வணக்கம்! பரீட்சை ஒன்றை எதிர்கொள்ள உள்ளதால் வலைப்பூ பக்கமே வரமுடியவில்லை :-) இந்த மாதம் முழுவதும் அப்படித்தான். சரி இங்கே எழுத முடியாவிட்டாலும் இட்லிவடையில் எனது பதிவு ஒன்று வெளியாகியிருக்கிறது! ஆல் இண்டியா ரேடியோ திருநெல்வேலி வானொலி நிலையத்தில் நான் நிகழ்ச்சிகள் புரிந்த அனுபவம் பற்றி ஒரு கட்டுரை. அதன் லின்க் கீழே:
Special Thanks : Idlyvadai-இட்லிவடை
கட்டுரை கீழே:
ரேடியோ கேட்டிருப்பீர்கள், ரேடியோ ஸ்டேஷன் பார்த்திருக்கிறீங்களா? நான் பார்த்திருக்கிறேன் ஏன் ரேடியோவில் பேசியே இருக்கிறேன்! நான் கொடுத்த முதல் நிகழ்ச்சியை என்னால் மறக்க முடியாது.
எனக்கு மறதியும் சந்தேகமும் ஒட்டிக்கொண்டு பிறந்தவை. வீட்டைவிட்டு வெளியே கிளம்பி சற்றுத் தூரம் நடந்து வந்தபின்தான் பொட்டு வைத்துக்கொண்டோமா என்ற சந்தேகம் வரும்; கேஸ் சிலிண்டரை அணைத்துவிட்டு வந்தோமா என்ற சந்தேகம் வரும். நடந்து போய்க்கொண்டு இருக்கும் போது திடீரென ஒரு கால் கொலுசிலிருந்து மட்டும் சத்தம் வராது.. திருகை டைட் செய்ய மறந்துவிட்டதால் கழண்டு விழுந்துவிட்டதோ என்று சந்தேகம் வரும்; எல்லாம் சரியாக இருந்தாலும் எதையோ ஒன்றை வீட்டில் மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டோமா என்ற சந்தேகம் வரும். அதுபோலத்தான் இப்போது எனக்குக் கதையை எழுதிவிட்டோமா இல்லையா என்ற சந்தேகம் வர, இரவு முழுவதும் எதற்காகக் கண்விழித்திருந்தோம் என்ற லாஜிக் இடிக்கவே எழுதியாகிவிட்டது என்று உறுதி செய்துகொண்டு நிதானித்தபோது நிலையத்திற்கு வந்து சேர்ந்திருந்தேன். சேர்ந்த இடம் “All India Radio Tirunelveli (AIR Tirunelveli / Akashavani Tirunelveli)” வானொலி நிலையம்.
அன்று... தோழியின் கையைக் கோர்த்துக்கொண்டு என் மனதின் அதிர்வுகளை அவளிடமும் கொஞ்சம் கடத்திவிட்டு வந்திருந்த அனைவரும் உள்ளே அடியெடுத்து வைத்தபோது எனக்கு வயது பதினொன்று. உள்ளே நுழைந்தால் அப்படி ஒரு Pin drop silence. வரவேற்பரையில் அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துப் புன்னகைத்தபடி காத்திருந்தோம். அருகில் வாத்தியக் கருவிகளுடன் சிலர் தங்களது இசைநிகழ்ச்சியின் பதிவிற்காக அழைப்பை எதிர்நோக்கி அமர்ந்திருந்தனர். சிறிது நேரக் காத்திருப்பிற்குப் பின் “இளைய பாரதம்” நிகழ்ச்சிக்காக வந்திருந்த நாங்கள் அழைக்கப்பட்டோம்.
அவ்வளவு சுத்தமாகவும் கம்பள விரிப்புடனும் அழகாகப் பராமரிக்கப்பட்ட அந்த அறையினுள்ளே கண்ணாடியால் தடுக்கப்பட்ட ரெக்கார்டிங் பிரிவு ஒரு பெரிய ரெக்கார்டிங் கருவியோடு இருந்தது. நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குதல் தவிர நான் கலந்துகொண்டது ஒரு குழுப்பாடல். இந்திரா படத்திலிருந்து அச்சமச்சமில்லை. குழுவிலிருந்த அனைவரும் சேர்ந்து உணர்ச்சிவசத்துடன் பாடலைப் பாடிவிட்டு ரெக்கார்டிங்கை முடித்தபின்பு "இன்னும் கொஞ்சம் நல்லா பாடியிருக்கலாமோ ?" என்று நினைத்த போது தான் தெரிந்தது திரைப்படப் பாடல்களை அந்த நிகழ்ச்சியில் அவர்கள் ஒலிபரப்புவதில்லை என்பது! சரியென்று தொகுத்து வழங்குதலை முடித்துவிட்டு, ஆசிரியருடன் இணைந்து நண்பர்களுக்கும் உதவி செய்துவிட்டு வெளியே வரும் தருவாயில் அனைவரது ரெக்கார்ட் செய்யப்பட்ட குரல்களும் ஓடவிட்டுக் காட்டப்பட்டன. முதன்முறையாக ரெக்கார்ட் செய்யப்பட்ட குரலைக் கேட்டபோது அப்படியே அதிர்ந்து போனேன் “என் குரலா இது” (எனக்குப் பிடிக்கவில்லை) என்று! கூச்சமாக இருந்தது. வெளியே வந்தபின்பு தான் தெரிந்தது ஏறத்தாழ அனைவருக்கும் இதே அனுபவம் என்று. இதுபோல் பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் இன்னும் சில நிகழ்ச்சிகள் ஆகாஷவாணி திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி வானொலி நிலையங்களில்.
உள்ளே வந்த என்னிடமிருந்து ஒப்புதல் கடிதம் பெறப்பட்டு எனது ஸ்கிரிப்ட் சரிபார்க்கப்படத் தரச்சொல்லிக் கேட்கப்பட்டது. கொடுத்துவிட்டுக் காத்திருந்தேன். இப்பொழுதும் இளையபாரதம் நிகழ்ச்சிக்காகத் தான் அழைக்கப்பட்டிருந்தேன். பதினைந்து நிமிடங்கள் கதை சொல்ல வேண்டும். அதற்காகப் பத்துப் பக்கங்களுக்கும் மேலாக எழுதி வைத்திருந்தேன். சிறிது நேரத்தில் மேலே வரச்சொல்லி அழைப்பு வந்தது. சென்றேன். சற்றே வயதில் பெரியவர் ஒருவர் அமர்ந்திருந்து என் கதையைப் படித்துக்கொண்டு இருந்தார். மேலே கொஞ்ச நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.
எந்த ஒரு படைப்பாக இருப்பினும் முதலில் அதனைப் படைப்பவருக்கு அதில் முழுதிருப்தி இருக்க வேண்டும். அவருடைய சொந்த விமர்சனங்களுக்கு அப்பால் அது இருக்கவேண்டும். அதற்காக, படிப்பவர்களது பார்வைகளின் கோணங்களை எல்லாம் யூகித்துக் கொண்டிருக்கக் கூடாது. அப்படி யூகிக்கவும் முடியாது! இதற்கு ஒரு உதாரணம் சொல்லலாம்.. இட்லிவடைக்காக ஒரு கட்டுரை எழுதலாம். பொதுவாக வாசகர்களின் கமெண்ட்டுகள் எவ்வாறு இருக்கும் என்பதை நம்மால் யூகித்துக் கொள்ள முடியும். ஆனால் “மஞ்சள் கமெண்ட்”? அதை யூகிக்கவே முடியாது. ஏனென்றால் எழுதுபவர்க்கே தான் என்ன எழுதப் போகிறோம் என்பது எழுதிமுடித்து வெளியிடும் வரை தெரியாது...! :-) அவ்வாறு எதைப் பற்றியும் யோசிக்காமல் கடகடவென்று நான் எழுதியிருந்த சிறுகதை அது.
சில நிமிடங்களுக்குப்பின் நான் அழைக்கப்பட்டேன். ஒரு சிறு அறிமுகத்திற்குப் பின்னர், “என்ன கதை எழுதியிருக்கீங்க? சொல்லுங்க” என்றார். எதிர்பாராத இந்தக் கேள்வியை எதிர்பார்த்துக் காத்திருந்தவள் போலத் தொண்டையைச் செருமிக்கொண்டு கதையைச் சுருக்கமாகச் சொல்ல ஆரம்பித்தேன். முடித்தானவுடன் சற்று நேரம் அமைதி. அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். பேச ஆரம்பித்தார்..
“சிறுகதை என்பது சுருக்கமாக இருக்க வேண்டும். அதில் வரலாறு தேவையில்லை. அதிகமான வர்ணனை தேவையில்லை. கதாபாத்திரங்கள் நிறைய இருக்கவேண்டிய அவசியமில்லை. ஒரே ஒரு சம்பவத்தைக் கதையாக்கிக் கூட சிறுகதை எழுதலாம். நீங்கள் எழுதியிருக்கும் இந்தக் கதையின் முடிவு தொடக்கத்திலேயே யூகிக்க முடிந்ததாக இருக்கிறது. ஒரு சிறுகதையின் முடிவு அதனை வாசிப்பவரின் யூகத்திற்கு அப்பால் இருக்க வேண்டும். ஒரு ட்விஸ்ட் வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டும். மற்றபடி உங்களின் எழுத்து நடை நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்” என்று பேசி முடிக்கும்போது நான் தலையசைத்து ஆமோதித்துக் கொண்டிருந்தேன்.
அதன் பின்னர் ரெக்கார்டிங் அறை. முதன்முறையாக அறையில் நான் மட்டும் தனியாக! எல்லா ஏற்பாடுகளும் முடிந்த பின்னர் கண்ணாடிக்கு அந்தப் பக்கம் இருந்த அந்த அலுவலர் கையசைத்துப் பேசச் சொல்லிச் சைகை காட்டினார். நான் பேசிக்கொண்டிருக்கும்போதே கதவைத் திறந்து என்னிடம் வந்துவிட்டார். நான் எதிர்பார்த்தேயிராத ஒரு கேள்வி. “உங்களுக்குத் தொண்டை கட்டியிருக்கிறதா?” என்று. அவமானம்! “இல்லை.. என் குரலே இப்படித்தான்” என்றதும் (வேறு வழியின்றி) ரெக்கார்டிங் தொடர்ந்தது.
இன்னொரு விசயம், AIR-ல் நிகழ்ச்சிகள் வழங்கியதற்காக அளிக்கப்படும் சன்மானம். நம் பெயரில் Rs200/- அடங்கிய காசோலை தருவார்கள்! வாழ்க்கையில் முதன்முறையாக என் உழைப்பிற்குக் கிடைத்த ஊதியம் என அவ்வளவு மகிழ்ச்சி. நம்மாலும் முடியும் என ஒருவித நம்பிக்கையூட்டியது. ஒவ்வொரு முறையும் அளிக்கப்படும் காசோலையை வீட்டிற்குக் கொண்டுவந்து அம்மா அப்பாவிடம் காட்டிவிட்டு, மறக்காமல் இரண்டு தம்பிகளிடமும் காட்டி, “நான் இப்படி, நான் அப்படி” என ஒரு பில்டப் செய்துவிட்டு வங்கிக்குச் சென்று என் கணக்கில் அதைக் காசாக்கிச் சேர்க்கும்போது அடையும் ஆனந்தம் அளவில்லாதது
இவ்வாறு மூன்று மாதத்திற்கு ஒருமுறையென ஒன்றரை வருடங்கள் திருநெல்வேலி நிலைய ஆல் இண்டியா ரேடியோவில் கதை சொல்லிக் கொண்டிருந்தேன். இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு முறையேனும் எனது நிகழ்ச்சியை என் பெற்றோருக்கோ நண்பர்களுக்கோ போட்டுக் காட்டியதில்லை...! ஏன், நானே கூட கேட்டதில்லை!! :-) ஆனால் தாமாகக் கேட்டுவிட்டு யாராவது கருத்து சொல்லியபோது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் ஒரு முறை என் தம்பி கேட்டுவிட்டான் அதை பற்றி கடைசியில் அதற்கு முன் ரேடியோ பற்றி கொஞ்சம்...
தகவல் மற்றும் பொழுதுபோக்கு - இவைதான் அகில இந்திய வானொலி நிலையங்கள் வழங்கும் நிகழ்ச்சி நிரல்களின் பின்னனி. அதுவும் கிராமங்கள் நிறைந்த திருநெல்வேலியில் விவசாயம், பொதுச்சிந்தனைகள், கல்வி, ஆன்மீகம் என்று எல்லாம் போகக் கடைசியாகப் பொழுதுபோக்கு அம்சங்களான இயல், இசை, நாடகம் போன்றவை. இளைஞர்களுக்கு எனச் சில சிறப்பு நிகழ்ச்சிகள், விழிப்புணர்வுச் செய்திகள், வகுப்பறையில் எடுப்பது போன்ற பாடங்களும் உண்டு.
அதிகாலையில் வானலியின் கூடவே வானொலியையும் ஆன் செய்துவிட்டு ஆகாசவாணியின் அலைவரிசையை அட்ஜஸ்ட் செய்துகொண்டு அசையாமல் நின்றிருந்து செய்திகளைக் கேட்டுக்கொண்டிருந்ததும், திரையிசைக் கானங்களுக்காகத் தினந்தோறும் காத்துக்கிடந்ததும், அறிவியல் விவசாயம் ஆன்மீகம் என எதைப் பேசினாலும் விதியே எனக் கேட்டுக்கொண்டிருந்ததும் எந்தக் காலம்?
உள்ளங்கைக்குள் உலகம் வந்துவிட்ட காலமிது. வியாபார நோக்கில் செயல்பட்டு வரும் ஊடகங்கள் விளம்பரங்களுக்காக மக்கள் விரும்பும் அத்தனை சேவைகளையும் செய்யத் தயாராக இருக்கின்றன. தனியார் FM ரேடியோ சேனல்களில் இருபத்து நான்கு மணிநேரமும் பாடல்கள் ஒலிபரப்பப் படுகின்றன. அறிவுரைகள் என்றாலே “நீ என்ன சொல்றது, நான் என்ன கேட்குறது” என்று பல அடி தூரங்கள் பாய்ந்து ஓடும் இந்தக் காலத் தலைமுறையினர் AIR-ல் வரும் சொற்பொழிவுகளையும் சத்சங்கங்களையும் கேட்பதென்பது மண்ணிலிருந்து விண்ணை நோக்கி மழை பெய்வதற்குச் சமம்.
தனக்கென சில சட்டங்களையும் விதிமுறைகளையும் கொண்டு செயல்பட்டு வரும் பிரசார் பாரதியின் ஒரு பிரிவான AIR, வாசகர்களுடன் நேரடி உரையாடல், நேயர் விருப்பப் பாடல்கள் போன்று நிகழ்ச்சிகளில் சில புதுமைகளைப் புகுத்திக்கொண்டு செயல்பட்டு வந்தாலும் இன்னும் கூட தனியார் வானொலி நிலையங்களுக்கு இணையாக மக்கள் மனதில் இடம்பிடிக்க முடியவில்லை. கிராமப்புற மக்களும் அந்தக் காலத்து ஆட்களும் இதைப்போல் இன்னும் சிலரும் முறையாகத் தொடர்ந்து கேட்டுக்கொண்டு வருகின்றனர் என்றாலும் கூட இன்றைய காலக்கட்டத்தில் AIR கேட்பவர்கள் நம்மில் எத்தனைப் பேர் இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு :-( தான் பதிலாகக் கிடைக்கிறது...!!!
இப்ப என் தம்பி கேட்ட நிகழ்ச்சி பற்றி - என் முதல் தம்பி ஒருமுறை இவள் அப்படி என்ன தான் கதை சொல்கிறாள் கேட்போம் என்று கிளம்பி ஒரு முறை, நிகழ்ச்சி ஒலிபரப்பப்படும் நேரத்தை என்னிடமே கேட்டு அறிந்துகொண்டு அம்மா, அப்பா, பக்கத்து வீட்டுப் பாட்டிகள், குட்டீஸ் என ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு என் கதையைக் கேட்க அமர்ந்துவிட்டான். ஒருவழியாக எனது 15 நிமிடக் கதை ஓடி முடிந்தது. நான் அமைதியாக ஒருபுறம் அமர்ந்திருக்க, வாண்டுகள் எல்லாம் ஒன்றும் புரியாமலே “கொல்”லென்று சிரிக்க, பக்கத்தில் உட்கார்ந்திருந்த பாட்டி மட்டும், “ஆமா தாயீ.. கதை எப்பச் சொல்லுவ” என்று கேட்டதே ஒரு கேள்வி.. அதற்கு நான் ரியாக்ஷன் காட்டினேனோ இல்லையோ.. என் உடன்பிறந்த மற்றும் பிறவா வானரங்கள் காட்டிய ரியாக்ஷனை வார்த்தைகளால் வருணிக்க முடியாது. இந்தக் கதையெல்லாம் உன் மரமண்டைக்குப் புரியாது என்று தம்பியைப் பார்த்து அப்போதைக்குக் கூறிச் சமாளித்துவிட்டாலும், அதன்பிறகு, கதை எழுதினேன் கட்டுரை எழுதினேன் கவிதை எழுதினேன் என்று வீட்டில் யாரிடமும் சொல்லிக் கொள்வதேயில்லை! :-)
19 comments:
வாழ்த்துக்கள்!
1st cut
congrats suba
வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.....
ஆமா சுபா கட்டுரை எங்க.... :)
சரி சரி...
வாழ்த்துக்கள்...
கட்டுரைக்கு வாழ்த்துக்கள்.
பரிட்சைய முடிச்சிட்டு பதிவோட வாங்க.
//பரீட்சை ஒன்றை எதிர்கொள்ள உள்ளதால் வலைப்பூ பக்கமே வரமுடியவில்லை//
இதனால தான் ஆளயே கானோமா?
நீங்க வானொலி நிலையத்துல வேலை பாத்தீங்களா?
கட்டுரையை படிச்சிட்டு வரேன்..
படிச்சுட்டேன் :)
நல்ல அனுபவங்கள் தான் இதெல்லாம்..
வாழ்த்துக்கள் சுபா!
@Chitra
நன்றி சித்ராக்கா..
@சி.பி.செந்தில்குமார்
Thank You C.P.S.
@எஸ்.கே
(நன்றி)^4 அண்ணா :-)
@MANO நாஞ்சில் மனோ
நன்றி... நன்றி..
@வினோ
நானும் அதத் தான் அண்ணா தேடுறேன் :-) நன்றி..
@சே.குமார்
மிக்க நன்றி சகோ.. வந்துட்டா போச்சு.
@ஜெ.ஜெ
hii dear,
ஆமா. பொறுமையா படிச்சதுக்கு நன்றி..
@Balaji saravana
மிக்க நன்றி பாலா.. :-)
Post a Comment