சொல்வனம் – கவிதைகள்

Jul 12, 2018



உறவு

வாலாட்டி மேலேறிக் குழைந்து எச்சில்படுத்திய
நாய்க்குட்டிக்கு நல்லவேளையாக நான் இருந்தேன்.
என் பசி
கோபம்
சோகம்
தீட்டு நாட்கள்
சோம்பல்
உறக்கம்
என எல்லாமும் அதற்குப் புரிந்தது போல் எதிர்வினையளித்தது.
கண்ணீர் உகுத்த நாளொன்றில்
பிரிவென்று சொல்லிக்கொள்ளவாவது
அவன் உறவொன்றை அளித்து
இம்மட்டுமாய் எனக்கருளிய தேவனுக்கு நன்றி
னப் புலம்பியதை அது பார்த்துக் கொண்டிருந்தது.
வாலாட்டி மேலேறிக் குழைந்து எச்சில்படுத்தும்
நாய்க்குட்டியாக நான் இருந்தேன்
நான் என ஒருவரும் இல்லை.




குடுவை உலகம்

குடுவையில் நீந்தும் மீன்
மேலெழும்பி மூச்சுவிட்டுச் செல்கிறது
கூழாங்கற்களைக் கொண்டாட்டமாக உரசுகிறது
இளையராஜா பாடல் கேட்கிறது
சிதறிப்போடும் மீன் உணவைக் கொரித்துத் தின்கிறது
குடுவைக்குள் மிதந்து தூங்குகிறது
திடுமெனக் கண்ணாடி வழியாக
மீன்முகம் காட்டிப் பழித்துக் கேட்கிறது
எங்கே என் உலகமென.

-

2 comments:

Mugilan said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

//திடுமெனக் கண்ணாடி வழியாக
மீன்முகம் காட்டிப் பழித்துக் கேட்கிறது
எங்கே என் உலகமென

Nice

தனி காட்டு ராஜா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மீன் இளையராஜா பாட்டு கேட்குதா...ஹ ஹ ஹா..இது ரொம்ப புதுசா இருக்கே ராதை (எ) சுபத்ரா மேடம்..