மஞ்சள் பூசிக் குளித்திராத தமிழ்ப் பெண்கள் இருக்கிறீர்களா? வாய்ப்பு குறைவு தான். இன்றைய காலக்கட்டத்தில் எத்தனைப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிக்கிறீர்கள்? இதற்கும் வாய்ப்பு குறைவு தான்!
எனது பள்ளிக்கால நினைவுகளில் மறக்க முடியாத ஒன்று – விடுமுறை நாட்களில் தோழிகளுடன் தாமிரபரணி ஆற்றுக்குச் சென்று வெகுநேரம் நீந்தி விளையாடிக் குளித்து விட்டு வருவது. எப்போதாவது நிகழும் இந்நிகழ்ச்சியில் நீங்காமல் இடம் பெற்றிருப்பது ‘மஞ்சள்’ பூச்சு.
ஆற்றுக்குக் கிளம்பும் முன்னரே யாரவது ஒரு அக்கா ஒரு சிறிய செய்தித்தாள் துண்டில் வேண்டிய அளவு கோபுரம் பூசுமஞ்சள் தூளை வைத்து மடித்து எடுத்துக் கொண்டு வருவார். சோப்பு தேய்த்துக் குளித்து முடித்தவுடன் இறுதியாகத் தோழிகள் அனைவரும் அக்கா கொண்டு வந்திருந்த அந்த மஞ்சள் பொட்டலத்தைப் பிரித்து ஆளுக்குக் கொஞ்சமாக எடுத்து முகத்திலும் கைகளிலும் (சிலர் குதிகால்களிலும்) தேய்த்துக் கொண்டு அனல் பரக்கும் அந்த உச்சி வெயிலில் இடுப்பளவு தண்ணீரில் நின்று கொண்டிருப்போம். யாருக்கு முகத்தில் மஞ்சள் ‘திக்’காகப் பிடித்துள்ளது என ஒரு போட்டியே நடக்கும். உள்ளங்கைகளையே மாறி மாறிப் பார்த்துக் கொண்டே இருந்துவிட்டு, பின்னர் சிறிது சோப்பைக் கைகளில் தேய்த்து அப்போது வரும் சிவப்பு நிற நுரையையும் ஆச்சர்யத்துடன் ரசித்து அதனை ஆற்று நீருக்குள் கழுவிவிட்டு ஒரு ‘முங்கு’ போடுவதோடு முடியும் எங்கள் தாமிரபரணி ஆற்றுக் குளியல்!
வீட்டிலும் குளிக்கும் போது அம்மா வைத்திருக்கும் மஞ்சள் பொடியை/உரசு மஞ்சளை வேண்டும் என அடம்பிடித்துத் தேய்த்துக் குளித்துவிட்டு, துவட்டும் ‘தேங்காய்ப்பூ’த் துண்டுகளில் மஞ்சள் கறைகளைப் படிய விட்டு வாங்கிக் கட்டிய ஞாபகமும் உண்டு.
தொடர்ந்து, வெள்ளை சட்டையின் காலர் பகுதிகளை மஞ்சள் கலராக ஆக்கிக்கொண்டு பள்ளியிலிருந்து திரும்பிவரும் போதும் அர்ச்சனைகள் அரங்கேறும். கையெழுத்து நோட்டு, ஆங்கிலப் புத்தகத்தில் மெமொரைஸர் போயம் (memoriser poem) கொண்ட பக்கங்கள், ரெக்கார்டு நோட்டு எனப் பலவற்றிலும் மஞ்சளின் கைவண்ணம் இருக்கப் பெற்றிருக்கும்.
கஸ்தூரி மஞ்சளை உபயோகப்படுத்தினால் ‘பிடிக்கவே பிடிக்காது’ என்ற காரணத்தினால் பின்னர் கஸ்தூரி மஞ்சளும் அதனுடன் பயித்த மாவு அல்லது கடலை மாவு கலந்து தினமும் பூசிவந்த காலம் போய், அது எப்போதாவது என்றாகி இப்போது அந்தப் பழக்கம் இல்லாமலே போய்விட்டது!
அதன் பாதிப்பு தானோ என்னவோ மஞ்சளின் குணமுள்ள விக்கோ (Vicco turmeric) டர்மரிக் ஆயுர்வேதிக் க்ரீம் மற்றும் மஞ்சள் குணம் நிறைந்த நேச்சர் பவர் டர்மரிக் சோப் போன்றவற்றில் வந்த ஆர்வமும் கூட எனத் தோன்றுகிறது. ஆனால் இன்றைய தேதியில் மஞ்சளை சாஸ்திரத்திற்காகச் சமையலில் சிறிது சேர்த்துக் கொள்வதோடு சரி. வேறு அப்ளிகேஷனே கிடையாது என்றே சொல்லலாம்.
கஸ்தூரி மான் தனது வயிற்றுக்குள்ளேயே மணம் வீசும் அந்தக் கஸ்தூரியை வைத்துக்கொண்டு அப்பொருளைத் தேடிச் சுற்றிச் சுற்றி அலையுமாம். அதைப் போல் அற்புதமான ‘மஞ்சள்’ எனும் இயற்கை மூலிகையைக் கையில் வைத்துக் கொண்டு பல காரணங்களுக்காகச் செயற்கை அழகுசாதனப் பொருட்களைப் பெண்களாகிய நாம் தேடி அலைகிறோம் என்பது வேடிக்கையானது!
தாய்மார்கள் கூட தங்கள் பெண் குழந்தைகள் ‘மாடர்னா’க வளரவே விரும்புகின்றனர். பள்ளிக்கூடம் செல்லும் சின்னப் பெண்கள் கூட தங்கள் கைகளிலும் கால்களிலும் ரோமங்களை அகற்றுவதற்கு அழகு நிலையம் சென்று ‘வேக்ஸிங்’ (waxing) செய்துகொண்டு அந்த அழகை ‘வெளிப்படுத்தும்’ குட்டைப் பாவாடைகளை அணிந்து பள்ளி செல்லும் காலக்கட்டம் இது..
இதுபோன்ற செயற்கை முறைகளால் பெறப்படும் அழகைவிட இயற்கை நமக்குப் பரிசளித்துள்ள பொருட்களைக் கொண்டு நம்மை நாமே அழகூட்டி அழகுக்கு அழகு சேர்த்திடுவோமே! ;-)
உங்களுக்குத் தெரியுமா? மஞ்சள் ஒரு
· நேச்சுரல் ப்ளீச் (natural bleach)
· நேச்சுரல் சன்ஸ்க்ரீன் (natural sunscreen)
· நேச்சுரல் ஆன்ட்டிசெப்டிக் (natural antiseptic)
· நேச்சுரல் க்ளென்சர் (natural cleanser)
· நேச்சுரல் மாய்ஸ்ச்சரைஸர் (natural moisturiser)
இப்படியாகச் சொல்லிக் கொண்டே போகலாம். சருமத்தின் மாசு மருக்களை நீக்கவும், தழும்புகளைப் போக்கவும், தோல் சுருக்கங்களைப் போக்கவும், வரட்சியை நீக்கி ஈரப்பதத்தைத் தக்கவைக்கவும், கைகால்களில் ரோமங்கள் வளராமல் இயற்கையான முறையில் தடுக்கவும், கிருமி நாசினியாகப் பயன்படுத்தவும் மஞ்சள் ஒரு அற்புதமான பொருள்!!!
பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்லும் பெண்கள் வீட்டிற்கு வந்தபின் மாலை நேரங்களிலும் விடுமுறை நாட்களிலும் மஞ்சள் தேய்த்து முகம், கை, கால் கழுவலாம். நேரம் கிடைக்கும் பொழுதுகளில் மஞ்சளைத் தேங்காய் எண்ணெய், பால், பாலாடை, கடலைமாவு, தக்காளிச் சாறு, வெள்ளரிச்சாறு, எலுமிச்சைச் சாறு, தேன், முல்தானிமிட்டிப் பொடி, முட்டையின் வெள்ளைப் பகுதி, ஆலிவ் எண்ணெய் போன்ற ஏதாவது ஒரு பொருளிலோ சில/பல பொருட்களைக் கலந்தோ முகத்திற்கு ஃபேஸ் பேக் போட்டுக் காயவைத்துக் கழுவலாம்.
So my dear Chillax babies and their mummies,
தொடர்ந்து இவ்வாறு செய்து வந்து இயற்கையான அழகை மிகக் குறைந்த விலையில் பெற்றிடுங்களேன் !!!
மஞ்சள் நீராட்டு விழா, திருமணம் போன்ற பல சடங்குகளில் இன்றியமையாமல் இடம் பெற்றிருக்கும் இம்மஞ்சளை உணவில் சேர்த்து உட்கொண்டால் ஏற்படும் பயன்கள் கூட எண்ணிலடங்காதவை! அவற்றைப் பற்றியும் மஞ்சளுக்கு அயல்நாட்டவர் பேடண்ட் ரைட்(Patent right) வாங்கியதையும் அதைக் கான்சல் செய்த இந்திய அரசையும் பற்றிய கதைகளையும் பற்றியெல்லாம் சொல்ல வேண்டுமானால் இந்தப் பதிவு முடியாமல் தொடர்ந்து கொண்டே போகும் என்ற காரணத்தினால், கண்ட்ரோல் செய்து கொண்டு இஃதோடு தனது பேச்சை ‘சுபம்’ போட்டு முடித்துக் கொள்கிறாள் சுபத்ரா!
கருத்துகள்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.