வெற்றுச் சன்னதிகளும் சிதைந்த சிலைகளும்
Jun 21, 2013
இன்று ‘The Hindu’ நாளிதழின் ‘Friday Review’ செய்தித்தாளில் தஞ்சாவூர் பெருவுடையார்க் கோயில் (பிருகதீஸ்வர் கோயில்) பற்றிய ஒரு கட்டுரை வந்துள்ளது.
சோழர்களின் பிரம்மாண்ட ஆட்சிக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தஞ்சை பெரிய கோயில் ராஜ ராஜ சோழனால் (ஆட்சி: 985 CE முதல் 1014 CE வரை) கட்டப்பட்டது. தற்போது ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அக்கோவிலின் ‘அஷ்ட திக்கு பாலகர்கள்’ சன்னதிகளில் புதிய சிலைகளை நிறுவக் கோருகிறது அக்கட்டுரை. அதை எழுதியவர் வழக்கறிஞர் வி. சந்திரசேகர். நுகர்வோர் உரிமைகள் ஆர்வலரான அவர் இதுவரை தமிழ்நாட்டின் பல கோயில்கள் சம்பந்தமான வழக்குகளில் தோன்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அஷ்டதிக்கு பாலகர்கள் சன்னதிகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக விமானத்தோடு ஆகம, சில்ப மற்றும் வாஸ்து சாஸ்திரத்தின்படி கட்டப்பட்டிருக்கின்றன. கிழக்கிலிருந்து தொடங்கி இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன் மற்றும் ஈசானன் ஆகிய எட்டுச் சன்னதிகளையும் எட்டுத் திசைகளில் நிறுவியுள்ளார் ராஜ ராஜ சோழர். தஞ்சைப் பெரிய கோவிலின் உள்ளேயே அமைந்திருக்கும் இச்சன்னதிகளில் தற்போது அக்னி, வருணன், வாயு மற்றும் ஈசானன் ஆகிய நான்கு சன்னதிகளில் தான் சிலைகள் உள்ளன. அவையும் சிதைந்த நிலையில். அவற்றுக்கும் தினமும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மீதி நான்கு சன்னதிகளும் (இந்திரன், எமன், நிருதி, குபேரன்) சிலைகள் இல்லாமல் வெறுமையாக உள்ளன.
பொதுவாக இந்து சமய முறைப்படி உடைந்த சிலைகளை வைத்து யாரும் வழிபடுவதில்லையாம். எனவே சிலைகள் காணாமல் போன இடங்களிலும் உடைந்த சிலைகளை எடுத்துவிட்டும் புதிய சிலைகளை நிறுவக்கோருகின்றார். அஷ்டதிக்கு பாலகர்கள் ஒவ்வொருவருக்கும் தனியே ‘பண்’ இருப்பதால் அவற்றைப் பாடி வழிபடுவதற்கும் வழி ஏற்படும் எனவும் கூறுகிறார். ராஜராஜ சோழன் இக்கோயிலைக் கட்டிய பிறகு மேலும் பல புதிய சன்னதிகளையும் கட்டமைப்புகளையும் அதன் பின் வந்தவர்கள் ஏற்படுத்தியுள்ளார்கள். புதிதாக விநாயகர் சன்னதி நிறுவியது, முதலில் இருந்த நந்தி நீக்கப்பட்டு நாயக்கர் காலத்தில் புதிய பெரிய நந்தியை வைத்தது போன்றவற்றை மாற்றங்களுக்கு உதாரணம் காட்டும் அவர், முதலில் இருந்த நந்தி தற்போது பூஜை ஏதுமின்றி பிரகாரத்தில் சும்மா வைக்கப்பட்டிருப்பதையும் சொல்லிக்காட்டுகிறார்.
தஞ்சைப் பெருவுடையார்க் கோயில், (Archaelogical Survey of
India) மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் The Ancient Monuments and Archaelogical Sites and Remains (Amendment
and Validation) Act, 2010 சட்டத்தின்படி பாதுகாக்கப்படுகிறது. அவர்களிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, “உடைந்த அல்லது பழுதுபட்ட சின்னங்களைச் சரி செய்யலாம். ஆனால் புதிய சிலைகளையோ கட்டமைப்புகளையோ உட்புகுத்தமுடியாது. முன்னர் ராஜராஜனின் திருவுருவச் சிலையை உள்ளே நிறுவுவதற்குத் தடை விதித்தது நினைவிருக்கலாம். இவ்வாறு புதிய கட்டமைப்புகளை ஏற்படுத்தினால் கோயிலின் தொன்மை பாதிக்கப்பட்டுவிடும். அஃதோடு இதே போல புது சிலைகளை நிறுவக்கோரி நாடுமுழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்துவிடும். அதுமட்டுமல்லாமல், 2010 சட்டத்தின் பிரிவு 30-இன்படி பாதுகாக்கப்பட்ட கோயில்களில் புதிதாகச் சிலைகளை நிறுவுவதோ, மாற்றுவதோ, அழிப்பதோ தண்டிக்கப்படும் (இரண்டு ஆண்டுகள் சிறை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம்) குற்றமாகும் என்று வழக்கம் போல ‘status quo should be
maintained’ என்று சொல்லிவிட்டார்கள்.
நமது தொன்மைக்குச் சான்றாக விளங்கும் இது போன்ற antique சின்னங்களில் நமது தேவைக்கும் விருப்பத்துக்கும் ஏற்றவாறு மாற்றங்கள் செய்யக் கோருவதை விட்டுவிட்டு இருக்கின்ற சின்னங்களைப் பத்திரமாகப் பாதுகாக்க ஒத்துழைப்போமே?
“கிடக்கிறது கிடக்கட்டும்.. கிழவிய தூக்கி மனையில வை”னு பழமொழி சொல்வாங்கள்லா.. அதுதான் ஞாபகத்துக்கு வருது :)
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
அதே அதே... ஞாபகம் வருகிறது...!
யாருங்க அவரு, CASE கிடைகல அதணால எதவது case போடரது,
இண்னும் கொஞ்ச்ச நாளுக்கு அப்புறம் அவறுக்கே சிலை வைக்க சொல்லுவார்,
இது கண்டிக்கதக்கது
அட, இது என்னங்க கொடுமை! உயர்ந்து நிற்கும் வரலாற்றுச் சின்னத்தைப் போற்றிக் காப்பதை விட்டுவிட்டு புதியதாக எதுவும் எதற்கு? தொன்மை குன்றாமல் காப்போம்! சம்பந்தப்பட்டவர் இதை உணர்ந்தால் நலம்!
வரலாற்றுச் சுவடுகளை மறக்க இயலாது என்பார்கள். அதில் முக்கிய பங்கு வகிப்பது தஞ்சை பெரிய கோயில். பெருமை மிகு தமிழர்களின் வராலாற்று புராதானச் சின்னமாக விளங்கும் தஞ்சை பெரிய கோயிலின் சிறப்புக்களை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு வருங்கால செந்தமிழர்களின் நன்றிக் கடன் பட்டவர்கள் ஆவார்கள்.
தொடரட்டும் இந்தத் தமிழ்த்தொண்டு...
வாழ்த்துகின்றேன் இந்தத் தமிழ்த்தொண்டன்.
நன்றி
Post a Comment