There should be no fear of death, for the death of the body is but a gentle passing to a much freer life – Helen Greaves

At his best, man is the noblest of all animals; separated from law and justice he is the worst – Aristotle

What's in a name? That which we call a rose by any other name would smell as sweet - Shakespeare

அவள் பெயர் பூவெழினி

Aug 18, 2013(சாரு நிவேதிதா விமர்சகர் வட்டம் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசை வென்றிருக்கும் என் கதை கீழே)

ஆளுக்கொரு பொருளை வைத்துக்கொண்டு ஐந்துபேரும் சேர்ந்து அந்தக் குழியைத் தோண்டத் துவங்கியிருந்தோம்.

அட்வென்ச்சர் வேணுங்கிறதுக்காக இதெல்லாம் ஓவர் திவ்யா

லலிதா () லல்லி நூறாவது முறையாக அந்த டயலாகை சொல்லி முடித்தாள். அந்தக் குளிர் பனியிலும் அவளது முகம் வேர்த்து வெளுத்திருந்தது.

உங்களுக்கெல்லாம் மனசாட்சி இருக்கா? இந்த ஸ்மெல்ல எப்படித்தான் தாங்கிக்கிறீங்களோ

எவ்வளவோ பண்ணிட்டோம்; இதப் பண்ண மாட்டோமா? அப்படினு என் மனசு சொல்லுது

சிரித்துக்கொண்டே நான் சொன்னதைக் கேட்டவள் மண்வெட்டியைக் கீழே போட்டுவிட்டு அருகிலிருந்த வேறொரு கல்லறையின் மேல் சோர்ந்து போய் விழுந்தாள். அது அவளை ஏந்திக் கொண்டது.

பன்னெண்டு மணிக்குக் கிளம்பினோம். இப்போ பிரம்ம முகூர்த்தம்

திடீரென அப்போது யாரும் எதிர்பார்க்காத வண்ணம் சவக்குழிக்குள்ளிருந்து மண்ணை மேலே தள்ளிக்கொண்டு படாரென ஒரு பெண் உருவம் தூசுபறக்க எழுந்து உட்கார்ந்தது.

அமுதவல்லி, சோபனா இருவரும் அலறிக்கொண்டு பின்னால் ஓட, பிரபாவும் நானும் உறைந்து போய் நின்றோம். லல்லி பேயறைந்தவள் போல் உட்கார்ந்திருந்தது தெரிந்தது. எனது கால்கள் பின்னோக்கி நடக்க எத்தனித்தன. சில நொடிகள் கடக்க, பிரபா ஒரு கையில் கடப்பாறையோடு மற்றொன்றால் சில்லிட்டிருந்த என் கையைப் பிடித்தான்.

வா திவ்யா.. போயிரலாம்

எங்கள் கால்கள் நகர மறுத்தன. குழிக்குள் எழுந்து உட்கார்ந்த கரிய உருவம் உறக்கத்திலிருந்து விழித்ததுபோல் கொட்டாவி விட்டவாறே மேலே ஒட்டியிருந்த மண்ணைத் தட்டிக்கொண்டிருந்தது. என்னை மரணபயம் தன் கோரைப்பற்களால் கவ்விக் கொண்டது.

அது ஒரு பெண் பேய். மோகினியாக இருக்கலாம். அவள் மெல்ல வாய்க்குள் எதையோ முனகியபடி எழுந்துவர உதவுமாறு என்னை நோக்கிக் கைநீட்டினாள். பெரிய மார்புகள் முழுவதையும் மறைத்துக் கட்டியிருந்த அந்த மேலாடை புலித்தோலை நினைவுபடுத்தியது.

இதென்ன காஸ்ட்யூம்.. இவ்ளோ கவர்ச்சியாக. நாடகக்காரி மாதிரி வேஷம் போட்டுக்கிட்டு!’

மண் ஒட்டியிருந்ததைத் தவிர அவளது கரிய மேனியில் சிதைந்து போனதுக்கு அடையாளமாக எதுவுமே தென்படவில்லை. ஒருவாறு தைரியத்தை வரவழைத்து பிரபாவும் நானும் கைகளை நீட்ட, என் கையை மட்டும் பற்றிக்கொண்டு அவள் மேலே ஏறி வந்தாள்.

யாரிவள்? செத்துப்போனவளா உயிரோடு இருப்பவளா? உயிரோடு இருப்பவள் இங்கே எப்படி வந்தாள்? உள்ளே எப்படி இருக்க முடியும்? முடியாது.. அப்படியென்றால்...”

கணப்பொழுதில் ஏகப்பட்ட கேள்விகள் மண்டைக்குள் மிருதங்கம் வாசித்தன. அம்முவும் சோபாவும் கொஞ்சம் தள்ளியிருந்த ஒரு கல்லறையின் பின்னால் மறைந்திருந்து இங்கே நடப்பதை எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஏதோ ஒரு பூர்வ ஜென்மம் ஒன்றில் இவளை ஏற்கனவே சந்தித்திருப்பது போல தோன்றியது எனக்கு. அந்த மடத்தனத்தை எண்ணி என் தலையில் நானே தட்டிக்கொண்டேன். அவள் என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள். மந்தகாசப் புன்னகை என்பது இதுதானோ! நான் பிரபாவைப் பார்க்க முயன்றேன். அதற்குமுன் ஒரு மில்லியன் டாலர் கேள்வி அவளுக்குக் கால் இருக்கிறதா?’ கண்களைத் தளர்த்திக் கீழே பார்ப்பதற்குள் கழுத்தை நெரித்துவிடுவாளோ என்ற சந்தேகத்தால் பார்வையை என்னால் விலக்க முடியவில்லை.

ஆனால் அதன்பின் நடந்ததென்னவோ முற்றிலும் வேறு. என்னையும் பிரபாவையும் பார்த்து அவள் தான் கொஞ்சம் பயந்ததாகத் தோன்றியது. அவள் கண்களில் குடிகொண்டிருந்தது அச்சமா கூச்சமா என்று அனுமானிக்க முடியவில்லை. மெல்ல பேச்சு கொடுத்தேன்.  

நீங்க யாரு? எப்படி இங்க வந்தீங்க?”

“...”

நீங்க உயிரோடதான் இருக்கீங்களா?”

“...”

ஆர் யூ தமிழ்? டூ யூ கெட் மீ?”

என் உதடுகளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவள் இப்போது மெதுவாக அங்குமிங்கும் தலையசைத்தாள்.

இங்லிஷ்?”

பிரபா கேட்கவும் ஏதோ பயத்தோடு ஒரு குழந்தையைப் போல் ஓடிவந்து என்னோடு அண்டிக்கொண்டாள். எனக்கு உதறலெடுத்தது.

யான் தமிழ்

இதென்ன இலங்கைத் தமிழா?’ யோசித்துக்கொண்டே திரும்பி அவள் கால்களைப் பார்த்தேன். ஒரு காலில் மட்டும் யாழியைப் போன்ற ஓர் அணிகலன். அவள் ஓடிவந்தபோது அதுதான் சிலுசிலுவென்ற சத்தத்தை எழுப்பியது போல.

தேங்க் காட்! கால் இருக்கு பிரபாமனதுக்குள் நானே சொல்லிக் கொண்டேன்.

அப்போது என் மூளையில் ஒரு பொறி தட்டியது.

இது இரண்டாயிரத்துப் பதின்மூன்றாம் ஆண்டு. தாங்கள் வாழ்ந்த காலம் என்ன?” கொஞ்சம் தெளிந்த தமிழில் பதற்றத்துடன் கேட்டேன்.

காலம்...” யோசித்தாள்.

இந்தியா விடுதலை பெற்ற சமயமா?”

“...”

இரு திவ்யா, நான் கேக்குறேன்

என்ன மாதிரி சமூகத்தில் நீங்கள் வாழ்ந்தீர்கள்?”

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த சமூகம் எங்களது

! உங்கள் பெயர்?”

பூவெழினி

இங்கே எப்படி வந்தீர்கள்?”

தாயே, ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான் முந்துறும்

அட! திருக்குறள்!!” நான் பரபரப்பானேன்.

அம்மு, சோபா, லல்லி மூவரும் அங்கே வந்து சேர்ந்தனர்.

இவர்கள் என் தோழிகள்என்று அவளுக்கு அறிமுகப்படுத்தினேன். மெல்ல சுடுகாட்டை விட்டு நகரத் தொடங்கினோம்.

நாங்கள் பேசிக்கொள்ளும் தமிழ் ங்களுக்குப் புரியவில்லையா?”

என்ன? நீங்கள் பேசிக்கொள்வது தமிழா?”

அதுசரி. திவ்யா.. she seems interesting. இவங்களுக்குச் சம்மதம்னா உங்க ரூமுக்கு அழைச்சிட்டுப் போங்களேன்?”

எனக்கும் ஆசையாகத் தான் இருந்தது. ஆனால்? நான் பிரபாவைத் தனியாக இழுத்தேன்.

டேய்.. கால் இருக்குறதுனால மட்டும் இவளைப் பேய் இல்லனு சொல்லிறமுடியாது. Technology has improved so so much. வேற எதாவது க்ரைடீரியா இருந்தாலும் இருக்கும். நீ ஒரு ஆம்பள பையனா இருந்துட்டு போயும் போயும் பொண்ணுங்ககூட ஒரு பேயை அனுப்பிவைக்கிறியே? ப்ளீஸ்டா. வேண்டாம். இவளை இங்கேயே விட்டுட்டுப் போயிறலாம். எனக்கு அதுதான் சரினு படுது

நங்காய்.. நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்?”

நாங்கள்.. நீ.. நீயும் எங்களோடா வருகிறாய்?”

வீடு வந்து சேர்ந்ததும் தான் அம்முவுக்கும் சோபாவுக்கும் மூச்சே வந்தது. இன்னும் விடிந்திராத காரணத்தால் அக்கம்பக்கத்தினர் யாரும் பூவெழினியைப் பார்க்கவில்லை. எனக்கு அவளிடம் பேசுவதற்கு ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தன. ஆனால் முதல் காரியமாக அவளைக் குளிப்பாட்ட வேண்டும்.

எங்கே சென்று நீராடுவது?”

அதற்கென்றே ஒரு அறையை வீட்டிற்குள்ளேயே வைத்திருக்கிறோம் வா

வீட்டுக்கு வந்ததிலிருந்தே எல்லாவற்றையும் பார்த்து அதிசயித்துக் கொண்டேயிருந்தாள்.

இந்தப் பளிங்குத் தரையில் நீராடுவதா? மேலே என்ன கம்பி? இது என்ன வில்லை? இந்தக் குப்பிகளுக்குள் என்ன இருக்கின்றன?”

இது ஷவர்.. இது சோப். இது ஷாம்பூ. இது..”

இதெல்லாம் சரிபட்டு வராதுடி. இன்னைக்கு ஒருநாள் நீயே அவளைக் குளிப்பாட்டிவிட்டுரு

அம்மு சொல்ல, சோபாவும் லல்லியும் சிரிப்போடு வேடிக்கை பார்த்தனர்.

உனக்கு ஆங்கிலம் தெரியுமா?”

இல்லை என்பது போல் தலையசைத்தாள்.

நம் நாட்டை ஆங்கிலேயர்கள் 200 வருடங்கள் அடிமைபடுத்தி வைத்திருந்தனர். அதற்குப்பின்..”

அதற்குப்பின்?”

அதற்குப்பின் இப்போது நம் நாட்டு அரசியல்வாதிகளே நம்மை அடிமைபடுத்தி வைத்திருக்கின்றனர்

நாங்கள் சாதாரணமாகப் பேசினாலே ஏதோ ஜார்கன் வைத்துப் பேசுவது போல் அவளுக்குத் தோன்றினால் ஆச்சரியம் இல்லை.

ஒருவழியாக அவளைக் குளிப்பாட்டி, சேலையுடுத்தி அழைத்து வருவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது. இனிமேல் இவளைச் சங்க காலத்துப் பெண் என்று சொன்னால் படைத்தவனால் கூட நம்ப முடியாது. அந்த அளவுக்கு மாற்றியாகிவிட்டது. நாங்கள் சமைத்த பிரியாணியை ருசித்துச் சாப்பிட்டாள். ஆனால் என்ன, அவளிடம் நாங்கள் செந்தமிழில் பேசவேண்டியிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் பேசுவதைக் கூட ஊர்ஜிதம் செய்து புரிந்துகொள்ளத் தொடங்கினாள்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் நீங்கள் வாழ்ந்தது ஏறத்தாழ 1800 ஆண்டுகளுக்கு முன் இருக்கலாம்.”

பெண்களின் கூந்தலில் வீசும் மணம் இயற்கையானதா? செயற்கையானதா? என்று பட்டிமன்றம் வைத்ததெல்லாம் நீங்கள் தானே?”

அது போகட்டும். நல்ல நல்ல பாடல்களை எழுதிய நீங்கள் ஏன் அவற்றை எழுதியவரின் பெயர்களைக் குறிப்பிடவில்லை? ஓரேருழவர், செம்புலப் பெயனீரார், அள்ளூர் நன்முல்லையார், ஓரம்போகியார், ஐயூர் முடவனார், மீனேறித் தூண்டிலார், காவன் முல்லைப் பூதனார்னு நாங்களே பெயர்களைச் சூட்டிக்கொண்டோம்

சோபா அப்போது தனது மடிக்கணினியைத் தூக்கிக்கொண்டு ஓடிவந்தாள். அதைப் பூவெழினியிடம் காட்டி, “திருக்குறள் எழுதிய வள்ளுவர் இப்படித்தான் இருப்பாரா? உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன்என்று கேட்டாள்.

நாங்கள் கேட்ட எந்தக் கேள்விக்கும் அவளிடம் பதிலே இல்லை. நான் பார்த்த வரையிலும் அவள் முகத்தில் ஏதோ ஓர் இனம்புரியாத சோகம் அப்பிக்கிடந்தது. அடிக்கடி வாசலைப் பார்த்துக்கொண்டிருந்தவள் யாருக்காகவோ எதற்காகவோ காத்திருப்பதைப் போலவே எனக்குத் தோன்றியது. அங்கு நடந்த களேபரங்கள் எதிலுமே அவளுக்கு மனம் லயிக்கவில்லை என்பது மட்டும் உறுதியாகத் தெரிந்தது.

ங்களுக்குத் திருமணமாகி விட்டதா?” மெல்ல நான் கேட்டேன்.

விசுக்கெனத் திரும்பிய அவள் மணமாகி ஒரு குழந்தைச் செல்வம் கூட இருக்.. இருந்தது தோழி. வினைமேற் சென்றவனும் திரும்பவில்லை. என் செல்வமும் இப்போது என்னிடமில்லை

குழந்தைக்கு என்ன?” என்று கேட்கும் முன்னரே அவள் தன் கைகளுக்குள் முகம்புதைத்து விம்மி அழத்தொடங்கினாள். என்ன சொல்லுவது என்று நாங்கள் யோசித்துக் கொண்டிருந்த வேளையில் தான்அம்மா...” என்று அழைத்தவாறு வாசலில் யாழினி வந்து நின்றாள். மூன்று வயதாகும் அவளுக்கு எல்லாப் பெண்களுமேஅம்மாதான்.

நான் போய் அவளைத் தூக்கிக் கொண்டு உள்ளே வந்தேன்.

பூவெழினி.. இங்கே பார். பக்கத்து வீட்டுக் குழந்தை. பெயர் யாழினி

யாழினி புதியவளைப் பார்த்து மெல்ல உதடுவிரித்துச் சிரித்தாள். அவள் பார்வையில் வினோதம் தெரிந்தது. அதன்பின் தரையில் அமர்ந்து தனது மேஜிக் சிலேட்டில் கிறுக்கத் தொடங்கினாள். எனக்கு பிரபாவிடம் பேசவேண்டும்போல் தோன்றியது. அலைபேசியை வெளியே எடுத்தால் இவளுக்கு ஒரு பெரிய லெக்சர் கொடுக்க வேண்டுமே என்று எண்ணிக்கொண்டே மெல்ல பால்கனி பக்கம் சென்றேன். வீட்டில் அனைவரும் தங்கள் வேலைகளில் பிசி ஆகிவிட, யாழினியை நோட்டம் விட்டவாறே எனது டச் ஸ்கிரீன் மொபைலில் பிரபாவின் தொடர்பு எண்ணைத் தேடிக்கொண்டிருந்தேன்.

யாழினி மடியில் வைத்திருந்த சிலேட்டை நோக்கிக் குனிந்து அமர்ந்திருந்தாள். குனியக் குனிய நெற்றியில் படர்ந்த முடி முகத்தில் வந்து விழுந்து கொண்டேயிருந்தது. தனது பிஞ்சுக் கரத்தால் லாவகமாக அதனைப் பின்னுக்குத் தள்ளியவாறே எதையோ வரைந்து கொண்டிருந்தாள். அது மறுபடியும் மறுபடியும் முகத்தில் வந்து விழுந்தது. நான் பிரபாவிடம் பேசிக் கொண்டிருந்தேன். யாழினி எதுவோ ஞாபகம் வந்தவளாய் ஹாலில் இருந்த அந்தப் பெரிய ட்ரெஸிங் டேபிளை நோக்கிச் சென்றாள். வழக்கம்போல அதன்மீது கவனமா ஏறி உட்கார்ந்தாள். ஒரு சீப்பை எடுத்துக்கொண்டு முகத்தில் விழும் முடிகளை வாரி ஒரு சிறிய க்ளட்சர் கிளிப்பை எடுத்து மாட்டிப்பார்த்தாள். நான்கைந்து முயற்சிகளுக்குப் பின் கிளிப் முடியில் மாட்டிக்கொண்டது. சட்டென்று திரும்பிப் புதியவளைப் பார்த்துச் சிரித்தாள்.

இருந்தாலும் அழகில் ஏதோ குறைவது போலத் தோன்றிடவே மறுபடியும் கண்ணாடியில் முகத்தைப் பார்த்தாள். இப்போது கிளிப்போடு சேர்ந்து வலது கண்ணை மறைத்தவாறு முகத்தில் முடிக்கற்றை விழுந்து கொண்டிருந்தது. அதை வழக்கம்போல் கையால் ஒதுக்கிவிட்டுக்கொண்டே எக்கிப் பவுடர் டப்பாவை எடுத்தாள். அதை வயிற்றோடு அழுத்தித் திறந்து உள்ளேயிருந்த ஸ்பாஞ்சினால் முகத்தில் ஏகத்துக்கும் பவுடரை அள்ளித்தட்டினாள். இடது கண்ணோடு சேர்த்துக் கன்னத்தில் வெள்ளைத் திட்டாக அப்பிவைத்துக் கொண்டபின் மீதியை தலையில் கொட்டவும் மறக்கவில்லை. பிரபா பூவெழினியைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தான். பூவெழினி யாழினியை ரசித்துக் கொண்டிருந்தாள்.

கீழே குதித்து இறங்கிய யாழினி மேஜையின் ட்ராயரை இழுத்து எதையோ தேடிக்கொண்டிருந்தாள். கொஞ்ச நேரத்தில் அது அவள் கைகளில் சிக்கியது. அவளுக்காகவே வாங்கி வைத்திருந்த பலவண்ணச் சாந்துப்பொட்டு டப்பாதான் அது. மூடியைக் கழற்றி ஒவ்வொரு வண்ணமாகத் திருகித்திருகித் திறந்தாள். அவளுக்குப் பிடித்த நிறங்களை எல்லாம் முகத்தில் இட்டுக்கொண்டபின் தொடைகள் தெரிய முட்டிக்குமேல் அவள் அணிந்திருந்த மஞ்சள்நிறக் கவுனில் சிவப்புக்கலர் சாந்துப்பொட்டு சிந்தி வடிந்தது. டப்பாவை மேஜையில் வைத்துவிட்டுத் திரும்பி பூவெழினியைப் பார்த்தாள். அவள் ஒன்றும் சொல்லாமல் சிரித்துக் கொண்டிருக்கவே கவுனை அழுத்தித் துடைத்தாள். அவள் செய்ததையெல்லாம் நான் பிரபாவுக்கு லைவ் கமெண்ட்டரி கொடுத்துச் சிரித்துக் கொண்டிருந்தேன். பக்கத்து வீட்டிலிருக்கும் யாழினியின் அம்மாவுக்கு அவள் இப்படி வேஷம் போடுவது தெரிந்தால் அடி உறுதி. ஆனால் இவ்வளவு அழகான காட்சி வேறு எங்கே காணக் கிடைக்கும்?

நான் யாழினியைத் தூக்கலாமா என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே பூவெழினி ஓடிச்சென்று குழந்தையைத் தூக்கிக் கொண்டாள். மிகவும் உணர்ச்சிவசப்பட்டவளாய் மாறி மாறி யாழினிக்கு முத்தம் கொடுத்துக் கொண்டேயிருந்தாள். அவளை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். அவள் கண்களில் நீர் ததும்பி வழிந்ததைப் பார்த்தேன். யாழினியும் அவளை இறுக்கமாகக் கட்டிக்கொள்ள நான் பிரபாவுடன் பூவெழினியைப் பற்றிப் பேசுவதில் மும்முறமானேன். அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக நமது பழக்கவழக்கத்துக்கு எப்படி மாற்றலாம் என அவன் சொல்லிக் கொண்டிருந்தான். பேசி முடித்தவுடன் அழைப்பைத் துண்டித்துவிட்டு யாழினியையும் பூவெழினியையும் காண ஹாலுக்குள் வந்தேன். அங்கே அவர்கள் இல்லை.

யாழ்ஸ்..” என்று அழைத்தவாறே படுக்கையறைக்குச் சென்று பார்த்தேன். அவர்கள் அங்கேயும் இல்லை. சமையலறையில் அம்முவுடன் விளையாடிக் கொண்டிருக்கலாம் என்று எண்ணிக்கொண்டு சமையலறைக்கு வந்தால் அம்மு மட்டுமே பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தாள்.

என்ன யாரையும் காணொம்?”

சோபாவும் லல்லியும் அப்பவே ஷாப்பிங் போனாங்க. இன்னும் வரல. யாழினியும் அந்த அவ்வையாரும் ஹால்ல விளையாடிட்டு இருப்பாங்க. நீ எங்கே போயிருந்த?”

திவ்யா.. யாழினியை எங்கம்மா? வீட்டுக்கு வரச்சொல்லு. அவ இன்னும் குளிக்கல சாப்பிடல ஒன்னும் செய்யல

யாழினியின் அம்மா வந்து சொல்லிவிட்டுப் போகவும் தான் எனக்கு எதுவோ உறுத்தியது. ஓடிச்சென்று வீடு முழுக்கத் தேடினேன். யாழினியைக் காணோம். பூவெழினியையும்.

பதற்றத்துடன் பிரபாவுக்கு போன் செய்து அழைத்தேன். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் நாங்கள் இருவரும் அங்கே நின்றுகொண்டிருந்தோம். இரவு நாங்கள் தோண்டிய பூவெழினியின் கல்லறை இடிக்கப்பட்ட சுவடே தெரியாமல் இருந்தது. யாழினி அதன்மீது உட்கார்ந்து சிரித்துக் கொண்டிருந்தாள்.


33 comments:

சே. குமார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

வாழ்த்துக்கள் அக்கா.

வெற்றிவேல் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தமிழ் மனம் ஓட்டுப் போட இயலவில்லை... திண்டுக்கல் தனபாலன் அண்ணாவைத் தொடர்பு கொள்ளுங்கள்...

நல்ல கதை...

மகேந்திரன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அருமையான கதை...

பால கணேஷ் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மிகமிக மகிழ்ச்சியா இருக்கு சுபத்ரா. முதல் பரிசு வென்ற உங்களுக்கு என் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்! என் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்! (எதுக்கு ரெண்டு தடவை சொல்றேன்னு யோசிக்கறீங்கதானே... அப்புறம் புரியும்!) கதையை மெதுவாப் படிச்சுட்டு என் கருத்துக்களைத் தெரிவிக்கறேன் நிதானமா. பொறுத்தருள்க!

பால கணேஷ் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

வெற்றிவேல் said...
தமிழ் மனம் ஓட்டுப் போட இயலவில்லை... திண்டுக்கல் தனபாலன் அண்ணாவைத் தொடர்பு கொள்ளுங்கள்...

...என்ன வெற்றிவேல் பிரதர்! தி.தனபாலன்தான் தமிழ்மணம் ஓனரா...? சொல்லவே இல்ல..!

சீனு said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

வாழ்த்துக்கள் சுபத்ரா... வாழ்வில் இன்னும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துக்கள்....

எத்தனை பெரிய விஷயம் எவ்வளவு அசால்ட்டாய் செய்துள்ளீர்கள்... மிகவும் மகிழ்வாயுள்ளது

வித்தியாசமான கதைக்களம்.. தேர்ந்த எழுத்து நடை எப்போதுமே உங்கள் வெற்றிக்கான பாதை... இன்னும் பல படைப்புகள் படைக்க வாழ்த்துக்கள்

சாதாரணமானவள் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

உங்கள் கதை நடைக்கு நான் அடிமை சுபா

ஸ்ரீராம். said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

வித்தியாசமான களத்தில் கதை விறுவிறுப்பாக இருக்கிறது.

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@சே. குமார்

நன்றி. ஆனால் நான் எப்போ உங்களுக்கு அக்கா ஆனேன்? :)வேண்டுமானால் தங்கை என்று வைத்துக்கொள்ளுங்கள்..

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@வெற்றிவேல்

நன்றி. நான் அப்போது தமிழ்மணத்தில் சமர்ப்பிக்கவே இல்லை.. அதான் :)

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@வெற்றிவேல்

நன்றி. நான் அப்போது தமிழ்மணத்தில் சமர்ப்பிக்கவே இல்லை.. அதான் :)

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@மகேந்திரன்

மிக்க நன்றி :)

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@பால கணேஷ்

மெதுவா, உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது படிச்சிட்டு கண்டிப்பா கமெண்ட் பண்ணுங்க பால கணேஷ்! :)

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@சீனு

மிக்க நன்றி ஸ்ரீ :)

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@சாதாரணமானவள்

Thank U Dear :)

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ஸ்ரீராம்.

மிக்க நன்றி ஸ்ரீராம்!

சங்கவி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அழகான கதை., வாழ்த்துக்கள் சுபத்ரா...

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@சங்கவி

மிக்க நன்றி!

சென்னை பித்தன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

brilliant; இதற்கு மேல் என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை! சொற்கள் கிடைக்கவில்லை!
கதை ,கவிதை இரண்டிலும் கலக்கும் உங்களுக்கு என்வாழ்த்துகள்

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@சென்னை பித்தன்

மிக்க நன்றி! :) :)

ஜீவன்பென்னி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சுபா அக்கா எதிர்பாரத திருப்பத்தோடு முடிச்சிருக்கீங்க. வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

Ranjani Narayanan said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

காதல் கடிதப் போட்டி, சிறுகதை போட்டி இரண்டிலும் வெற்றிக் கொடி கட்டிப் பறப்பதற்கு வாழ்த்துக்கள் சுபத்ரா!

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ஜீவன்பென்னி

கிளம்பிட்டாய்ங்கய்யா.. கிளம்பிட்டாய்ங்க :) எனக்குத் தாத்தா வயசிருக்குறவங்க எல்லாம் என்னைப் பார்த்து அக்கானு சொல்றாங்களே :( என்ன செய்ய :))

நன்றி ஷமீர்!

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@Ranjani Narayanan

மிக்க நன்றி அம்மா. எல்லாம் உங்கள் ஆசிகளுடன்! :)

பால கணேஷ் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இன்று வலைச்சரத்தில் உங்களின் படைப்புகளைப் பற்றிப் பேசும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. நேரமிருப்பின் சென்று பார்வையிடவும்.

http://www.blogintamil.blogspot.in/2013/12/blog-post_3.html

இராஜராஜேஸ்வரி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

வித்தியாசமான கதைக்களம் ...

பாராட்டுக்கள்..!

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_3.html

NIZAMUDEEN said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இதுபோலொரு திகில் கதை...
நான் படித்ததில்லை இதுவரை...
ஆச்சரியமூட்டும் முடிவு....

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@பால கணேஷ்

Thank U and so kind of u Ganesh! :)

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@இராஜராஜேஸ்வரி

மிக்க நன்றி! இதோ சென்று பார்க்கிறேன்..

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@NIZAMUDEEN

Thank U Nizamudeen! :)

Rupan com said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளார்கள் வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/02/blog-post_16.html?showComment=1392506757030#c2810563175120508250

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@Rupan com

Thank u Ruban!

rajendran said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நல்ல கதை. வாழ்த்துக்கள்