![]() |
யாரோ ஒரு அழகு பாட்டி |
பொதுவாக வீட்டின் தலைப்பிள்ளை பாட்டியிடம் வளர்வதற்கான வாய்ப்புகள் அதிகம். முதல் குழந்தையாய்ப் பிறந்த நான் என் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்ததில் ஆச்சர்யமேதுமில்லை. நான் ஒற்றைத் துணியில் ஓடித் திரிந்த அந்தச் சின்னஞ்சிறு வயதிலேயே என் மனம் கவர்ந்தவள் அவள். எண்ணெய் விட்டுப் பிசைந்த வெறும் சோறாக இருந்தாலும் அவள் கையால் ஊட்டிவிடும் போது அமுதமாகிவிடும்.
ஒவ்வொரு நாணயமாகப் போட்டுச் சேர்த்து வைத்திருந்த உண்டியலை ஒரு நாள் மொத்தமாகப் போட்டு உடைப்பதைப் போல என் பாட்டி என்னிடம் விட்டுச் சென்ற அவளது ஞாபகங்களை மொத்தமாக இந்த வெற்றுப் பக்கத்தில் கொட்டிவிடப் போகிறேன். என் இளைய சகோதரன் அவளுக்கு ‘கம்பாச்சி’ எனப் பெயரிட்டு அழைக்கும் முன்னரே அவள் உறவை நான் பெற்றிருந்தேன். அப்போது அவளது அன்பு எனக்கு மட்டுமே உரித்தாயிருந்தது. “டக்” “டக்” என்று கம்பை ஊன்றி அவள் நடந்து செல்லும் இடங்களுக்கு எல்லாம் ஒரு நிழல் போல அவளைப் பின் தொடர்ந்திருக்கிறேன்.
குடும்பச் சூழ்நிலையால் ஒரு வருடம் அவளைப் பிரிந்திருக்க நேர்ந்த போதும் காலாண்டு, அரையாண்டு விடுமுறை நாட்களில் என்னை அவளிடமே கொண்டுவிட்டனர். அப்போது பின்னிப் போடும் அளவிற்கு வளர்ந்திருந்த என் முடியைக் கட்டுவதற்கு ரிப்பன் இல்லை. அம்மா மாட்டி அனுப்பிய ஒரே ஒரு ரப்பர் பாண்டையும் பிய்த்துவிட்டிருந்தேன். அதற்காக அடிவிழுமோ எனப் பயந்து கொண்டிருந்தது தேவையற்றது என்று சற்றுநேரத்தில் தெரிந்தது.. ஏனென்றால் அப்போது நான் என் ஆச்சியிடம் அல்லவா இருந்தேன்? எதுவும் சொல்லித் திட்டாமல் தன் பழைய சேலை ஒன்றின் ஓரத்தைக் கிழித்துத் தலையில் கட்டிவிட்ட ஆச்சியின் அன்பை இன்னும் மறக்கமுடியவில்லை.
குடும்பத்தோடு ஒன்றாக இருந்தபோதும் ஆச்சி பழைய தொழுவத்தில் தான் கட்டில் போட்டுத் தங்கியிருந்தாள். மூன்று நேரங்களிலும் எங்களுக்கான உணவை வீட்டிலிருந்து அங்கே எடுத்துப் போய்விடுவேன். அவளிடம் அளாவளாவிக் கொண்டே சாப்பிடுவதில் தான் எனது அப்போதைய சந்தோஷம் அடங்கியிருந்தது. வீட்டில் தம்பிகளிடம் சண்டை போட்டுக் கொண்டோ அம்மாவிடம் அடி வாங்கிக் கொண்டோ அடக்கி வைக்கப்பட்ட கண்ணீர்த்துளிகள் எல்லாம் ஆச்சியிடம் தான் பிரவகிக்கும். “அம்மா என்ன ஈக்குக் குச்சியை வெச்சு அடி அடின்னு அடிச்சிட்டு.. அப்பாவும் ஏசுச்சு. நான் ஒன்னுமே தப்பு பண்ணலச்சி. சும்ம தான் இருந்தேன்” என்று கோடுகளாகத் தடம் விழுந்த தொடைகளைக் காட்டி அழுத பின்னர் அவள் சோறு தின்றதாய் எனக்கு ஞாபகம் இல்லை.
அப்படியே என்னை அழைத்துக் கொண்டு கம்பை ஊன்றியவாறே வேகமாக
வீட்டை நோக்கி நடக்கும் அந்த நடையில் தெரியும் அவளது கோபம் தான் எனக்கு எவ்வளவு ஆறுதல் தந்தது!
“பிள்ளையைப் போட்டு இப்படி மாட்ட அடிக்கத மாரி அடிச்சிருக்கியே.. உனக்கு அறிவிருக்கா..” எனத் தொடங்கி நடக்கும் வாக்குவாதத்திற்குப் பிறகு ஆச்சி இரண்டு அல்லது மூன்று நாட்கள் அவளது எதிர்ப்பைக் காட்டுவதற்காக உண்ணாவிரதம் இருப்பாள். ஒரு முறை இரு முறை அல்ல. ஒவ்வொரு முறையும் இப்படியே நடந்தது. அம்மாவிடம் சண்டை போட்டு தொழுவத்திற்குத் திரும்பியவள் “எனக்கு ஒரு சாவு காலம் வரமாட்டங்கே” என்று அங்கலாய்ப்பாள்.
இதுபோன்று வார்த்தைகளைப் பலவிதங்களில் ஆச்சியிடமிருந்து அடிக்கடி கேட்கமுடிந்தது. “சீக்கிரம் சிவலோகத்துக்குப் பொயிரனும்” “அந்த ஆண்டவன் ஏன் இன்னும் என் உசிர எடுக்காம இருக்கான்” “இந்தக் கட்டை என்னைக்கு வேகப் போகுதோ தெரியலையே” “யாருக்கும் தொல்லையில்லாம நா போய்ச் சேர்ந்துட்டம்னா தான் நிம்மதி” எனப் பல சமயங்களில் அவளது வார்த்தைகளில் தொனிந்த அந்த ஏக்கம் பிடிபட எனக்குப் பல நாட்கள் பிடித்தன. பிடிபட்ட போது அந்த ஏக்கம் சாயம் பூசப்படாத ஒரு மண் பொம்மையைப் போலத் தனது பொக்கை வாயைக் காட்டிச் சிரித்துக் கொண்டிருந்தது.
இரவிக்கை அணியாத ஆனால் அந்தக் குறையே தெரியாமல் அவள் உடுத்தியிருக்கும் வாயில் சேலையைக் கட்டியிருக்கும் நேர்த்தியிலேயே காண்பவருக்கு அவளது ஆளுமை விளங்கும். ஒரு நாள் ஆச்சியோடு பேசிக் கொண்டிருந்தபடியே தளர்ந்து தொங்கிய அவளது முன்கை தசைகளைக் கைகளால் ஆட்டிவிட்டு விளையாடிக் கொண்டிருக்கையில் அதைப் பார்த்தவள் திடீரெனச் சிரித்தது ஏன் என்று புரியாவிட்டாலும் அந்தச் சிரிப்பு எனக்குக் குதூகலத்தைத் தந்தது. “ஏன் சிரிக்கீங்க?” எனப் பலமுறை கேட்டும் அவள் அதற்குப் பதில் கூறவில்லை.
ஒரு முறை வீட்டின் எதிர்ப்புறம் இருந்த பெருமாள் கோவிலில் பூசை முடிந்து சந்தனம் வைத்துக்கொண்டு கல்கண்டு மற்றும் குங்குமத்தை அவளுக்காக வாங்கி வந்திருந்தேன். ஒரே ஒரு கல்கண்டை மட்டும் எடுத்துக் கொண்ட அவளிடம் குங்குமத்தை நீட்டினேன். எடுக்கவில்லை. சரி பார்க்கவில்லை என நினைத்து, “ஆச்சி குங்குமம் எடுத்துக்கோங்க. நான் வச்சியுடவா?” என்று நான் சொன்னது தான் தாமதம். “போ அங்குட்டு” என்று கோபப்பட்டுவிட்டாள். அப்போது அவள் விதவை என்பது எனக்குப் புரியவில்லை. ஒரு வேளை இந்தப் பெருமாள் சாமி அவளுக்குப் பிடிக்கவில்லையோ என்று நினைத்துக் கொண்டே அவளருகே உட்கார்ந்து கொண்டேன்.
ஒரு முறை அம்மாவும் ஆச்சியும் சண்டை போட்டுப் பேசாமலிருந்த சமயம். மிட்டாய் வாங்குவதற்காக அம்மாவிடம் கெஞ்சிக் கேட்டும் காசு கிடைக்கவில்லை. ரகசியமாக ஆச்சியிடம் சென்று பத்துப் பைசா வாங்கிக் கொண்டு கடைக்குப் போகும் போது எதிரே பார்த்தால், பக்கத்து வீட்டு அத்தையுடன் அம்மா.
“துட்டு எப்படி கெடைச்சிச்சு?”
“கீல கெடந்துச்சு மா”
“அட! கீழ உம் மச்சானா உனக்குத் துட்டு போட்டு வெச்சிருக்கான்? ஏ சுந்தரி.. இப்பந்தான் பேத்தியாளும் பேத்தியாளும் பார்த்துப் பேசிகிட்டு இருந்தாக. அவதான் முடிச்சிலருந்து பத்துப் பைசாவ இவளுக்கு எடுத்துக் குடுத்தா” என்று அந்த அத்தை உண்மையைப் போட்டு உடைக்க, அன்று அடி விழாமல் தப்பித்தது என்னவோ அந்தப் பெருமாள் புண்ணியம் தான்.
இவ்வாறு நான் காலைக் கட்டியபடியே சுத்திக் கொண்டிருந்த தெய்வானை ஆச்சியின் தோற்றம் சற்று வேறுபட்டது. அவ்வயதிலும் சற்றுத் திடமாகவே இருந்த அவள் உடம்பில் நிறைய வெண்புள்ளிகள் இருந்தன. அதுகூட அவளைப் பிறரிடமிருந்து அன்னியப்படுத்திச் சிறப்பித்துக் காட்டும் ஓர் அடையாளமாகவே எனக்குத் தெரிந்தது. “இது ஏன் ஆச்சி இப்படியிருக்கு?” எனக் கேட்டால் “ஒரு நாள் தோட்டத்துல பாம்பு எரிக்கும் போது தண்ணி தெறிச்சிட்டு” என்று சொல்வாள்.
தினமும் எனது இரவுத் தூக்கம் அவளுடனே கழியும். காற்றாடி இல்லாத வெளியில் ஒரு ஓட்டுக் கூரையின் கீழ் விரிக்கப்பட்ட வயர்க்கட்டிலில் அவளோடு படுத்திருக்கும் எனக்கு முந்தானையால் காற்று வீசிக் கதை சொல்லியவாறே அவள் உறங்கிப் போவாள். அந்தக் கதைகளின் முடிவுகளை யூகம் செய்யும் கடமை என்னைச் சேரவே ஏழு கடல்கள், ஏழு மலைகளைக் கடந்து சென்று கூட்டுக்குள் அடைபட்டிருக்கும் கிளியைத் தேடியவாறே நானும் உறங்கிப் போவேன்.
கொஞ்சம் கொஞ்சமாக ஆச்சி தன் இறுதி நாட்களை நெருங்கிக் கொண்டிருப்பதை அறியாமல், தொழுவத்திலிருந்து மச்சி வீட்டுக்கு அவள் குடிபெயர்ந்துவிட்டதை எண்ணி நான் மகிழ்ந்து கொண்டிருந்தேன். அப்போது அவளால் எழுந்து நடமாட முடியவில்லை. அவள் குளிப்பதில்லை. அம்மா தான் துடைத்துவிடுவாள். அவள் இருக்கும் அறையில் ஒரு வாடை வீசத் தொடங்கியதைப் பற்றி அப்பாவும் அம்மாவும் அவ்வப்போது தனியாகப் பேசிக் கொண்டார்கள். அவளைத் தொட்டுத் தூக்கிவிடும் இடங்களில் அவள் கையில் தோல் உரிந்தது. முன்பு போல் ஆச்சி என்னிடம் பேசுவதில்லை. அம்மா அவளிடம் சொல்லச் சொல்லி ஏதையாவது நான் சொல்லப் போனால் கோபம் மட்டுமே வெளிவரும். பதில் இருக்காது. தனக்கு ஏதாவது தேவை என்றால் மட்டுமே குரல் கொடுக்கத் தெரிந்திருக்கும் குழந்தையாய் மாறிருந்தாள். அந்நாட்களில் அவளது படுக்கையைச் சுற்றி நாங்கள் விளையாடிக் கொண்டிருந்தோம்.
ஒரு நாள் அம்மா எங்கே எனத் தேடினால் மாடியில் ஆச்சியின் பக்கத்தில் அமர்ந்து அவளிடம் எதையோ கெஞ்சிக் கொண்டிருந்தாள். கொஞ்ச நேரத்தில் பக்கத்து வீட்டில் இருந்த ஒரு அத்தையும் அங்கு வந்துசேர ஆச்சியின் மெலிதாகத் திறந்திருந்த வாயில் பால் ஊற்றிக் கொண்டிருந்தனர். எனக்கும் அந்த மரியாதை தரப்பட்டது.
“அம்மா.. ஆச்சி செத்துப் போயிட்டா?” என்று கேட்க எண்ணியதைக் கொஞ்சம் மாற்றி, “ஆச்சி இறந்து போயிட்டா?” என்று கேட்டவளுக்கு அங்கே பதில் இல்லை. இதோ இதை எழுதும் இப்போது வெடித்து அழுதுகொண்டிருக்கும் நான் அன்று அந்தக் கேள்வியைக் கேட்டபோது அடக்க முடியாதபடி என் தம்பியுடன் சேர்ந்து சிரித்துக் கொண்டிருந்தேன். இந்த அழுகையை என் அம்மாவிடமும் ஒருமுறை நான் பார்த்திருக்கிறேன். நான் வயதுக்கு வந்த செய்தியை அவளிடம் சொன்னபோது அர்த்தமேயில்லாமல் என்னிடம் அவள் அழுததும் இதைப் போலவே இருந்தது.
நாங்கள் வாய்மூடிச் சிரிப்பதை யாரும் தடுக்காத ஒரு மயான அமைதி அங்கே நிலவியது. சிறிது நேரத்துக்குப் பின் ஊரே என் வீட்டில் கூடியிருக்க, சில பெண்கள் மாடியில் வைத்தே ஆச்சியைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தனர். “நல்ல தொவட்டி விடு.. அத்தைக்குத் தடுமம் பிடிச்சிகிடப் போது” என்று கேட்ட ஒரு குரல் யாருடையது என்பது விளங்கவில்லை.
நேற்று அப்பா பரண் மேலிருந்த பழைய புகைப்படங்களை எடுத்துத் துடைத்துக் கொண்டிருந்தார். ஆச்சியின் கருப்பு-வெள்ளைப் புகைப்படங்கள் நிறைய, சட்டம் போடப்பட்டு இருந்தன. ஒன்றை மெதுவாகக் கையில் எடுத்து தூசு துடைத்துப் பார்த்தபோது அம்மா பாவாடைச் சட்டை போட்டுக் கொண்டு சிறுமியாக ஒரு ஸ்டுடியோவில் உட்கார்ந்திருந்தாள். பக்கத்தில் ஒருபுறம் நான் பார்த்தேயிராத தாத்தாவும் மறுபுறம் ஆச்சியும் இருந்தார்கள். தலை நிறையப் பூவுடனும் நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டுடனும் பட்டுப்புடவையுடனும் வெள்ளைப் புள்ளிகளின்றி மிக அழகாகத் தெரிந்த ஆச்சி இரவிக்கை அணிந்திருந்தாள்.
கருத்துகள்
அன்னையர் தின அன்பான நல்வாழ்த்துக்கள்...
கண்களில் தானகத் திரண்ட கண்ணீரை
தடுக்கப் பிடிக்கவில்லை
அதற்கு என் பாட்டியும் காரணமாக இருக்கலாம்
மனம் தொட்ட அருமையான பதிவு
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி.. அருமையான பதிவு..!!
அற்புதமான ஓர் உறவை பற்றிய அற்புதமான நினைவு மீட்டல் .
நான் படித்த சுபாவின் பதிவுகளில் மிகச்சிறந்த ஒன்று என்று இதை சொல்லலாம் .
எனக்கு பாட்டிம்மா உறவெல்லாம் கொடுத்துவைக்கல ஆனா பக்கத்து வீட்டு பாட்டியோட தளர்ந்து தொங்கிய அவளது முன்கை தசைகளைக் கைகளால் ஆட்டிவிட்டு விளையாடுவது எனக்கு ரெம்ப புடிக்கும் .
அன்பான வார்த்தைகள் , அழகழகான அனுபவங்கள் என்று அற்புதமாக இருக்கிறது இந்த நினைவு மீட்டல் ...!
முதன் முதலாக உங்கள் வலைபூவிற்கு வந்துள்ளேன். இனி தொடர்வேன்.