There should be no fear of death, for the death of the body is but a gentle passing to a much freer life – Helen Greaves

At his best, man is the noblest of all animals; separated from law and justice he is the worst – Aristotle

What's in a name? That which we call a rose by any other name would smell as sweet - Shakespeare

பேருந்தில் நீ எனக்கு..

Sep 14, 2010





மழை சோவென்று பெய்து கொண்டிருந்தது. அடித்த காற்றில் அது வரை அங்கு உலர்ந்து கிடந்த சருகுகள் எல்லாம் சுற்றிப் பறந்தன. சாலையில் சென்ற பெண்களின் உடைகளை எல்லாம் காற்று களவாடப் பார்த்தது. சிக்கென்று பிடித்துக் கொண்டு சென்றனர் அனைவரும். மறு கையில் குடை வேறு எதிர் திசையில் மடங்கிக் கொண்டது. குழந்தையோடு வரும் பெண்மணி அதன் கண்களை கை வைத்துப் பொத்திக் கொள்கிறாள். வெகு நாட்களாகத் திறக்கபடாமல் பூட்டி இருந்த டீக்கடை ஒன்று அனைவருக்கும் ஒதுங்க இடம் தந்தது. சிலர் எதிரில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் அவரவர் பேருந்திற்காகக் காத்திருந்தபடி பாதி நனைந்திருந்தோம்.


"மழை என்னமா பெய்யுது.. நனையறது நல்லாத் தான் இருக்கு.  ஒடம்புக்கு ஏதும் ஆகலைனா பரவால்ல.." எண்ணியவாறே பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன். பக்கத்தில் இருந்த அனைவரும் ஆண்கள். கொஞ்சம் கூச்சமாகத் தான் இருந்தது. இவ்வளவு நெருக்கத்தில் நிற்பது. ஒரு பக்கம் இந்த பயம். இன்னொரு பக்கம் பேருந்து வரவேண்டும் என்ற அவசரம். நொடிகள் யுகங்களாகத் தெரிந்தன. 

கடைசியாகப் பேருந்து வந்தது. "ஐயோ.. இவ்வளோ கூட்டமா?" என்று எண்ணிக்கொண்டே ஏறினேன் வேறு வழி தெரியாமல். உடையெல்லாம் பாதி நனைந்திருக்க கூட்டத்திற்குள் புகுந்தேன். ஃபூட் போர்ட் தான்.

”அட.. என்னுடன் அவனும்! இவ்வளவு நேரம் எங்கே நின்று கொண்டிருந்தான் எனக்குத் தெரியாமல்?” ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே ஏறி நின்றான். எனக்கு அடுத்தப் படியில்.

"அட.. உள்ள வாங்கப்பா. மேல ஏறுமா. படியில நிக்காத. நடத்துனர் சத்தம் போடவும் நெருக்கிக் கொண்டு உள்ளே ஏறினேன். அவனும் ஒரு படி மேலே ஏறினான். மிக நெருக்கமாக. நான் விழுந்தால் அவன் மேல் தான் விழ வேண்டும். கடவுளே. பத்திரமாகக் கல்லூரிக்குப் போய்ச் சேர வேண்டும். நானும் அவனும்.

இதென்ன.. அவனுக்காகவும் நான் வேண்டிக் கொள்வது? திடீரென்று அவனைத் திரும்பிப் பார்த்தேன். அவன் சட்டென்று விலகி நின்றான். ஏதோ நான் கோபத்தில் பார்ப்பதாக எண்ணிக் கொண்டு. எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் அதே வேகத்தில் நான் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்.

"ரெண்டு காலேஜ்" என்று அவன் டிக்கெட் எடுத்தது கேட்டது. திரும்பிப் பார்த்தேன். உனக்கும் எடுத்துவிட்டேன் என்று அவன் கண்கள் சொல்லியதாகப் பட்டது. மறுபடியும் ஒரு உணர்ச்சியும் இல்லாமல் நான் திரும்பிக் கொண்டேன். அடுத்தப் பேருந்து நிறுத்தத்தில் இன்னும் இருவர் ஏறினர். என் கல்லூரி மாணவர்கள் தான். படியில் நிற்க இடமில்லை. அவன் இன்னும் மேலே ஏறி என்னருகில் உரசிக் கொண்டு நின்றான். அந்தக் குளிரில் அவனுடைய வெப்பமான மூச்சுக் காற்று என் முதுகில் பட்டதை உணர முடிந்தது. கண்களைச் சிக்கென மூடிக் கொண்டு நின்றேன். மேலே என் ஒரு கை கம்பியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.

"என்னடா.. இன்னைக்கு பஸ்?" என்றான் புதிதாக ஏறியதில் ஒருவன்.

"பைக் சர்வீஸ்க்கு விட்டுருக்கேன்டா. மழை வேற. நல்ல வேள.. இன்னைக்கு பஸ்ல வந்தேன்" என்று இவன் பேசியது கேட்டது. கடைசி வார்த்தைகள் மட்டும் கொஞ்சம் அழுத்தமாக வந்ததன போல் இருந்தது எனக்கு.

"டேய்.. ஏதோ ப்ளான் பண்ணி வந்திருக்குற மாதிரி இருக்கு?" என்று சிரித்துக்கொண்டே கூறினான் இன்னொருவன். அவன் என்னைப் பார்த்து தான் சொல்லியிருப்பான் என்பது திரும்பிப் பார்க்காமலே எனக்குத் தெரிந்தது.

அதற்கு அவனிடம் பதில் இல்லை. எனக்கோ நெருப்பு மேல் நிற்பது போல் இருந்தது.

"என்னடா.. பேச மாட்டேங்குற? எப்ப உன் வைஃப்-அ வீட்டுக்குக் கூட்டிட்டு போகப் போற?" என்று சின்சியர் சிகாமணியாகக் கேட்டவனின் மேல் எனக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. இந்த நேரத்தில் இவ்வளவு கூட்டத்தில் இந்த மழை நேரத்தில் கல்லூரிக்குச் சென்று கொண்டிருக்கும் இப்போது இந்தக் கேள்வி ரொம்ப முக்கியமோ என்று கேட்கத் தோன்றியது.

"டேய்.. சும்மா இருடா" என்று இவன் அவசரமாக மறுத்தது கேட்டது. அப்புறம் அமைதி. மழைச் சத்தம் மட்டும் விடாமல் இறைந்து கொண்டிருந்தது. இனிமேல் இடையில் நிறுத்தம் ஏதுமில்லை. காலேஜ் தான் அடுத்தது. ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் கம்பியில் பிடித்திருந்த கையை மாற்றினேன். "ஐயோ.. இப்பொழுது பார்த்தா இந்த டிரைவர் சடன் ப்ரேக் போட வேண்டும்?" நிலை தடுமாறி அவன் மார்பில் சாய்ந்தேன். தாங்கியிருந்த அவனிடமிருந்து உடனே சுதாரித்துக் கொண்டு விலகிக் கொண்டேன். கண்களை மூடிக் குனிந்து கொண்டேன்.

கழுத்தில் கட்டி இருந்த மஞ்சள் தாலியின் ஈரம் இன்னும் காயவில்லை. திடீரென்று அப்பாவின் முகம் கண்ணுக்குள் வந்தது.

"என் பேச்சை மீறி இப்படி ஒரு காரியம் பண்ணிட்டு வந்திருக்க? எங்கிருந்து வந்தது இவ்வளவு தைரியம் உனக்கு? அவன் சொல்லிக் கொடுத்தானா? போன வாரம் பொண்ணு பார்த்துட்டுப் போனவங்களுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்? அப்பா சரின்னு தலைய ஆட்டிட்டு இன்னிக்கு என் பொண்ணு இன்னொருத்தன் கூட ஓடிப் போய்த்  தாலி கட்டிட்டு வந்து நிக்குறானு சொல்ல முடியுமா? உன்ன சொல்லிக் குத்தமில்ல. தாயில்லாப் பிள்ளைன்னு செல்லம் கொடுத்த வளர்த்த என்ன தான் செருப்பால அடிக்கணும்..." நேற்று நடந்தது போல் காதில் ஒலித்தது.

சம்பந்தமே இல்லாமல் அம்மாவின் முகம் நினைவிற்கு வந்து அழுகை மூட்டியது.

பேருந்து நிறுத்தம் வந்துவிட்டது. இறங்கி உடையைச் சரிசெய்து கொண்டேன். பூ அதுக்குள்ளே கசங்கி விட்டிருந்தது.

"மாமா எப்படி இருக்கார்?"

"ம் ம்.. நல்ல இருக்கார்" கேட்டுக் கொண்டே பக்கத்தில் நடந்து வந்தவனின் முகத்தைப் பார்க்காமல் பதில் கூறினேன்.

"அக்டிவா என்ன ஆச்சு?"

"ஏதோ ப்ராப்ளெம். ஸ்டார்ட் ஆகல"

"ஒரு மொபைல் வாங்கி தரவா?"

" வேண்டாம்... ரொம்ப தேடும். இன்னும் ரெண்டு மாசம் தான? அதுக்கு அப்புறம் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிருவல்ல?" வார்த்தை தொண்டையில் சிக்கிக் கொண்டது.

"வேலை போஸ்டிங் டேட்டுக்கு ஒரு பத்து நாள் முன்னாடி நீ என்கூட வந்திருவ. சரியா? அப்புறம் நம்ப ரெண்டு பேர் மட்டும் தான் சென்னைக்குப் போறோம். சென்னையில வீடு செட் ஆயிருச்சு. பயப்படாம இரு. ரொம்ப படிக்காத. வீட்டுல இருந்து சமையல் பண்றதுக்கு இவ்வளவு தேவையில்ல" சொன்னவனைப் பார்த்துக் கோபமாய் முறைக்க முயன்றேன்.

"வரலடி.. விட்டுரு.." என்று கண் சிமிட்டிக்கொண்டே சொன்னவனை அடிக்க வந்த கைகளை அடக்கிக் கொண்டு உதட்டில் வந்த சிரிப்பையும் அடக்கிக் கடித்துக் கொண்டு வேகமாக நடந்தேன்.. எனது வகுப்பை நோக்கி.
*
*

13 comments:

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அன்பிற்கினிய சுபத்ரா .......,

பத்தோடு பதினொன்றாக ஒரு பதிவர் என்றுதான் உண்மையில் நினைத்தேன்.
இந்த கதையை படிக்கும்போது நன்றாக எழுதிக்கொண்டிருக்கும் பதிவர்களில் நீங்களும் இணைந்து விட்டீர்கள்.
தொடருங்கள்.

கதை சுவையாக உள்ளது.

நன்றி..
மரங்களோடு மனிதம் வளர்ப்போம்...
அன்புடன்.ச.ரமேஷ்.

தனி காட்டு ராஜா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

//சுபத்ரா பேசுறேன்..//

பேசுறேன்னு சொல்லிட்டு இப்படி எழுதரீங்களே...

பொதுவாக பொண்ணுக சாப்பிடாம கூட இருந்துருவாங்க...........பேசாம இருக்க முடியாதாமே ?
பேசுங்க ...பேசுங்க ...பேசிகிட்டே இருங்க....

Jackiesekar said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

கதையின் கடைசி வரிகள் வரலடி விட்டுரு என்று சொன்னதில் அவர்கள் அன்னியோன்யம் படிக்க சந்தோஷமாக இருந்தது...

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

//இந்த கதையை படிக்கும்போது நன்றாக எழுதிக்கொண்டிருக்கும் பதிவர்களில் நீங்களும் இணைந்து விட்டீர்கள்.
தொடருங்கள்.

கதை சுவையாக உள்ளது.

நன்றி..
மரங்களோடு மனிதம் வளர்ப்போம்...
அன்புடன்.ச.ரமேஷ்//

நன்றி ரமேஷ்!! தொடர்ந்து வாங்க..

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

//தனி காட்டு ராஜா said...

//சுபத்ரா பேசுறேன்..//

பேசுறேன்னு சொல்லிட்டு இப்படி எழுதரீங்களே...

பொதுவாக பொண்ணுக சாப்பிடாம கூட இருந்துருவாங்க...........பேசாம இருக்க முடியாதாமே ?
பேசுங்க ...பேசுங்க ...பேசிகிட்டே இருங்க....//

நீங்க கொஞ்ச நேரம் பேசாம இருங்க. நான் நன்றி சொல்ல வேண்டாமா?? அதுக்குத் தான்.

நன்றி நண்பா :-)

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

//ஜாக்கி சேகர் said...

கதையின் கடைசி வரிகள் வரலடி விட்டுரு என்று சொன்னதில் அவர்கள் அன்னியோன்யம் படிக்க சந்தோஷமாக இருந்தது...//

நன்றி ஜாக்கி சேகர்.. எனக்கும் ”ஜாக்கி சான்”-னா உயிர்.

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

nice one

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

//பனங்காட்டு நரி said...

nice one//

Thank You பனங்காட்டு நரி!!

dheva said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ஒரு கதையின் ஒட்டத்தோடு இழுத்துப் பிடித்து நிறுத்தி...........

ஒரு மெல்லிய வலியை பரப்பி வாழ்வின் எதார்த்தத்தை திணிக்கும் இயல்பான நடையில் கதையை புனைந்ததின் பின்புலத்தில் இருக்கும் சுடர்மிகும் அறிவின் வீச்சுக்கள் என்னவென்று அறிய முடிகிற்து.

நிறைய எழுதுங்கள்.....

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ தேவா

நன்றி தேவா...

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

உங்கள் எழுத்துகள் மிகவும் அருமை மற்றும் அழகு, ஒரு குளுமையான காதல் கதை, இந்த கதையை நான் கற்பனை செய்து பார்த்தேன், தூங்கும் முன் இந்த கதை படித்த எனக்கு மிஞ்சியது புன்னகை மற்றும் ஒரு இனிய கனவு.

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@Anonymous

அனானியாக வந்து பாராட்டிச் சென்றமைக்கு மிக்க நன்றி!

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Jillindru Oru Kaadhal :)