முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நனந்தலை உலகமும் துஞ்சும்


இன்னைக்கு ஒரு interesting topic பேசப் போறோம் :) நீங்க இப்போ அவசரத்துல இருந்தா நிதானமா இருக்குற வேறொரு சமயத்துல இதைப் படிங்க. ஒரு பனி காலையிலோ மழை மாலையிலோ குளிர் இரவிலோ கையில் சூடான தேனீர்க் கோப்பையோடு உங்கள் காதலன் () கணவன் அல்லது காதலி () மனைவியை நினைத்துக்கொண்டே படித்தல் நலம் :)
அப்படி என்ன பேசப் போகிறோம்? சங்க இலக்கியம் (கிமு 500 – கிபி 300). குறுந்தொகையின் முதல் 25 பாடல்களை எடுத்துக்கொண்டு பெண்களின் உள்ளக்கிடக்கையை எடுத்தியம்பும் சில பாடல்களை மட்டும் பார்க்கப்போகிறோம் :P இங்கு குறிப்பிடப்பெறும் அனைத்துமேதலைவி கூற்றுபாடல்கள் தான்.

பெண்களின் மனதை, அதுவும் காதல் பெண்களின் மனதை ஆண்களால் முற்றிலும் புரிந்து கொள்ளவே முடியாது என்பது காலம் காலமாகப் பொதுப்பேச்சாக இருந்துவரும் நிலையில் இவ்வளவு துல்லியமாக ஒவ்வொரு பாடலையும் எழுதியுள்ளஆண்பாடல் ஆசிரியர்களை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. சரி இனியும் பேச்சை வளர்க்காமல் பாடல்களைப் பார்க்கலாம் :)

            தலைவி தம் வீட்டுக் கொல்லைப் புறத்தில் வைத்துத் தலைவனைச் சந்தித்துக் காதலை வளர்க்கிறாள். அப்படி ஒரு முறை தலைவன் வந்து வெளியே காத்துக் கொண்டிருக்கையில் தோழி அவர்களது ரகசியக் காதலையும் காதலனின்  இயல்பையும் பழித்துக் கூறுகிறாள். தலைவனை விட்டுக் கொடுக்க முடியாத தலைவி பேசாமல் இருப்பாளா?

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவு இன்றே, சாரல்
கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.” 3 தேவகுலத்தார் (குறிஞ்சி)

விளக்கம்: மலைச்சாரலில் பூத்திருக்கும் கரிய தண்டினையுடைய குறிஞ்சிப் பூக்களின் தேனைக் கொண்டு கட்டப்பட்ட பெரிய தேனடைகளையுடை மலைநாட்டைச் சேர்ந்த தலைவனுடன் நான் கொண்ட காதல் இப்பூமியைவிடப் பெரியது; வானத்தைவிட உயர்ந்தது; கடல் நீரைவிட அளப்பதற்கு அரிய ஆழத்தையுடையது! அத்தகைய எங்கள் காதலைக் குறைத்து மதிப்பிடாதே!

இதில் குறிக்க வேண்டிய இன்னொரு செய்தி, குறிஞ்சிப் பூவே பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் பூக்கும். ஆனால் தலைவனது நாட்டில் கட்டப்படும் பெரிய தேனடைகள் முழுவதும் குறிஞ்சிப் பூக்களின் தேனால் ஆனது என்று சொல்வது, தலைவன் வளமுள்ள நாட்டில் வாழ்கிறான் என்பதாகிஅவர் பெரிய அப்பாடக்கர்என்று எடுத்துக்கொள்ள வேண்டுமாம் :) (என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி.. அதை வானம் அண்ணாந்து பார்க்கும்என்று modern தலைவன் பாடினால் ரசிக்கிறாள் modern தலைவி)

            அப்படியிப்படியென்று தன் காதல் கதையைப் பற்றித் தோழியிடம் பெருமை பேசிக்கொள்ளும் தலைவி, பிரிவு என்று வரும்போதும் அதை அவளிடமே சொல்லிப் புலம்புகிறாள். வேறு வழி?

நோம்என் நெஞ்சே! நோம்என் நெஞ்சே!
இமைதீய்ப்பு அன்ன கண்ணீர் தாங்கி
அமைதற்கு அமைந்தநம் காதலர்
அமைவில ராகுதல் நோம்என் நெஞ்சே! 4 காமஞ்சேர் குளத்தார் (நெய்தல்)

விளக்கம்: தோழி! என் நெஞ்சம் நோகும்பிரிவினால் நான் வருந்தி அழ, இமையைத் தீய்ப்பதுபோல் கொட்டும் வெப்பம் மிக்க என் கண்ணீரைத் தடுத்து, என்னுடன் அளாவளாவி மகிழ்வதற்குரிய நம் காதலர், அவ்வாறு நடந்து கொள்ளாது பிரிந்து வருத்துதல் கண்டு என் நெஞ்சம் நோகும் :(

            தலைவிக்கு ஒரு துன்பம் என்றால் தலைவனே ஆறுதல் சொல்லுவான். ஆனால் அவனே பிரிந்து சென்று வருத்துவது என்ன கொடுமை! எத்தனை முறைநெஞ்சம் நோகும்என்று சொல்லுகிறாள்! அதிலும்என்காதலர் என்று சொல்லாமல்நம்காதலர் என்று சொல்லித் தோழி தனக்காக வருந்துவதற்காகவும் சேர்த்து வருந்துகிறாள். (“விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே. உயிரிலே நினைவுகள் தழும்புதே.. கன்னங்களில் கண்ணீர் வந்து உன் பெயர் எழுதுதே. முத்தமிட்ட உதடுகள் உலருதேஎன்று தலைவனின் பிரிவையெண்ணி வருந்துகிறாள் modern தலைவி)

            காதலில் கூடல் எவ்வளவு இன்பத்தைத் தருகிறதோ அதே அளவு துன்பம் பிரிவு நேர்கையில் ஏற்படத்தானே செய்யும்? பிரிந்து சென்ற தலைவனை எண்ணி உறங்க இயலாமல் விரக தாபத்தில் தவிக்கும் தலைவியைப் பற்றிய பாடல் இங்கே:

அதுகொல் தோழி காம நோயே?
வதிகுருகு உறங்கும் இன்னிழல் புன்னை
உடைதிரைத் திவலை அரும்பும் தீம்நீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தென
பல்லிதழ் உண்கண் பாடுஒல் லாவே.” 5 நரிவெரூஉத் தலையார் (நெய்தல்)

விளக்கம்: தன்னிடம் தங்கும் குருகுகள் (நாரைகள்) உறங்கும்படி, இனிய நிழலைத் தரும் புன்னைமரத்தின் அரும்புகள் கரையில் மோதி உடையும் நீர்த்துளிகளால் மொட்டு விரியும்! அத்தகைய இனிய நீர்ப்பரப்பையுடைய கடற்கரைக்குத் தலைவன் என்னைப் பிரிந்ததால், பல இதழ்களையுடைய தாமரை போலும் மைதீட்டிய என் கண்கள், இமை பொருந்தி உறங்க இயலாதனவாயின. தோழி! காம நோய் என்பது இதுதானோ? (தலைவன் ‘Goodnight’ சொல்லவில்லை என்றால் கூட modern தலைவிக்குத் தூக்கம் வராதே! “தூங்காத கண் என்று ஒன்றுஎன்று காதலனை நினைத்து உருகிப் பாடுகிறாள் கொஞ்சம் பழைய நம் modern தலைவி).

தலைவிக்குத் தூக்கம் வராததைச் சொல்லும் இன்னொரு பாடல். இந்தக் காலத்தில் படித்து வேலைக்குச் சென்று பொருளீட்டி settle ஆன பின்னர் தான் திருமணம் என்ற பேச்சையே எடுக்கின்றனர். ஆனால் சங்க காலத்தில், தலைவனும் தலைவியும் கண்டவுடன் (இயற்கையாக) காதல் கொள்கின்றனர். அக்காதல் அம்பலத்துக்கு வந்த பின்னர் இருவருக்கும் திருமணம் என்பது முடிவாகிறது. அதற்குப் பின்னர் தான் வரைவிடை வைத்து (திருமண வாழ்க்கைக்காகபொருளீட்டுவதற்காகத் தலைவியைப் பிரிந்து செல்கிறான் தலைவன்.

நள்ளென்று அன்றே யாமம்; சொல்அவிந்து
இனிதுஅடங் கினரே மாக்கள்; முனிவுஇன்று
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே.” 6 பதுமனார் (நெய்தல்)

விளக்கம்: நேரம் நள்ளிரவு. மக்கள் அனைவரும் பேச்சடங்கி தடையேதுமின்றி உறங்குகிறார்கள். ஆனால் நான் ஒருத்தி மட்டும் உறக்கமின்றித் தவிக்கின்றேனே! (“ஊர் தூங்கினாலும் நான் தூங்க மாட்டேன்.. தீயானதே மஞ்சம்என்றும் “ஊருசனம் தூங்கிருச்சு.. கூதக்காத்தும் அடிச்சிருச்சு.. பாவிமனம் தூங்கலையே.. அதுவும் ஏனோ புரியலையே” என்றும் பாடும் modern தலைவிகளுள் வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளுக்குப் பிரிந்து சென்ற தம் தலைவர்களை எண்ணி உறக்கம் இழந்தவர்களும் அடக்கம். தலைவனை ஊரில் விட்டுவிட்டு தாம் வெளிநாட்டுக்குச் சென்று தவிக்கும் modern தலைவிகளும் இங்கே உண்டு என்பதை அறிக).

அடுத்தும் ஒரு புலம்பல் தான். தலைவன் போருக்காகத் தலைவியைப் பிரிந்து சென்றுவிட்டான். பிரிவைத் தாங்காத தலைவி பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு ஒரு கட்டத்தில் தலைவனை எண்ணிப் புலம்பத் தொடங்குகிறாள். அதுவும் தோழியின் காதில் விழுமாறு :) 

கோடுஈர் இலங்குவளை ஞெகிழ நாள்தொறும்
பாடுஇல கலிழும் கண்ணொடு புலம்பி
ஈங்குஇவண் உறைதலும் உய்குவம் ஆங்கே
எழுஇனி, வாழிஎன் நெஞ்சே! முனாது
குல்லைக் கண்ணி வடுகர் முனையது
பல்வேற் கட்டி நல்நாட்டு உம்பர்
மொழிபெயர் தேஎத்த ராயினும்
வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே!” 11 மாமூலனார் (பாலை)

விளக்கம்: என் நெஞ்சமே! சங்கை அறுத்துச் செய்த ஒளி விளங்கும் வளையல்கள் கழன்றுவிழ, நாள்தோறும் கண்ணிமை பொருந்தாமல் உறக்கமின்றி அழும் கண்ணுடன், தனித்திருந்து இங்கு இவ்வாறு வருந்துவதிலிருந்து விடுபடுவோம்! ஆங்கே தூரத்திலுள்ளதும் கஞ்சங்குல்லைக் கண்ணி சூடிய வடுகர்களது எல்லையிலுள்ளதும் பல வேற்படையையுடையகட்டிஎன்பவனது நாட்டுக்கு அப்பாலுள்ளதும் வேற்றுமொழி பேசும் நாட்டில் இருப்பாராயினும் அவர் இருக்கும் அந்நாட்டுக்கு வழிதேடிச் செல்லுதல் என முடிவு செய்துவிட்டேன். எனவே இனி விரைந்து புறப்படுவாயாக நெஞ்சே!

            உண்மையிலேயே தலைவனைத் தேடிப் போவதற்கு வழியைக் காணோம். ஆனால் தன் மனதில் ஏற்படும் துயரை இறக்கி வைப்பதற்காகத் தோழிக்குக் கேட்குமாறு இவ்வாறு உரக்கப் புலம்பித் தலைவி தன் ஆற்றாமையை ஆற்றிக் கொள்ளும் உளவியல் இது. (“தினமும் ஒரு முத்தம் தந்து காலை காஃபி கொடுக்க நீ இல்லைஎன்று modern தலைவர்கள் அங்கே புலம்பிக் கொண்டிருப்பது வேறு விஷயம்).

            ஆறுதல் சொல்லுவது ஒரு குத்தமாய்யா?” என்று தோழி எண்ணும் ஒரு பாடல் இதோ. தலைவன் பிரிந்து சென்று விட்டான். தலைவி அவனது பிரிவைத் தாங்க மாட்டாளே என்று கவலைப்படும் தோழி அவளுக்கு அடிக்கடி ஆறுதல் சொல்லிக்கொண்டே இருக்கிறாள். அதனால் எரிச்சலுறுகிறாள் தலைவி. ஏன்?

எறும்பின் அளையில் குறும்பல் சுனைய
உலைக்கல் அன்ன பாறை ஏறிக்
கொடுவில் எயினர் பகழி மாய்க்கும்
கவலைத்து என்பஅவர் சென்ற ஆறே
அதுமற்று அவலம் கொள்ளாது
நொதுமல் கழறும்இவ் அழுங்கல் ஊரே.” 12 ஓதலாந்தையார் (பாலை)

விளக்கம்: எறும்பு துளைத்த சின்ன குழிகளைப் போலச் சிறுசிறு நீர்ச்சுனைகளை மட்டுமே வழியில் கொண்ட பாலைவனத்தில், கொல்லனது பட்டடைக் கல்லைப் போல பாறைகள் கொதித்துக் கொண்டிருக்கும். அப்பாறைகளில் ஏறி நின்று எயினர்கள் தங்கள் அம்புகளைத் தீட்டிக் கொண்டிருப்பர். இந்த ஆபத்துகளைக் கடந்து செல்லும் தலைவனைப் பற்றிச் சிந்திக்காமல் என் கவலையைப் பெரிதாக நினைத்து ஆறுதல் சொல்லிக்கொண்டே இருக்கிறது இவ்வூர்! இதில், ‘ஊர்என்று தலைவி குறிப்பது தோழியைத் தான் :) கோபத்தில் திட்டுகிறாளாம். (சரியாகத் தானே சொல்லுகிறாள் தலைவி என நினைத்தால்.. நீங்களும் நம் கட்சியே) ;)

            என்னடா இன்னும்பசலைநோய் வரவில்லையே என்று நினைக்கிறீர்களா? இதோ.. தலைவன் தோழியின் உதவியுடன் தலைவியைக் கூடினான். பிறகு முறைப்படி தலைவிக்கு ஆறுதல் கூறிப் பொருள்தேடப் பிரிந்தான். இந்தப் பிரிவினால் உடல் வாடியதால் பசலை நோய் வந்து மெலிந்த தலைவி, தோழியிடம் தன் ஆற்றாமையைக் கூறுகிறாள்.

மாசுஅறக் கழீஇய யானை போலப்
பெரும்பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகல்
பைதல் ஒருதலை சேக்கும் நாடன்
நோய்தந் தனனே தோழி!
பசலை ஆர்ந்தன குவளைஅம் கண்ணே!” 13 கபிலர் (குறிஞ்சி)

விளக்கம்: தோழி! பாகனால் கழுவப்பட்ட யானையைப் போலப் பெரிய மழையடித்துப் பெய்ததால் கழுவப்பட்ட கரிய சருச்சரையையுடைய உருண்டை வடிவக்கல், பசுமை தவழும் காட்டில் ஒருபக்கத்தே கிடக்கும். அத்தகைய மலைநாடன், பிரிவால் காமநோயைத் தந்தனன்; அதனால் குவளை மலர் போன்றிருந்த என் அழகிய கண்கள், இப்போது முழுவதும் பசலை நிறம் (dark circles?) ஆகிப்போயின!

சரி.. இந்தப் பசலை நோய் என்றால் என்ன? நெற்றியில் பசலை படர்ந்தது என்றும் படித்திருக்கிறோம். கண்களும் பசலை நிறமாகின என்று தலைவி சொல்லுவதையும் இப்பாடலில் வரும்கரிய கல்உவமையையும் வைத்துப் பார்க்கும் போது, தலைவன் தன்னோடு இருந்த போது இருந்த பூரிப்பு, பொலிவு எல்லாம் மாறி, நிறம் கருத்து, அழகு குறைவது தான் பசலை நோயோ? (Modern day தலைவிக்கு இதெல்லாம் சகஜமப்பா)

            அடுத்த பாடலைப் பாருங்கள். பொருள் தேடச் சென்ற தலைவனை வழக்கம்போல் கோபித்துக் கொள்கிறாள் தலைவி. (No girl is an exception)

அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்து
பொருள்வயின் பிரிவோர் உரவோ ராயின்
உரவோர் உரவோ ராக!
மடவம் ஆக மடந்தை நாமே!” 20 கோப்பெருஞ்சோழன் (பாலை)

விளக்கம்: தோழி! அன்பைக் கைவிட்டுவிட்டு அதற்குரிய துணையாகிய என்னையும் துறந்து, பொருள் தேடுவதற்காகப் பிரிந்து செல்பவர் தாம் அறிவுடையவர் என்றால், அவ்வறிவுடையவர் அறிவுடையவராகவே இருக்கட்டும்; நாம் அறிவற்றவராகவே இருந்துவிட்டுப் போவோம்!

            தனக்காகத் தான் இத்தனையையும் தலைவன் செய்கிறான் என்ற காரணம் கூட தலைவிக்குத் தேவையாய் இருக்கவில்லை. “பிரிந்து சென்றுவிட்டானா? சென்றுவிட்டான்அவ்வளவுதான். ஒரு பெண்ணின் காதல் நெஞ்சு வேறென்ன அறியும்? :( (Modern தலைவி தலைவனோடு அவளும் வெளியூருக்குப் பறந்துவிடுகிறாள். ஆனால் வெவ்வேறு இடங்களில் பணியாற்றும் காதலர்களின் நிலை? இரண்டாயிரம் ஆண்டுகள் சென்றாலும் காதல், ஏக்கம், தாபம் போன்ற உணர்வுகள் அப்படியே தான் இருந்து கொடுமை செய்கின்றன) :(

மற்றுமொரு கதையைக் கேளுங்கள். “கார்காலம் தொடங்கியதும் நான் வந்துவிடுவேன்என்று தலைவியிடம் தலைவன் சொல்லிவிட்டுச் செல்கிறான். அதுவே மரபாகவும் அக்காலத்தில் இருந்துவந்துள்ளது. நாட்களை விரல்விட்டு எண்ணியெண்ணிக் கழித்தபின் கார்காலமும் வந்துவிட்டது! தலைவனை இன்னும் காணோமே என்று கவலைப்படும் தோழிஇவளை எப்படித் தேற்றுவது?” என்று வருத்தப்படுகிறாள். அப்போது காதல் பித்து பிடித்த தலைவி பொன்மொழி ஒன்றை உதிர்க்கிறாள் கேளுங்கள்.

வண்டுபடத் ததைந்த கொடிஇணர் இடையிடுபு
பொன்செய் புனைஇழை கட்டிய மகளிர்
கதுப்பில் தோன்றும் புதுப்பூங் கொன்றைக்
கானம் கார்எனக் கூறினும்
யானோ தேறேன்அவர் பொய்வழங் கலரே.” 21 ஓதலாந்தையார் (முல்லை)

விளக்கம்: தோழி! வண்டுகள் வந்து மொய்க்குமாறு செறிந்து நீண்டு பூத்துள்ள மலர்க்கொத்துகளை இலைகளிடையே கொண்டு விளங்கும் புதிய பூக்களால் ஆகிய கொன்றை மரம், பொன்னால் புனைந்து செய்த அணிகலன்களைத் தலையில் கட்டியுள்ள மகளிரது கூந்தலைப் போலக் காட்சிதரும். அத்தகைய மரங்களையுடைய காட்டின் அம்மலர்களைக் காட்டி, “இது கார்காலமேஎன்று கூறினாலும் என்னுடையவர் பொய் சொல்லாதவர் ஆகையால் நான் அதை நம்பமாட்டேன் கார்காலமாக இருந்தால் தலைவன் சொன்னபடி வந்திருக்க வேண்டுமே! (பொய் சொல்லாத அந்தச் சங்ககாலத் தலைவன் சிகப்பாக இருந்திருப்பானோ? #சந்தேகம் :D)

            எனவே கார்காலம் அல்லது இளவேனிற் காலத்தில் (வசந்த காலம்) தலைவன் ஊர் திரும்புவது அந்தக் கால வழக்கம். இதோ இங்கேயும் வசந்த காலம் வந்துவிட்டது. ஆனால் தலைவன் திரும்பிவரக் காணோம். ஊரார் தலைவியின் காதலைக் கண்டபடிப் பேசத் தொடங்கிவிட்டனர்.
           
கருங்கால் வேம்பின் ஒண்பூ யாணர்
என் இன்றியும் கழிவது கொல்லோ?
ஆற்றுஅயல் எழுந்த வெண்கோட்டு அதவத்து
எழு குளிறு மிதித்த ஒருபழம் போலக்
குழைய, கொடியோர் நாவே
காதலர் அகலக் கல்லென் றவ்வே.” 24 பரணர் (முல்லை)

விளக்கம்: கரிய அடியினையுடைய வேம்பினது ஒளிமிக்க பூவாகிய புதுவருவாய் (அதாவது அந்த வசந்தகாலம்) என் தலைவன் என்னுடன் இல்லாமலும் கழிந்து போகுமோ? ஆற்றங்கரையில், ஓர் அத்திப்பழத்தைத் தின்ன விரும்பி ஏழு நண்டுகள் அதை மிதித்து நசுக்கிச் சிதைத்ததால் குழைந்து போவதைப் போல, ஊர்ப் பெண்கள் என் மனம் குழைய பழித்துப் பேசுகின்றனர். அவர்களின் பேச்சு நின்றபாடில்லை. (இந்தச் சூழ்நிலைகளில் modern தலைவிகள் பேசாமல்சொல்வதெல்லாம் உண்மை” zee tv studio-வில் போய் லட்சுமி ராமகிருஷ்ணனுடன் உட்கார்ந்து கொள்கிறார்கள்).

இப்படியே காதல் போய்க் கொண்டேயிருக்கிறது. தலைவன் இன்னும் தலைவியைத் திருமணம் செய்து கொள்ளவில்லை. இயல்பாகவே மனதில் பயம் தோன்ற தோழியிடம் இவ்வாறு கேட்கிறாள் தலைவி.

யாரும் இல்லை; தானே கள்வன்;
தான்அது பொய்ப்பின் யான்எவன் செய்கோ?
தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே.” 25 கபிலர் (குறிஞ்சி)

விளக்கம்: தோழி! தலைவன் என்னைக் களவில் (கனவில் அல்ல) கூடிய அந்தச் சமயத்தில் சாட்சி யாரும் இல்லை. கள்வனாகிய அவன் மட்டுமே இருந்தான். அவனே அதைப் பொய்யென்று கூறி அப்போது செய்த சத்தியத்தை இப்போது இல்லை என்று மறுத்துவிட்டால் நான் என்ன செய்வேன்? அவன் என்னை மணந்த போது, ஓடுகின்ற நீரில் ஆரல்மீனின் வரவை ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் நாரை மட்டும் அங்கே இருந்தது. அதுவும் மீன்மீது குறியாக இருந்ததால் சான்றாகும் தகுதி அதற்கு இல்லை! (இச்சூழ்நிலையில் modern தலைவி என்ன செய்வாள் என்பது தேவையில்லை. தன்னிடம் சிக்கிய ஒரே ஒரு figureஅயும் விட்டுவிட்டால் என்ன செய்வது, எங்கே போவது என்பது modern தலைவனின் தலையாய பிரச்சனைகளுள் ஒன்று :P).

            எனவே, தலைவிகளே.. நீங்கள் இன்னும் மேல்சொன்ன இவற்றைத் தான் செய்து கொண்டிருக்கிறீர்களா? கவலைப்படாதீர்கள்.. உங்கள் தலைவனுக்கு இந்தப் பக்கத்தைப் படிக்கக் கொடுங்கள் :)

            தலைவர்களே.. உங்கள் தலைவிகளின் மேல் நீங்கள் அளவிடமுடியாத அன்பு வைத்திருக்கிறீர்கள் என்பதை அவர்கள் அறிவார்கள். ஆனால் அன்பு என்பது அப்போதைக்கு அப்போதே வெளிகாட்டுவதற்காகத் தான். உள்ளேயே வைத்துக் கொள்வதற்கல்ல. பல சமயங்களில் உங்களது அன்பான, ஆறுதல் தரும் ஒரு வார்த்தை (ஒரு முத்தம்) இருவருக்குள்ளும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்.. After all, love unexpressed is a crime against the heart! :)

கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
அங்கங்கே திரைப்பட பாடல்களையும் (தகுந்தாற் போல்) சேர்த்துக் கொண்டதையும் ரசித்தேன்... முடிவில் சொன்னது பிரமாதம்...
Seeni இவ்வாறு கூறியுள்ளார்…
aayvukal ...


silirkka vaiththathu...

nantri..!
பால கணேஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
நள்ளென்று அன்றே யாமம் பாடலி்ன் கருத்துக்கு வெகு அருகில் வரும் கண்ணதாசனின் ‘பூ உறங்குது பொழுதும் உறங்குது விழி உறங்கவில்லை நிலவே, கார் உறங்குது காற்றும் உறங்குது கண்ணுறங்கவில்லை’ என்ற பாடல். சங்க காலத் தலைவிகளை இன்றைய மாடர்ன் தலைவிகளுடன் சேர்த்து வைத்துப் பேசியது நல்ல ரசனை! சங்கப் பாடல்கள் எனக்குப் படிக்கப் பிடிக்கும். அழகான விளக்கத்துடன் நீங்கள் தந்திருப்பது ‌மிகமிகப் பிடித்தது. துவக்கத்தில இந்தப் பதிவை எப்படி ரசிக்கணும்னு நீங்க சொல்லியிருக்கீங்களே சுபத்ரா.. அது மிகமிகச் சரி! அப்பப்ப இதுபோல தமிழ் அமுதத்தையும் பருகக் கொடுங்கள்!
sathishsangkavi.blogspot.com இவ்வாறு கூறியுள்ளார்…
மிக ரசித்தேன்... தங்கள் படைப்பை...
'பரிவை' சே.குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
ரசித்தேன்...
mohan baroda இவ்வாறு கூறியுள்ளார்…
Wow!!! Now it is proved you are not an 'L' board. Apply for permanent license.
mohan baroda இவ்வாறு கூறியுள்ளார்…
Madam, can u pls tell me the modern song for the following sanga padal:
Sembula Puyal Neer Pola Anbudai Nenjam Than Kalanthanave.
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@mohan baroda

செம்புலம் சேர்ந்த நீர் துளி போல்
அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன?

நறுமுகையே நறுமுகையே
நீ ஒரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து
நீ ஒரு திரு மொழி சொல்லாய்
அற்றை திங்கள் அன் நிலவில்
நெற்றி தரள நீர் வடிய
கொற்ற பொய்கை ஆடியவள் நீயா?

this song?
mohan baroda இவ்வாறு கூறியுள்ளார்…
No. The full song is as follows:
yAyum yAyum yArAgiyarO
vendhaiyum nundhaiyum emmuraik-kElir
yAnu nIyum evvazhi yaridum
sembulap-peynnIr pOla
vanbudai nenjan-dAn kalandanavE
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
:)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@mohan baroda

//the modern song for the following sanga padal:///

thats why i replied that modern song :))
ok the original one follows:

யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே!
- செம்புலப் பெயல்நீரார்.
mohan baroda இவ்வாறு கூறியுள்ளார்…
Thank you madam

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாரதி இன்று இருந்தால்

  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழ்க் குடியின் மணிமகுடமே.. பைந்தமிழ்த் தேர்ப்பாகனே.. பாரதியே.. இன்று நீ இருந்தால்... கல்பனா சாவ்லாவையும் கிரண் பேடியையும் கண்டு பிரமித்துப் போவாயா.. அல்லது.. 'ஆதிக்கம்' செய்யும் ஆண் வர்க்கத்தின் அடிமைச் சின்னங்களாய்.. காவியம் படைக்காமலே காணாமல் போன நம் கண்ணம்மாவையும் செல்லம்மாவையும் பார்த்துப் பரிதவித்துப் போவாயோ.. தெரியவில்லை! ஐந்து வயதில் ஐம்பது புத்தகங்களும் ஈரைந்து வயதில் இணையதளமும் என்று சாதனை படைக்கும் நம் பாரதச் சிறுவர்களைக் கண்டு களிப்பாயா.. அல்லது.. கரன்சிகளுக்குள்ளே காணாமல் போன 'கல்விக் கலை'யை கனவிலேயே கற்றுக் கொள்ளும் ஏழை 'ஏகலைவன்'களை எண்ணிக் கொதிப்பாயோ.. தெரியவில்லை! ஆழிப்பேரலையால் அடித்துச் செல்லப்பட்ட 'மனித சாதி'க்கு அன்பாலே அருமருந்திட்ட அன்னை உள்ளங்களை எண்ணி ஆனந்தம் கொள்வாயா.. அல்லது.. ஆயிரம் சாதிக்கொடிகள் உயரே பறக்க தன் உடலை மறைத்துக் கொள்ள ஓர் ஒற்றைத் துணிக்கு ஏங்கித் தவிக்கும் ஏழையைப் பார்த்து ஏமாற்றம் கொள்வாயோ தெரியவில்லை! தாய்நாட்டைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாத ...

தமிழ் vs சமஸ்கிருதம்

நாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா ? அதைத் தான் நானும் “ தீ ” விரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் .             சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது . துருக்கி தான் Indo-European மொழிகள் உருவாகிய இடம் என்று . “Indo” என வந்ததால் இந்திய மொழிகள் எல்லாமே இதில் அடக்கம் என நினைத்து ஓர் அதிர்ச்சியுடன் அதைப் பற்றிப் படிக்கத் தொடங்கினேன் . “ இதில் என்ன அதிர்ச்சி ” என்று கேட்பவர்களுக்கு – “ பின்னே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கியங்களைக் கொண்ட நம் ‘ தமிழ் ’ மொழியின் பூர்வீகம் துருக்கி என்றால் எப்படி இருக்கும் ?”             நிறைய வாசித்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தது , Indo-European மட்டுமல்ல   மேலும் பல மொழிக் குடும்பங்களும் அவற்றின் கீழே எக்கச்சக்கமான உப மொழிக் குடும்பங்களும் (Indo-Iranic, Indo-Pacific, Indo-Germanic etc.) பிரிவு ...

பொன்மொழிகள் - சுவாமி விவேகானந்தர்

நேற்று சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தையொட்டி அவரின் கருத்துக்களை நினைவுகூரலாம் என எண்ணியிருந்தேன். இன்று தான் முடிந்தது. Ø   Stand up, be bold, be strong. Take the whole responsibility on your own shoulders, and know that you are the creator of your own destiny. Ø   They alone live who live for others, rest are more dead than alive. Ø   Arise! Awake! And stop not till the goal is reached. Ø   To be good and to do good – that is the whole of religion. Ø   Strength is life, Weakness is death. Ø   All the power is within you; you can do anything and everything. Believe in that; don’t believe that you are weak. Stand up and express the divinity within you. Ø   Whatever you think, that you will be; if you think yourself strong; strong you will be. Ø   Stand and die in your own strength; if there is any sin in the world, it is weakness; avoid all weakness; for weakness is sin, weakness is death. Ø   Neither money pays, nor name pays, ...