அப்போது பன்னிரெண்டாம் வகுப்பு. புதிதாக வீடு மாறிய சமயம். பள்ளி முடிந்து நேராகப் புதுவீட்டுக்குப் போகத் தெரியாது. “நானே வந்திருதேன்ப்பா” என்று வேறு அப்பாவிடம் சொல்லியிருந்தேன். மாலை ஆறு மணி ஆகியிருந்தது. எந்த பஸ்.. எந்த ஸ்டாப்பிங் என எல்லாம் கேட்டு வைத்திருந்தாலும் தனியே போவதற்குத் தயக்கம். இருட்ட ஆரம்பித்திருந்த வேளையில் வகுப்பில் என் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்ணிடம் கேட்க, “அந்த லாஸ்ட் பெஞ்ச்ல சித்ரா தேவினு ஒரு பொண்ணு இருக்காள்ல.. அவளும் கே.டி.சி.நகர் தான். அவகிட்ட கேட்டுப் பாரு” என்று சொல்ல அவளைத் திரும்பிப் பார்த்தேன்.
வகுப்பில் நான் எப்பவுமே முதல் பெஞ்ச். அவளோ கடைசி பெஞ்ச். நான் ரொம்ப அமைதி. அவளோ.. பயங்கர வாயாடி. திமிர் பிடித்தவள் போல் இருந்தாள். பதினொன்றாம் வகுப்பில் அவள் வேறு section-இல் படித்திருக்கவே அவளிடம் பேசியதே கிடையாது. “இவகிட்ட போய் எப்படிக் கேக்க? ஒளுங்கா ரெஸ்பாண்ட் பண்ணுவாளா” என யோசித்தவாறே..
“உங்க நேம் தான சித்ரா.. நீ கே.டி.சி. நகரா?” என ஆரம்பித்து முழுக் கதையையும் சொல்லி முடித்தேன். சொன்னது தான் தாமதம். அங்கே இங்கே என ஓடி கடைசியில் இன்னொரு பெண்ணுடன் என்னை ஒரு வேனில் ஏற்றிவிட்டாள். பத்திரமாக வீடு போய்ச் சேர்ந்ததும் அந்தப் புதுவீட்டைக் கூட கவனிக்கத் தோன்றாமல் சித்ராவைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். “சே. அந்தப் பிள்ளைக்கு எவ்வளவு அக்கறை? நான் யாருனே தெரியாம எனக்காக அவ்ளோ கஷ்டப்பட்டு ஹெல்ப் பண்ணுச்சே! அவளப் போய்த் தப்பா நெனைச்சிட்டோமே”னு வருத்தப்பட்டேன்.
அப்புறம் வந்த சில நாட்களில் நானும் அவளுடன் ஒன்றாக ஒரே வேனில் பயணிக்க ஆரம்பித்தேன். இருவர் வீடும் இருவருக்கும் நன்றாகத் தெரிந்துவிடவே, ஒரு நாள் அவள் தன் வீட்டுக்கு அழைத்தாள். தயங்கித் தயங்கிச் சென்ற எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.. வாழ்க்கையில் எப்படி ஒரு நட்பு வாய்க்கப் போகிறது என்று. அதுவும் பல அலார மணிகள் அடித்து என்னை warn செய்த போதும் நட்பு என் காதை மறைத்து.. இல்லை அடைத்து விட்டது. (காதல் கண்ணை மறைப்பது மாதிரி)
ஒரு நாள் பள்ளிக்கு அவளது புத்தம் புதிய நவீனத் தொழில்நுட்பத்துடன் கூடிய TVS Excel வண்டியில் வந்திருந்தாள். கிக் ஸ்டார்ட் வண்டி. நூறு உதை உதைத்தால் வண்டி start ஆகும் Probability 0/100. Doubles போகலாம் என்று என்னை அழைத்தபோது தெரிந்திருக்கவில்லை அவள் என்னை வைத்துத் தான் Doubles ஓட்டக் கற்றுக்கொள்ளப் போகிறாள் என்பது. அதிலும் நான் வேறு Prince Jewellery – Light weight collection நகைகள் போல மிகவும் light weight ஆக இருந்ததனால் மனதுக்குள் ஏற்பட்ட கிலியை மறந்து (அ) மறைத்து எப்படித் தைரியமாக என்னைக் கூப்பிட்டாள் என்பது எனக்கு இன்று வரை புரியாமலிருக்கும் 13ம் வாய்ப்பாடு போன்ற விஷயங்களுள் ஒன்று.
இதெல்லாம் வண்டியில் ஏறி உட்கார்ந்ததுக்கு அப்புறம் தானே தெரிந்திருந்தது. எப்படியோ பாளையங்கோட்டை ரோஸ்மேரி மெயின் ஸ்கூலில் இருந்து பயங்கர வேகத்தில் உருட்டிக் கொண்டே வந்து கடைசியில்.. இல்லை இல்லை பாதியில் HighGround GH-க்கு முன் வண்டி நின்றுவிட்டது. “நல்ல வேள.. உள்ள அட்மிட் ஆகுற மாரி ஒன்னும் நடக்கல” என்று மனதைத் திடப்படுத்தியவாறே..
“என்னடி ஆச்சு?”
“தெரிலடி.. காலையில ரிசர்வ்ல உளுந்துச்சு. இப்பம் வீடு வரைக்கும் பொயிரலாம்னு நெனைச்சேன். இங்கயே நின்னுட்டு”
பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு பக்கத்தில் நின்ற என்னை ஒரு பேருந்தில் ஏற்றிவிட்டு அவள் அப்பாவின் துணையோடு வீடு போய்ச் சேர்ந்தாள்.
இது இப்படி இருக்க, சித்ரா இயற்கையிலேயே புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் மிகுந்த ஆர்வமுடையவள் என்பதால் சில நாட்களில் அவளுக்கு மறுபடியும் Doubles கற்றுக் கொள்ளும் அவா ஏற்படவே வண்டியில் பள்ளிக்கு வந்திருந்த மற்றுமொரு நாளில் என்னிடம் வந்தாள்.
“சாயங்காலம் என்கூட வாடி. நம்ம டபுள்ஸ்ல பொயிரலாம்”
“எடி.. பெட்ரோல் இருக்குல்லா? ரிசர்வ்ல கெடைக்குதா?”
“அதெல்லாம் நெறைய இருக்கு. இன்னைக்கு நான் உன்ன உங்க வீட்டுலயே ட்ராப் பண்ணிருதேன்”
வண்டி ஒரு வழியாகக் குண்டும் குழியும் சேறுமாக இருக்கும் கே.டி.சி. நகரின் வெண்ணை போன்று வழுக்கும் ஒரு சாலையில் போய்க் கொண்டிருந்தது. ஏழு வளைவுகள் தாண்டி ஏழுபது குழிகளைத் தாண்டி ஒரு பெரிய பள்ளத்தின் முன் வந்து நின்றது.
“இதுக்குள்ள வண்டிய விட்டா பொயிருமாடி?”
“தெரியலடி.. வேற வழியில்ல. உட்டுப் பாரு”
“உட்ரவா?”
“நான் வேணா எறங்கிக்கிடவா?”
“வேண்டாம் வேண்டாம். நீ அப்படியே உக்கார்ந்திரு”
நேராகக் குழியில் இறங்கிய வண்டி சேறில் சிக்கிச் சாய்ந்துவிடவே எனது ஸ்கூல் பேக் தண்ணியில் விழுந்தது. அதற்குத் துணையாக நானும் விழுந்துவிட அவள் ஒரு வழியாக balance செய்து வண்டியை மீட்டு வெளியே கொண்டுவருவதற்குள் அவளது white uniform காக்கியாக மாறியிருந்தது. “உன்னால தான் உன்னால தான்” என இருவரும் மாறி மாறிச் சண்டை போட்டுக்கொண்டும் அசடு வழிந்து கொண்டும் கோபப்பட்டுக் கொண்டும் வலிக்காத மாதிரியே நடித்துக் கொண்டும் எக்ஸலை உருட்டிக் கொண்டு எங்கள் வீடு வந்து சேர்ந்தது தான் இரண்டாவது அபாய மணி.
மூன்றாவது தடவை வேனும் இல்லை. வண்டியும் இல்லை. ஏதோ ஒரு பஸ்ஸில் என்னை மட்டும் ஏற்றிவிட்டாள். பாளை சேவியர்ஸ் கல்லூரியின் எதிர்ப்புறம் இருக்கும் மாவட்ட நூலகத்தில் ஏறி வி.எம்.சத்ரம் ஸ்டாப்பில் இறங்க வேண்டும். கருங்குளம் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்தில் நிற்கக்கூட இடமில்லாமல் நானும் எனது புத்தகப் பையும் விண்வெளியில் மிதப்பது போல மிதந்து கொண்டிருந்தோம். நினைவு திரும்பிய வேளையில் நான் ஒரு ஜன்னலோர சீட்டில் உட்கார்ந்திருந்தேன். பேருந்து இருபுறமும் பச்சை பசேலென்று இருந்த வயல்வெளிகளைச் சுற்றிக் காட்டியபடியே சென்று கொண்டிருந்தது. அப்போது தான் ஞானோதயம் வந்தவராய்த் தெரிந்த நடத்துனர்,
“எம்மா.. நீ எங்க டிக்கெட் எடுத்த?”
“வி.எம்.சத்ரம்”
“அடப் போம்மா.. அந்த ஸ்டாப் போய் எவ்ள நேரமாச்சு? எறங்காம என்ன செஞ்சிகிட்டு இருந்த? பாக்கலையா?”
“...”
“இந்தா.. இன்னொரு டிக்கெட் வாங்கிக்க. கருங்குளம் இப்பம் வந்துரும். திரும்பிப் போவும்போது எறங்கிக்க” என்று எனக்கு இன்னொரு சீட்டு தர நல்ல வேளை என்னிடம் காசு இருந்தது ;) Plan போடாமல் ஒரு Picnic சென்று கருங்குளம் மலைக் கோவிலின் தரிசனம் கிடைத்தது. இது மூன்றாவது அபாய மணி.
இப்படிப் பல அபாய மணிகளைக் காதில் கேட்காதவாறே கடந்து வந்த நாங்கள் இருவரும் ஒரு வழியாகத் திருநெல்வேலியின் மூலை முடுக்குகளை எல்லாம் சுற்ற ஆரம்பித்திருந்தோம். மாவட்ட நூலகத்தில் சித்ரா தேவி, சுபத்ரா தேவி என இரு Membership
Cards வாங்கினோம். அவளது கார்டையும் சேர்த்துப் பயன்படுத்திய நான் கடைசியாக எடுத்த 6 புத்தகங்களையும் இன்று வரை return செய்யாமல் சுற்றிக் கொண்டிருப்பதை இக்காலக்கட்டத்தில் உங்களிடம் confess செய்கிறேன்.
Arasan,
Aryaas, MH etc., restaurants, Pothys, RmKV, Ratna theatre, Bombay theatre,
Junction, Railway Station, Town, Library, பாளையங்கோட்டை ஜெயிலுக்குப் பக்கத்தில் இருக்கும்
Book World, Ramya Beauty Clinic, Head Post Office, நெல்லையப்பர் கோவில், புதிய, பழைய பேருந்து நிலையங்கள், கரும்புச் சாறு கடை, பழ ஜூஸ் கடை, தெருவில் விற்கும் ஐஸ்க்ரீம், குச்சி ஐஸ், சுண்டல், ஆச்சீஸ் கீழே விற்கும் ஜிகர்தண்டா, நண்பர்கள் வீடு, EB கடை, திருவனந்தபுரம், சென்னை என ஏகப்பட்ட இடங்களுக்கும் இஷ்டத்துக்குச் சுற்றிக் கொண்டிருந்தோம்.
இதற்கு ஒவ்வொரு முறையும் வீட்டில் பெர்மிஷன் வாங்குவது தான் பிரம்ம பிரயத்தனமாக இருந்தது. தேர்வுக்கு முந்தைய நாளில் Combined Study என்ற பெயரில் ஜன்னல், கதவுகள் எல்லாவற்றையும் பூட்டிக்கொண்டு Boys படம் பார்த்துக் கொண்டிருக்கையில் மாட்டியது எல்லாம் போக, பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் இருவரும் எடுத்த Record Breaking மதிப்பெண்களால் சில காலம் இருவரும் தனித்தனியே house arrest-இல் இருக்க நேர்ந்தது. அவள் வீட்டில் இருந்த எனது ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.
பின்னர் சுமூக நிலை திரும்பி, நாளடைவில் ‘சுபத்ரா’ என்று சொன்னால் அவள் வீட்டிலும் ‘சித்ரா’ என்று சொன்னால் என் வீட்டிலும் ஊர்சுற்றும் லைசென்ஸ் தரப்பட்டது. வெவ்வேறு கல்லூரிகளில் சேர்ந்தாலும் வார இறுதி நாட்களில் ஊர் சுற்றுவதில் ஒரு குறையும் இருக்கவில்லை. இப்படியே நட்பு வானில் பறந்து கொண்டிருந்த இரு இளம் சிட்டுகளும் ஒரு கட்டத்தில் பிரிய நேர்ந்தது. ஒரே தட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த நாங்கள் ஒரே ஊரில் வேலை பார்க்கலாம் எனவும் ஒரே வீடு எடுத்துத் தங்கிக் கொள்ளலாம் எனவும் முடிந்தால் ஒரே பையனைக் கல்யாணம் செய்து கொள்ளலாம் எனவும் தீட்டப்பட்ட திட்டங்கள் யாவும் இன்று பட்டங்களாகக் காற்றில் பறக்கின்றன.
இப்போது சித்ராவுக்குத் திருமணம் ஆகி, அவளைப் போலவே ஓர் அழகான குட்டிக் குழந்தையும் பிறந்துவிட்டது. திருமணம் ஆனதிலிருந்தே நான் ஊரில் இருந்தால் கூட அவளால் முன்பு போல் வெளியே சுற்ற முடியவில்லை. குழந்தை உண்டாகியிருந்த போது கேட்கவே வேண்டாம்..
“இனிமே அவ்ளோ தான். நீயே வந்தாலும் எங்கயும் சுத்த முடியாது. இவனை வெச்சுகிட்டு எங்கடீ போக முடியும். செறையா இருக்கு. உள்ள இருந்து உதச்சுகிட்டே இருக்கான். எப்படா வெளீல வருவான்னு இருக்கு”
இந்நாட்களில் சித்ரா வங்கியில் அதிகாரியாக வேலை பார்க்கும் காரணத்தால் குழந்தையைக் கவனித்துக் கொள்ள வீட்டில் ஓர் அம்மா வேலைக்கு இருக்கிறார்கள். நானும் சென்னைக்கே வந்துவிட்டேன்.
“ஹலோ.. நைட் பன்னெண்டு மணிக்குத் தூங்கிட்டேண்டி. சாரி..”
“பரவால்லடி. Many More Happy Returns of the Day”
“Thank u ma.. நீ எப்பம் ஊருக்கு வருவ?”
“எக்சாம் முடிச்சிட்டு வருவேன். எதுக்கு?”
“வா. நம்ம முந்தி மாரி ஊர் சுத்தலாம்”
கருத்துகள்
சித்ரா தேவி, சுபத்ரா தேவி nalla name combination
//அதிலும் நான் வேறு Prince Jewellery – Light weight collection நகைகள் போல மிகவும் light weight ஆக இருந்ததனால் //
ஹா ஹா ஹா ஹா ...! ஐ நோ ..! ஐ நோ ...!
//“வா. நம்ம முந்தி மாரி ஊர் சுத்தலாம்”//
பாவம்மா அந்த எக்சல் விட்ருங்க ...!
உங்களுக்குமா :)
ம்ம் நன்றி :)
Thank U Kamal ;)
இனிமையான நினைவுகள் தான்..:)
அண்ணா.. பப்ளிக் பப்ளிக் :D
அந்த எக்சலை விட்டு இப்போ ஆக்டிவா வாங்கியாச்சு :)
திருநவேலியில அஞசு வருசம் வாழ்ந்தப்ப நான் அனுபவிச்ச இந்த விஷயங்களையெல்லாம் திரும்ப நெனக்க வெச்சு குஷியாக்கிப்புட்டியளே! தோழியோட பழகுனதை நீங்க சொன்ன விதம் நல்லா இருந்துச்சு. அழகான ஒரு சிறுகதைன்னுதான் சொல்லணும்!
I heard all this things from my wife chitu and my question is what happend to your decision that you decided to marry one person. i'm waiting!!!
ஓ! நீங்க திருநெல்வேலில அஞ்சு வருஷம் இருந்தீங்களா? சொல்லவேயில்ல.. கிரேட் :) கருத்துக்கு நன்றி :)
hi darling :) என்ன துப்பாக்கி விஜய் மாதிரி i'm waiting னு சொல்றீங்க.. i'm waiting too ;)
குவளை வடி தேனாய் இனிக்கிறது சகோதரி...
நன்றி அண்ணா!
இது தான் ஆரம்பம் :) இன்னும் நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய எழுதப் போறேன். நம் நட்பைப் பற்றி :) :)