, வியக்க முடியாது.
பிபனாச்சி எண்களும், சித்திரமும் கோலத்தில் வருவது பெரும் சிறப்பு. பிபனாச்சி தொடர், எண்கள் குறித்து பெரும் ஆய்வுகள், ஆய்வுக்குழுக்கள் உலகெங்கிலும் இருக்கின்றன. அவர்களே அசந்து போன ஒன்று - கோலத்தில் அவை வருவது. இதனை டாக்டர் நாரணனே என்னிடம் கூறியிருக்கிறார். இது டாக்டர். நாரணனின் பெருமையே தவிர கதையின் பெருமையல்ல.
குறைந்த பட்சம், கோலத்தின் அந்த சிறப்பை வாசகர் உணர்ந்திருக்கலாம்.
//ஜெயமோகன் எழுதியது விளம்பரமல்ல// ஜெயமோகன் விளம்பரம் எழுதியதாக நானும் சொல்லவில்லை.
//இரா.முருகன் எழுதியது , ரிவ்யூ அல்ல. ஒரு blurb என்ற அளவில் கொள்ளவேண்டும். // இரா.முருகனும் ரிவ்யூ எழுதியிருப்பதாக நான் சொல்லவில்லையே. பி.ஏ.கிருஷ்ணனும் இரா.முருகனும் இது தமிழின் “முதல்” அறிவியல் புனைவு நாவல் என்று அவர்கள் எழுதிய கருத்துரைகளில் (or blurb, whatever) எங்கேயும் குறிப்பிடவில்லையே எனக் கேட்கிறேன்.
//ஜெயமோகன் அறிவியல் புதினத்திற்குக் கொடுத்திருக்கும் விளக்கத்தை அவரது பதிவில் காணலாம். அதுதான் இக்கதையின் உந்தம் -இதனை பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறேன்.//
//இது அறிவியல் புதினமா/ அறிவியல் சார்ந்த புதினமா என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். ஒரு வாசகர் , ஒரு கதையை வாசிக்கிறார் -அவ்வளவே. Genreகளில் புகுத்துவது தேவையற்றது என்பது என் எண்ணம்.//
ஜெயமோகன் அறிவியல் புதினம் என்னும் genre-க்கு கொடுத்திருக்கும் விளக்கம்தான் உங்கள் கதையின் உந்தம் என்று சொல்லிவிட்டு genreகளில் புகுத்துவது தேவையற்றது என்று நீங்களே சொல்கிறீர்களே? U r contradicting urself. அப்படியே தேவையற்றது என்றால் என்னுடைய அக்கருத்துக்களை நீங்கள் உதாசீனப்படுத்திவிடலாம்.
6174 எவ்வாறு கதைக்குப் பொருத்தமாக இருக்கிறது என்பதிலேயே சந்தேகம் இருந்தால் , கதை சரியாக இல்லை என்று என்னால் வருந்த மட்டுமே முடியும்.//
டாட்.
6174 எவ்வாறு கதைக்குப் பொருத்தமாக இருக்கிறது என்பதிலேயே சந்தேகம் இருந்தால் // 6174 உங்கள் கதைக்குப் பொருத்தமாக இருக்கிறது என்று தானே எழுதியிருக்கிறேன்.
Symmetrical designs தான் கோலங்கள். அவற்றுள் 1,1,2,3,5,8,... என்ற பிபனாச்சி சீரீஸ் வருவது வியக்கத்தக்கதே.
//எண்கள் போலவே, சமச்சீரமை வடிவம் புதிரானது. புனிதமானது. இரண்டும் கொண்ட கோலத்தைக் கொண்டாடாம...// என நீங்கள் கொடுத்திருப்பது over build-up என்றே எனக்குப்பட்டது..
//குறைந்த பட்சம், கோலத்தின் அந்த சிறப்பை வாசகர் உணர்ந்திருக்கலாம்.// குறைந்தபட்சம் கோலத்தின் அந்தச் சிறப்பை வாசகருக்கு உணர்த்தும் அளவிற்காவது எழுதியிருக்கலாம்.
Last but not the least, உங்கள் கதையைப் பெருமைபடுத்தியோ சிறுமைபடுத்தியோ சொல்லுவது என் நோக்கம் அல்ல. ஒரு பக்க விமர்சனத்துக்கு அதற்கு ஈடான அளவில் நீங்கள் பதிலளித்திருக்கும்போது (அதில் உள்ள பாசிடிவ் விஷயங்களைக் கண்டுகொள்ளாமல் நெகடிவ்ஸ்க்கு மட்டும் பதிலளித்திருக்கும்போது) 408-பக்க நாவலை வாசகர்களாகிய நாங்கள் படித்துவிட்டு விமர்சனம் செய்வது இயல்பானது என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன்..
Subadra :
நன்றாகவே படித்திருக்கிறீர்கள். :)
என்னைப் பொருத்தவரை நாவல் தரும் வாசிப்பின்பம் மிக முக்கியம். எத்தனை லாஜிக் ஓட்டைகள் இருக்கிறதென்பது எனக்கு முக்கியமில்லை. நீங்கள் சொல்லும் கட்டுக்கோப்பு இல்லாமல் கதை அங்குமிங்கும் அலைபாயும் ஸ்டைலே பிடித்திருக்கிறது. Tired ஆக்கவில்லை.
//‘லெமூரியர்கள் கூர்மையான அறிவு அதிகம் படைத்த இனமில்லை. எல்லாம் மெதுவாகத்தான் புரியும்’ என்ற வரியைப் படித்ததிலிருந்து தொடங்கியது நாவலுடனான எனது முரண்பாடு. // புனைவுகளில் வரும் பாத்திரங்கள் எப்படியும் இருக்கலாம் இல்லையா? உண்மையிலேயே புத்திசாலியான மக்களை சுமார் மக்களாகச் சொல்லி ஆரம்பித்ததில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.
படித்தவர்கள், மேதாவிகள் எல்லாம் சில்லியாகவும் பேசுவார்கள் என்பதே எதார்த்தம் அல்லவா?
//இதைப் போலவே அமைக்கப்பட்ட நிறைய காட்சிகளும் ‘ஓ மை காட்’, ‘இம்பாசிபிள்’, ‘இன்க்ரெடிபிள்’, ‘அமேசிங்’ போன்ற repeated வார்த்தைகளும் சலிப்படைய வைக்கின்றன.// அமேசிங். ;)
//நாவலில் தெளிவான பத்தி பிரித்தல் இல்லாததால் clarity இல்லை// முன்னும் பின்னுமாக அலையும் களத்தில் இப்படி தோன்றுகிறது என நினைக்கிறேன்.
மற்றபடி நிறைய சொல்லி இருக்கிறீர்கள். நான் இன்னும் கவனமாய் வாசிக்க வேண்டும்போல. இருப்பினும் இப்படி ஒருவர் கூர்ந்து வாசித்து கருத்து சொல்லி இருப்பது ஆசிரியருக்கு நிச்சயம் உத்வேகத்தையும், அடுத்து இன்னும் தெளிவாகவும் எழுத உதவும்.
எனது வலைப்பதிவில் கமெண்ட்டாக இந்தப் பதிவின் லின்க் இருந்தது. இன்றுதான் பிளாக்கை திறந்தேன், நீண்ட நாட்களுக்கு பின்னர்.
உங்கள் எழுத்துகளை இன்னும் வாசித்ததில்லை. இனி வாசிப்பேன்.
இட்லிவடையில் எழுதும் சுபத்ரா நீங்கள்தானோ?
அன்புடன்,
ஜெயக்குமார்
@Jeyakumar Srinivasan
இந்தப் பதிவைப் படித்துவிட்டுப் பொறுமையாகப் பதிலளித்ததற்கு மிக்க நன்றி!! புத்தகத்தைப் பற்றிய என்னுடைய மிகையான எதிர்பார்ப்பு தான் ஏமாற்றத்துக்குக் காரணம் என நினைக்கிறேன்.
நீங்களும் இட்லிவடை வாசகரா?
onnum puriyala but nandri for back after long time
Post a Comment